கிழக்கில் குடிமன்னர் கேடிலா தாரை, * அழிப்பான் நனைந்திட்டு அவ் வாழி அதனால், * விழிக்கும் அளவிலே வேரறுத்தானை, * குழற்கு அணியாகக் குழல் வாராய் அக் காக்காய் * கோவிந்தன் தன் குழல் வாராய் அக் காக்காய்.
பெரியாழ்வார் திருமொழி 2.5.6
கிருஷ்ணனின் கிருபையால் ஒரு குறையும் இல்லாத இந்திராதிகளை அழிப்பதாக நினைத்த ப்ராக்ஜ்யோதிஷபுர மக்கள் (கிழக்கில் குடி இருப்பவர்கள்) நரக்காசுரன் முதலானவர்களை ஒரு நிமிஷ பொழுதில், (கண் மூடி திறப்பதற்குள்), திருவாழியினால் வேர் அறுத்து போகும் படி செய்தவனுடைய திருக்குழலுக்கு அலங்காரமாக குழல் வார வாராய்; பசு மேய்ப்பவனுடைய சிறந்த குழலை வாராய் காக்காய் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.
கிழக்கு திசையில், வர பல புஜ பலத்தால் நமக்கு ஒரு கேடு இல்லை என்று நினத்து இருக்கும் நரகாசுரன் மற்றும் அந்த திசையில் உள்ள எல்லா மன்னர்களையும் ஒரு நொடியில், கருதுமிடம் பொருதும், (திருவாய்மொழி 10.6.8) சக்கரத்தாழ்வானை கொண்டு முற்றும் (மறுகிளை உருவாகாதவாறு) அழித்தவனான கோவிந்தனின் அழகிய கூந்தலுக்கு அழகு சேர்க்கும்படி குழல் வார வருக என்று அழைக்கும் பாடல். சக்கரத்தாழ்வான் விரோதிகளை அழிப்பதில் எம்பெருமானைக் காட்டிலும் மிகவும் முயற்சி செய்யும் ஏற்றதத்தை உடைய ஆழியானுக்கு ‘அறமுயலாழி‘ (திருவாய்மொழி 5.1.6 மற்றும் 2.10,5 ) என்ற சிறப்பு உண்டு.
Leave a comment