பூணித் தொழுவினில் புக்குப் புழுதி அளைந்த பொன்மேனி, * காணப் பெரிதும் உகப்பன் ஆகிலும் கண்டார் பழிப்பர், * நாண் எத்தனையும் இலாதாய், நப்பின்னை காணில் சிரிக்கும், * மாணிக்கமே என் மணியே மஞ்சனமாட நீ வாராய்.
பெரியாழ்வார் திருமொழி 2.4.9
பசுக்களை அடைத்து திறந்து விடும் தொழுவிலே நீ புகுந்து, புழுதியை அளைந்த உன் திருமேனியை, (நீராட்டி காண்பதை விட), பொன்னில் புழுதி படர்ந்த உன் திருமேனியை காண்பதற்கு மிகவும் விரும்பி இருப்பேன்; நான் அப்படி உகந்து இருந்தாலும், உன்னை பார்த்தவர்கள், (‘ஒருத்தி பிள்ளை பெற்று வளர்த்ததை காண்’ என்று என்னை) ஏசுவார்கள்; சற்றேனும் (துளி கூட) வெட்கம் இல்லாதவனே, நப்பின்னை ஆனவள் உன உடம்பை கண்டால் சிரிப்பாள் ; (ஆதலால்) எனக்கு மாணிக்கம் போன்றவேனே, மணி போன்றவனே, மஞ்சனம் ஆட வாராய் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.
நாட்டில் உள்ளவர்கள் பழிக்கு அஞ்சுகிறோமோ இல்லையோ, நப்பின்னையின் கேலி சிரிப்பிற்கு வெட்கம் அடைய மாட்டாயோ என்கிறாள். வடிவழகிற்கு ஒன்று மட்டும் உதாரணம் போதாது என்று, மாணிக்கமே, மணியே என்று பலவற்றை சொல்கிறாள். இப்படிபட்ட வடிவழகு உள்ள திருமேனியில் வந்தேறியான புழுதி மற்றும் அழுக்கு போக திருமஞ்சனம் செய்ய வர வேண்டும் என்கிறாள்;
நீ மாட்டுத் தொழுவத்தில் புகுந்து புழுதி அளைந்து அழுக்கு உடம்புடனே இருந்தாலும், உனது மேனி பொன்னுக்குப் புழுதி ஏறினால் போல் இருந்தாலும் அதைக் காண்பது எனக்கு மிகவும் விருப்பமே, என்றாலும் ‘இவள் பிள்ளை வளர்ப்பது அழகாயிருக்கிறது!’ என்று கண்டவர்கள் எல்லாரும் என்னைப் பார்த்து சிரிப்பார்களே, தவிரவும், நப்பின்னையும் உன்னைப் பரிஹாஸம் செய்வாள். ஆகையால் உடனே நீராட வர வேண்டும் என்கிறார்.
Leave a comment