ஏடு நிலத்தில் இடுவதன் முன்னம் வந்து எங்கள் குழாம் புகுந்து, * கூடு மனம் உடையீர்கள் வரம் பொழி வந்து ஒல்லைக் கூடுமினோ, * நாடும் நகரமும் நன்கறிய நமோ நாராயணா என்று, * பாடு மனமுடைப்பத் தருள்ளீர் வந்து பல்லாண்டு கூறுமினே
பெரியாழ்வார் திருமொழி 1.1.4
திருப்பல்லாண்டு 4
பொல்லாங்கான நிலத்தில் (உங்களை) சேர்ப்பதற்கு முன் (உங்கள் கூட்டத்தில் இருந்து) வந்து, எங்கள் கோஷ்டியிலே புகுந்து, கூடுவோம் என்னும் நினைவு உள்ளவார்களில் (ஆத்மாவை மட்டும் அனுபவித்து என்னும்) வரம்பை விட்டு வந்து விரைவாக (எங்கள் கோஷ்டியில்) கூடுங்கள்; நாட்டுப் புறங்களில் உள்ள சாமான்யர்களும் நகரத்தில் உள்ள அறிவாளிகளும் நன்றாக அறியும்படி நமோ நாராயணய என்று அஷ்டாக்ஷர மந்திரத்தை அனுசந்தித்து (பரீதிக்கு போக்கு விட்டு) பாடக் கூடிய நினைவுள்ள பக்தியை உடையவர்களாகில் வந்து திருப்பல்லாண்டு பாடுங்கள் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.
சென்ற பாடலில் பகவத் லாபார்த்திகளை அழைத்தார். இந்த பாடலில் ஆத்மாநுபவத்தையே விரும்பியிருக்கும் கைவல்யார்த்திகளைக் மங்களாசாஸனத்திற்கு அழைக்கிறார். சென்ற பாட்டில் ‘கூழாட்பட்டவர்களை‘ (ஐஸ்வர்யார்த்திகள்) விலக்கியதை போலே இவர்களையும் விலக்கி இருக்கலாம், ஆனால், கைவல்யமாகிற ஆத்ம அநுபவத்துக்காக எம்பெருமானைச் சரணம் அடைந்தார்களே என்றதாலும், அவர்கள் மோக்ஷ லோகம் போய் சேர்ந்து விட்டாலும், பகவத் சம்பந்தத்தை இழந்து விடுவார்களே என்ற துர்கதியை எண்ணி, அவர்களையும் உடனே திருத்திக் கொண்டு அவர்களையும் அழைத்து, இந்த குழுவில் சேர்க்க முயற்சிக்கிறார்.
கூடு மனம் உடையீர்கள் வரம் பொழி வந்து ஒல்லைக் கூடுமினோ என்பதை காண்போம். ஆழ்வாரின் கோஷ்டியில் சேர்வதற்கு என்ன அதிகாரம் வேண்டும் என்று கேட்டு, கூட வேண்டும்/புக வேண்டும் என்ற மனம் இருந்தால் போதும் என்கிறார். கூட நினைப்பவர்கள் செய்ய வேண்டியது, முன்பு நின்ற சிறுமையை குலைத்து வர வேண்டும் என்கிறார். சர்வேஸ்வரனுக்கு அருகில் இருந்து அவனுடைய ஸ்வரூப ரூப குணங்களை அனுபவிக்க வேண்டும் என்ற ஆசை உடையவனாதல் என்கிறார். ‘ஜரா மரண மோக்ஷாய மாமா ஸ்ரித்ய யதந்தி யே * தே ப்ரஹ்ம தத்விது : க்ருத்ஸ் நமத்யாத்மம் கர்ம சாகிலம்‘ (கீதை 7.29), அதாவது,
வயோதிகம் , மரணம் என்பவை நீங்கி ஆத்ம ஸ்வரூபத்தைக்
காண்பதற்காக எவர்கள் என்னை அடைந்து முயற்சிக்கிறார்களோ,
அவர்கள் ‘பிரம்மம்’ எனப்படும் ஆத்ம ஸ்வரூபத்தையும், ‘அத்யாத்மம்’ எனப்படும் பிரக்ருதி முழுவதையும், பிரஜோத்பத்தி ஆகிற கர்மம் முழுவதையும் அறிகிறார்கள், என்பது இங்கே மேற்கோள் காட்டப் படுகிறது. சுவா அனுபவத்தில் ஓரு வரம்பை இட்டு கொண்டவர்களே, அதை அழித்து வாருங்கள் என்கிறார்.
நமோ நாராயணா என்று சொல்வது, தன் ஸ்வரூபத்தை உள்ளபடி அறிந்து, கைங்கரியத்தை பெற வேண்டும் வேண்டி வைஷ்ணவனாய் இந்த கோஷ்டிக்குள் வர வேண்டும் என்கிறார்.
பாடு மனமுடைப்பத் தருள்ளீர் வந்து பல்லாண்டு கூறுமினே என்று கூறுவது, மனதால் நினைத்து இருப்பது மட்டும் போதாது என்றும், பரீத்திக்கு போக்கு இது தான் என்னும்படி பாடுவோம் என்ற பிரேமம் உள்ள நெஞ்சோடு பாடவேண்டும் என்கிறார். உங்களுடைய வளர்ச்சி விசேஷமும் பெற வேண்டும் என்று பல்லாண்டு பாடுங்கள் என்கிறார்.
Leave a comment