அடியோமோடும் நின்னோடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு, * வடிவாய் நின் வல மார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு, * வடிவார் சோதி வலத்துறையும் சுடராழியும் பல்லாண்டு. * படைபோர் புக்கு முழங்கும் அப்பாஞ்சசன்னியமும் பல்லாண்டே
பெரியாழ்வார் திருமொழி (1.1.2)
திருப்பல்லாண்டு 2
தேவரீரும் உங்களுக்கு சேவை செய்யும் அடியவர்களாகிய நாங்களும் பற்பல ஆண்டுகள் பிரியாமல் க்ஷேமமாக இருக்க வேண்டும் என்றும், பெரிய பிராட்டியாரும் தேவரீரும் சேர்ந்து பற்பல ஆண்டுகள் க்ஷேமமாக இருக்க வேண்டும் என்றும், சக்கரத்தாழ்வானும், திருச்சங்காழ்வானும் குறையொன்றும் இல்லாமல் பற்பல ஆண்டுகள் க்ஷேமமாக இருக்க வேண்டும் என்றும் பாடுகிறார்.
தாசரான எங்களோடும், ஸ்வாமியான உன்னோடும், பிரிவில்லாமல் இருக்கும் சம்பந்தம் எந்நாளும் நித்யமாய் செல்ல வேண்டும். அழகே உருவெடுத்தவளாய், சர்வ ஆபரண பூஷிதையுமாய் வலது திருமார்பில் நித்ய வாசம் செய்கிற நங்கை, ஸ்ரீத்ரீத்வத்தில் பரிபூரணமானவள்; நித்ய இளமையை உடையவள், (உம் என்று சொல்வதால் பூமி, நீளா தேவிகளும் காப்பிடப்படுகிறார்கள்) நித்யமாக கூடி இருக்க வேண்டும். பகவானுடைய திவ்ய சரீரத்தையும் சூழும் ஒளி உடைய உன் வலது திருக்கையில் நித்ய வாசம் பண்ணுகிற எதிரிகளை எரிக்கும் சக்கரத்தாழ்வானும், சாஸ்வதமாய் சேர்ந்து இருக்க வேண்டும்; ஆயுதமாய் போரிலே புகுந்து சப்தம் செய்யும் அந்த பாஞ்ச ஜன்யம் என்று பெயர் பெற்ற சங்கமும் நித்யமாய் இருக்க வேண்டும் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.
பிரிவின்றி என்று சொல்வது இரண்டும் சேர்ந்து இருப்பது நித்யமாக இருப்பது பாதி என்றும், இரண்டிற்கும் சம்பந்தம் நித்யமாக இருப்பது பாதி என்று சொல்கிறார். பல்லாண்டு என்று சொல்வதால் கால தத்வம் உள்ளதனையும் இந்த சம்பந்தம் நித்யமாய் செல்ல வேண்டும் என்கிறார். ‘நாள் தோறும் என்னுடைய, ஆக்கையுள்ளும் ஆவி உள்ளும் அல் புறத்தின் உள்ளும், நீக்கம் இன்றி எங்கும் நின்றாய்‘ (திருவாய்மொழி 4.7.6)ல் சொல்லியபடி ஜீவாத்மா பரமாத்மா சம்பந்தம் நித்யமாய் இருப்பதைச் சொல்கிறது.
உண்டான அமங்களங்கள் போவதற்கும், இல்லாத மங்களங்கள் உண்டாவதற்கும் தன் கடாக்ஷமே காரணமாக அமைந்திருக்கிற இவள் ‘அகலகில்லேன் இறையும்’ (திருவாய்மொழி 6.10.10) என்று நம்மை பிரியமாட்டாதே இருக்க நமக்கு வருவது ஓரு அமங்களம் உண்டோ என்று எம்பெருமான் திருவுள்ளம் பற்ற, தேவரீரும் பிராட்டியுமான சேர்த்தி நித்யமாய் செல்ல வேண்டும் என்று மங்களாசாசனம் செய்கிறார். வடிவு என்றது இவளுடைய சேர்த்தியினால் எம்பெருமான் திருமேனிக்கு வந்த நிறம் மற்றும் அழகை சொல்கிறது. மாரிசன் ராமாயணத்தில் ‘அப்ரமேயம் ஹி தத்தேஜோ யஸ்ய ஸா ஜநகாத்மஜா. * ந த்வஂ ஸமர்தஸ்தாஂ ஹர்துஂ ராமசாபாஷ்ரயஂ வநே৷৷ (ஆரண்ய காண்டம் 37.18) என்று சொல்வது, அதாவது ஜனகராஜன் திருமகளை எனக்கென இட்டு பிறந்த தத்வத்தோடு எதிரிட்டு வெல்ல நினைக்கிறாயோ ‘ என்ற மேற்கோள் சொல்லப்பட்டது உள்ளது.
இந்த சேர்த்திக்கு ஒன்றும் நேராது இருக்க இரு புறமும் கல் மதிள் இட்டார் போல இருக்கிற சக்கரத்தாழ்வாரையும் சங்கத்தாழ்வாரையும் பாரும் என்று திருவுள்ளம் பற்ற, அவர்களுக்கு என்ன வந்திடுமோ என்று அவைகளுக்கும் பல்லாண்டு பாடுகிறார். ஆழியும் என்றது, ஆயுத காரணத்தாலே பாதுகாப்பும், ஆபரண புத்தியாலே அவனையும் குறித்து மங்களாசாசனம் செய்கிறார்.
படைபோர் புக்கு முழங்கும் என்றது தன் திருக்கரத்தை விட்டு விலகாது சப்தத்தினாலே எதிரிகளை அழிக்கச் செய்வது என்கிறார். அந்த சப்தமே அவன் இருக்கும் இடத்தை அறிவிக்குமோ என்று ஆழ்வார் பயந்து அதற்கும் பல்லாண்டு பாடுகிறார்.
இந்த முதல் இரண்டு பாடல்களும் சேர்ந்து திருமந்திரமாகிறது என்கிறார். ‘அடியோமோடும்‘ என்பது, பிரணவ அர்த்ததை சொல்கிறது. பல்லாண்டு என்ற முக்கிய வார்த்தையால், ‘நம’ சப்த அர்த்தம் சொல்லப்படுகிறது. ‘மல்லாண்ட திண் தோள் மணிவண்ணா’ என்பதால், அந்த பாட்டில், விக்ரக யோகத்தையும், சௌரிய வீரிய குண யோகத்தையும் இரண்டாம் பாட்டில் ‘அடியோம், மங்கை, ஆழி, அப்பாஞ்சன்னியம் சொல்வதால், உபய வீபுதி யோகத்தையும் சொல்வதால், நாராயண சப்த அர்த்தம் சொல்வதாயிற்று என்கிறார்.
Leave a comment