திவ்ய பிரபந்தம்

Home

TVM 8.4.10 அமர்ந்த நாதன்

திருவாய்மொழி 8.4.10

பொருந்திய தலைவனை, அவர்கள் அவர்களாகி அவர்களுக்கு விருப்பமானவற்றை கொடுக்கின்ற அம்மானை, பொருந்திய குளிர்ந்த வயல்கள் சூழ்ந்த திருச்செங்குன்றூரில் திருச்சிற்றாறங்கரையில் எழுந்து அருளி இருக்கின்றவனை, பொருந்திய புகழை உடைய மூவாயிரம் பிராமணர்களுடைய தேசமாய், பூ தேவர்களான வைஷ்ணவர்களுடைய வாழச்சிக்கு உரியதாய் இருக்கும் திருச்செங்குன்றூரில் எழுந்து அருளி இருக்கின்ற ஆச்சரியமான குணங்களையும் செயல்களையும் உடையவனை சிவபெருமானுக்கும் பிரமனுக்கும் அந்தர்யாமியாய் உள்ள எம்பெருமானைப் பொருந்த பெற்றேன் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.

அமர்ந்த நாதனை அவர் அவராகி அவர்க்கு அருள் அருளும் அம்மானை முக்கண் அம்மானை நான்முகனை ஆற்றங்கரையானை அமர்ந்த மாயோனை அமர்ந்தேன் என முடிக்க. சர்வேஸ்வரனாய் வைத்து எல்லாப் பொருள்கட்கும் பற்றப்படுமவன் ஆகைக்காக திருச்செங்குன்றூரில் நின்று அருளினவனை அனுபவிக்கப் பெற்றேன் என்கிறார்.

அமர்ந்த நாதன் என்றது, எந்த நாதனால் மூன்று உலகங்களும் நல்ல நாதனை உடையன என்று ஆகுமோ அதன்படியான நாதன் என்கிறார். மூன்று உலகங்களையும் காத்து அருளிய பின்னரும், இன்னும் காக்க வேண்டியவை பற்றி துடிக்கின்ற துடிப்பு இருக்குமவன் என்கிறார்.

அவர் அவராகி என்றது யாசகம் கேட்பவர்கள் (இரவலர்) கிடைக்கும் போது, தங்களுக்கு தாங்கள் அபிமானியாய், நல்லவராய் இருப்பது போல இவனும் அவர்களுக்கு அபிமானியாய் நல்லவனாய் இருக்கிறான் என்பது ஓரு பொருள். அவர்கள் இரவலர் ஆகும் போது, இவனும் இரவலர் ஆகிறான் எனபது இரண்டாவது பொருள்; அதாவது, அவர்கள் இது நமக்கு வேண்டும் என்று இருப்பது போல, இவனும் இது அவர்களுக்கு வேண்டும் என்று நினைக்கிறான். அவர்களுக்கு பெறுகையில் விருப்பம்; இவனுக்கோ கொடுக்க கொடுக்க அவர்கள் கொள்ளுவதைப் பார்க்க விருப்பம் என்கிறார். பெற்றோம் என்ற உவகை அவர்களுக்கு; கொடுக்கப் பெற்றோம் என்ற உவகை இவனுக்கு.

அவர்க்கு அருள் அருளும் என்பது அவர்களுக்கு அவர்கள் விரும்பியதைக் கொடுப்பது தன் பேறாகாக் கருதுபவன். கொள்ளுபவர்களுடைய இரப்பை தானும் உடையவனாக கொடுப்பது என்கிறார். அந்த ஸ்ரீராமன் பிரார்த்திக்கின்ற எல்லோரையும் கண்டு அருகில் சென்று அவர்களுக்கு ஆனந்ததை உண்டாக்கியதை, இராமாயணத்தில், ‘அத மத்யம கக்ஷ்யாயம் ஸமாகம்ய ஸுஹரிஜ்ஜநைஃ. * ஸ ஸர்வாந் அர்திநக : தரிஷ்ட்வா ஸமேத்ய ப்ரதிநந்த்ய ச৷৷ (அயோத்யா 16.27) என்ற ஸ்லோகத்தில் இருந்து மேற்கோள் காட்டுகிறார். (மனிதர்களில் சிறந்தவரான ராமர், தனது நண்பர்கள் அனைவரையும் நடு முற்றத்தில் சந்தித்தார். அவர்கள் அனைவரும் தன்னைப் பார்க்க ஆவலுடன் இருப்பதைக் கண்ட அவர், அவர்களை அணுகி வரவேற்றார் என்பது இந்த ஸ்லோகத்தின் பொருள்)

அம்மானை என்று சொல்லுவது, எல்லாம் நிறைந்தவன் என்றும் சம்பந்தத்தை உடையவன் என்றும் கூறலாம். எல்லாம் நிறைந்து இருப்பதால் தான் விரும்பிவர்கள் விரும்பியவற்றை அருள முடிகிறது என்றும் சம்பந்தம் இருப்பதால் தான் தன் பேறாக கொடுக்கிறான் என்றும் சொல்கிறார்.

அமர்ந்த நாதன் என்றும் அமர்ந்த சீர் மூவாயிரவர் என்றும் ஒருபடச் சொல்வது சேஷியாம் தன்மைக்கு தக்க இருப்பதைச் சொல்கிறது. மூவாயிரம் அளவு மட்டும் இல்லாமல், வேதியர்கள் வாழும் ஊர் என்கிறார்.

முக்கண் அம்மானை நான்முகனை அமர்ந்தேனே என்று சொல்வது சிவன், பிரமன் இவர்களுக்கும் நிர்வாககன் என்று சொல்வது; அவர்களுக்கும் அந்தராத்மாவாக இருப்பவனை என்று சொல்வது. விஷ்ணு புராணத்தில் சொல்லியபடி, பூதங்கள் எல்லாம் விஷ்ணு, உலகங்கள் எல்லாம் விஷ்ணு, வானங்கள் எல்லாம் விஷ்ணு என்று சொல்லி முடிப்பது ‘அமர்ந்தேனே‘ என்பதில் விளங்கும்.

Leave a comment