படைப்பொடு கெடுப்புக் காப்பவன் பிரம பரம்பரன் சிவபெருமான் அவனே, * இடைப்புக்கு ஓர் உருவும் ஒழிவில்லை அவனே புகழ்வில்லை யாவையும் தானே, * கொடைப்பெரும் புகழார் இனையர் தன்னானார் கூரிய விச்சையோடு ஓழுக்கம், * நடைப்பலி இயற்கைத் திருச்செங்குன்றூரில் திருச்சிற்றாறு அமர்ந்த நாதனே.
திருவாய்மொழி 8.4.9
கூர்மை பொருந்திய கல்வியோடு அனுஷ்டானமும் நாடோறும் செய்யப் படுகின்ற திருவாராதனமும் ஆகிய இவைகள் இயல்பாகவே அமைந்தவர்களான கொடையால் அமைந்த பெரிய புகழோடு கூடியவர்களும் ‘இன்னார்’ என்று பிரசித்தமானவர்களும் ஈஸ்வரனாகிய தன்னை ஒத்த ஞானம் சக்தி முதலியவற்றை உடையவர்களுமான ஸ்ரீ வைஷ்ணவர்கள் வசிக்கின்ற திருச்செங்குன்னூரில் திருச்சிற்றாரில் எழுந்து அருளி இருக்கின்ற சர்வேஸ்வரன் படைத்தல் அழித்தல் காத்தல் ஆகிய முத்தொழில்களை செய்கிறவனும் ஆவான்; பிரமனாகிய மேலானவனும் சிவபிரானும் ஆவான். பிரமனுக்கும் சிவனுக்கும் நடுவே காப்பாற்றுகின்றவனாய் புகுந்து ஒரு பொருளையும் விட்டு நீங்காமல் எல்லாப் பொருள்களிலும் அந்தர்யாமியாய் இருப்பவனும் ஆவான். எல்லாப் பொருள்களும் தன் அதீனமாய் இருக்கப் பெற்றவனும் ஆவான்; நான் கூறுவது புனைந்துரை அல்ல என்பது இந்த பாடலின் பொழிப்புரை.
பிரமன் முதலான எல்லாப் பொருள்களினுடைய படைத்தல் முதலானவைகளைச் செய்கின்றவன் திருச்செங்குன்னூரில் நின்று அருளினவன் என்னும் இடம்; புனைந்துரை அல்ல, மெய் என்கிறார்.
படைத்தல் அழித்தல் காத்தல் இவை எல்லாம் தன் உரிமையாக உடையவன் என்கிறார். மனிதர்களைக் காட்டிலும் இந்திரன் முதலானவர்களுக்கு உண்டான ஏற்றம் போல, அந்த இந்திரன் முதலியவர்களுக்கு உண்டான ஏற்றம் உடையவனான பிரமானாகிற பரனில் பரன். சிவனும் இவன் இட்ட வழக்கு. சேதனம் அசேதனம் என்னும் ஓறு வேறுபாடு இல்லாமல் அவனுக்கு உரிமை ஆகும். இதில் புனைந்துரை இல்லை. இப்படி எல்லாம் தனக்கு உரிமைப்பட்டவை என்னும்படி இருக்கிறவன் திருச்சிற்றாறு அமர்ந்த நாதன் என்கிறார்.
அவ்வூரில் உள்ளார் கொடையால் வந்த பெரும் புகழை உடையவர்கள். எதிரிகளையும் கொடையாலே வசீகரிக்க வல்லவராய் இருப்பது. கொடையாலே வசீகரித்தல் தாழ்வு என்பதால், தானம், சாமம் மற்றும் பெரும்புகழாவது ஞானத்தை கொடுத்ததால் உண்டாகும் புகழ் என்று சொல்கிறார். இராமாயணத்தில், ‘ விதேஷேஷ்வபி விஜ்ஞாதா ஸ்ஸர்வதோ புத்தி நிஷ்சயாத் ৷৷ ஸந்தி விக்ரஹ தத்த்வஜ்ஞா: ப்ரகரித்யா ஸம்பதாந்விதா: (பாலகாண்டம் 7.15), அதாவது, அவர்கள் மூத்தவர்களிடமிருந்து நல்லொழுக்கங்களை உள்வாங்கிக் கொண்டனர். அவர்கள் ஆற்றலில் பெயர் பெற்றவர்கள். அனைத்து விஷயங்களிலும் தங்கள் அறிவுத்திறனால் வழிநடத்தப்பட்டனர். அவர்கள் எல்லா இடங்களிலும் நன்கு அறியப்பட்டிருந்தனர். அமைதி அல்லது போரின் உண்மையான தன்மையை அமைச்சர்கள் இயல்பாகவே நன்கு அறிந்திருந்தனர். அவர்கள் செல்வந்தர்களாகவும், ரகசியத்தைக் காப்பதில் திறமையானவர்களாகவும், (எந்த முடிவையும் எடுப்பதற்கு முன்) விஷயங்களைப் புரிந்துகொள்வதில் கூர்மையானவர்களாகவும் இருந்தனர். அவர்கள் நெறிமுறைகள் மற்றும் அறநெறி அறிவியலில் நிபுணர்களாக இருந்தனர். அவர்கள் எப்போதும் இனிமையான வார்த்தைகளைப் பேசினர் என்பதும் உரையாசிரியர் குறிப்பிடுகிறார். இதனால் அவர்கள் எல்லா தேசத்திலும் பிரசித்தமாக இருந்தார்கள் என்றும் பகைவர்கள் தேசத்திலும் பிரசித்தமாக இருந்தார்கள் என்றும், பகைவர்கள் அங்கு சென்றால் மீள முடியாது என்றும் கூறுகிறார்.
நல்ல ஞானமும் அதனோடு கூடிய ஆசாரங்களும் என்பதை கூரிய விச்சையோடு ஓழுக்கம், என்பதால் சொல்கிறார். எதிர்களை அறிந்து திட்டமிட தேவையான ஞானமும் எதிரிகள் நலிய இடமான ஒழுக்க கேடு இல்லாமல் இருப்பதையும் சொல்கிறார். அகலிகை விஷயத்தில் இந்திரன் கருவினை கலைப்பதற்கு ஒழுக்ககேடு தான் காரணம் என்கிறார்.
சர்வேஸ்வரன் படைப்போடு கெடுப்பு காப்பவன் என்பதை திருச்செங்குன்றூரில் திருச்சிற்றாறு அமர்ந்த நாதன் என்று சொல்லி முடிக்கிறார்.
Leave a comment