திவ்ய பிரபந்தம்

Home

TVM 8.4.7 திருச்செங்குன்றூரில்

திருவாய்மொழி 8.4.7

திருச்செங்குன்றூரில் திருச்சிற்றாறு அதனுள் கண்ட அந்த சுவாமி, எப்போதும் அழகிய சிவந்த தாமரை போன்ற திருக்கண்களும் சிவந்த திருவாயும் சிவந்த திருவடியும் சிவந்த திருக்கைகளும் அழகிய சிவந்த திரு உந்தித் தாமரையும் சிவந்த பெரிய பிராட்டியார் எழுந்து அருளி இருக்கின்ற திருமார்பும் சிவந்த பீதாம்பரமும் அழகிய சிவந்த திருமுடியும் திரு ஆரமும் திவ்ய ஆயுதங்களும் விளங்கும்படியாக என் மனதில் எழுந்து அருளி இருக்கிறான் என்பது இந்த பாடலின் பொழிப்புரை. திருவடி என் சிந்தை உளான் என்கிறார். திருச்செங்குன்றூரில் நின்று அருளின சீர் கொள் சிற்றாயன், தன் அழகோடே மறக்க முடியாதபடி என் நெஞ்சிலே வந்து புகுந்தான் என்கிறார்.

அச்சம் அற்ற இடமான திருச்செங்குன்றூரில் திருச்சிற்றாறு அதனில் காணும்படி நின்ற சுவாமி என்கிறார்.

அழகியதாய் சிவந்து இருப்பதான மலர்த்தி செவ்வி முதலானவற்றாலே தாமரை போல இருக்கிற திருக்கண்கள் என்கிறார்.

திருக்கண்களுக்கு பின் திருவதரத்தை, நோக்கால் பிறந்த முதல் உறவைக் கிரயம் செலுத்திக் கொடுக்கும் புன்முறுவல் என்கிறார்.

புன்முறுவலுக்குத் தோற்று விழும் திருவடிகள் என்கிறார்.

திருவடியில் விழுந்தாரை எடுத்து அணைக்கும் திருக்கைகள் என்கிறார்.

அணைத்தார்க்கு எப்பொழுதும் அனுபவிக்கத் தக்கதாய் அழகுக்கு எல்லையாய் எல்லாப் பொருள்கட்கும் பிறப்பிடம் என்று தோன்றும்படி உள்ள திருநாபி என்கிறார்.

பகவானுடைய சம்பந்தம் இல்லாதார்க்கும் பற்றான பிராட்டிக்கு இருப்பிடம் ஆகையாலே சிவந்த திருமார்பு என்கிறார்.

திருமேனிக்கு பொருத்தமான ஆண் தன்மையைக் குறிக்கும் திருப்பீதாம்பரம் என்கிறார்.

அப்படி திருமேனிக்குப் பொருத்தமான அச்சம் தீரும்படி காப்பதற்கு அறிகுறியான திருமுடி என்கிறார்.

பெரிய வரை மார்வில் பேராரம் பூண்டு ‘ (மூன்றாம் திருவந்தாதி 6.5) என்று சொல்வது போலே திருமார்புக்கு தகுந்த திரு ஆரம் என்கிறார்.

படையும் என்று சொன்னது, காரியங்கள் செய்யும் போது ஆயுதங்களாவும், அனுபவிக்கும் போது ஆபரணமாகவும் இருக்கும் திவ்ய ஆயுதங்கள் என்கிறார். ‘தாமரை இதழ்கள் போன்ற கண்களுடன், வளராத தாடியுடன், தலையில் முடிச்சுப் போட்ட ஒற்றை ஆடையுடன், வில் ஏந்தி, தங்கச் சங்கிலியுடன், தனது சொந்தப் பளபளப்புடன் பிரகாசித்த அழகான ராமர், இளம் சந்திரனைப் போலத் தோன்றி தண்டகாரண்யத்தின் மகிமையை மேம்படுத்தினார்’ என்று ஸ்ரீராமயணத்தில் சொல்லும் ‘ஷோபயந் தண்டகாரண்யஂ தீப்தேந ஸ்வேந தேஜஸா. * அதரிஷ்யத ததோ ராமோ பாலசந்த்ர இவோதிதஃ৷৷ (ஆரண்ய காண்டம் 38.15) என்ற ஸ்லோகம் மேற்கோள் சொல்லப்பட்டு உள்ளது.

அவன் என்றும் என் சிந்தையில் இருப்பதால் அச்சத்திற்கு ஒதுங்க இடம் இல்லை என்று முடிக்கிறார்.

Leave a comment