திவ்ய பிரபந்தம்

Home

TVM 8.4.6 எனக்கு நல் அரணை

எனக்கு நல்லரணை எனதாருயிரை இமையவர் தந்தை தாய் தன்னை, * தனக்கு தன் தன்மை அறிவு அரியானைத் தடங்கடல் பள்ளி யம்மானை, * மனக்கொள் சீர் மூவாயிரவர் வண் சிவனும் அயனும் தானும் ஓப்பார்வாழ், * கனக்கொள் திண் மாடத் திருச்செங்குன்றூரில் திருச்சிற்றாறு அதனுள் கண்டேனே.

திருவாய்மொழி 8.4.6

எனக்குச் சிறந்த புகலிடமானவனை, எனக்கு அரிய உயிராய் இருப்பவனை, நித்யசூரிகளுக்கு தந்தையாயும் தாயாயும் இருக்கின்றவனை, தனக்கும் தன்னுடைய தன்மையை அறிதற்கு அரியவனை, விரிந்த திருபாற்கடலில் அறிதுயில் செய்கின்றவனை, ஞான வளப்பத்தை உடைய சிவபிரானையும் பிரமனையும் தனையும் ஒப்பவர்களாகிய மனத்திலே கொள்ளப்பட்ட கல்யாண குணங்களை உடையவர்களான மூவாயிரம் அந்தணர்கள் வாழ்கின்ற செறிவைக் கொண்டு உள்ளஅ வலிய மாடங்கள் சூழ்ந்த திருச் செங்குன்றூரில் திருச்சிற்றாற்றில் கண்டேன் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.

அம்மானை திருச்சிற்றாற்றில் கண்டேன் என்றும் ஒப்பாராகிய மூவாயிரவர் வாழ் திருச்செங்குன்றூர் என்றும் கூறுகிறார்.

நித்யசூரிகளுக்கு எல்லா விதமான உறவுமாய், பிரமன் முதலியவர்களுக்கு அடையபடுமவனாய்க் கொண்டு திருப்பார்க்கடலில் திருக் கண் வளர்ந்து அருளுகிற இவனை, தனக்கு என் வருகிறதோ என்று அஞ்ச வேண்டாதபடி அச்சம் அற்ற திருச் செங்குன்றூரிலில் காணப்பெற்றேன் என்கிறார்.

தன் பக்கம் மனத்தினை வைத்தாரை அச்சம் அற்று இருக்கும்படி செய்கிற அரண் என்பதை எனக்கு நல் அரணை என்கிறார்.

இமையவர் தந்தை தாய் தன்னை என்றது ‘சூழ்ந்து இருந்து ஏத்துவர் பல்லாண்டே‘ என்பது போல நித்யசூரிகளுக்கு எல்லா உறவும் என்கிறார்.

திருப்பாற்கடலில் கண் வளர்ந்த அருளுவதற்கு மூன்று காரணங்கள் சொல்கிறார். ஸ்வேதத் தீபத்தில் வசிக்கின்றவர்கள் பற்றுவதற்கும் மது கைடபர் முதலியவர்களை அழிப்பதற்கும், பிரமன் முதலியவர்கள் பரிகைக்கும் தான் என்கிறார்.

மனக்கொள் சீர் மூவாயிரவர் என்றது பகவத் குணங்களை மனதில் கொண்டு இந்த குணாதிகனுக்கு என் வருகிறதோ என்று சந்தேகப் படுவார்கள். இந்த மூவாயிரம் பிராமணர்களும் ஆழ்வார் கோஷ்டியில் ஆனார்கள். இதற்கு இன்னொரு உதாரணம் சொல்கிறார். பரத்வாஜ முனிவர், ஸ்ரீ ராமபிரான் தன்னை பிரிந்த நாள் முதல், இராவணனை கொன்று மீளும் வரையில், இவர்களுக்கு என்ன வருகின்றதோ என்று இதனையே நினத்துக் கொண்டு இருந்தவர் அன்றோ என்கிறார். ‘பூர்ணே சதுர்தஶே வர்ஷே பஞ்சம்யாம் லக்ஷ்மணாக்ரஜः । * பரத்வாஜா ஶ்ரமம் ப்ராப்ய வவந்தே நியதோ முநிம் ।। (யுத்த காண்டம் 127.1)

வண் சிவனும் அயனும் தானும் ஓப்பார்வாழ், என்று சொன்னது, மூவர் செய்யும் காரியங்களையும் தான் ஒருவரே செய்ய வல்லவராய் இருப்பவர்கள் வாழும் என்கிறார்.

திருச்செங்குன்றூரில் திருச்சிற்றாறு அதனுள் கண்டேனே. என்று சொன்னது அஞ்சின தேசத்தில் அச்சம் நீங்கினார் போல, ஸம்ஸாரத்திற்குள்ளே பயம் அற்ற தேசம் என்கிறார்.

Leave a comment