அல்லதோர் அரணும் அவனில் வேறில்லை அது பொருளாகிலும், அவனை * அல்லது என் ஆவி அமர்ந்து அணைகில்லாது ஆதலால் அவன் உறைகின்ற, * நல்ல நான்மறையோர் வேள்வியுள் மடுத்த நறும்புகை விசும்பொளி மறைக்கும், * நல்ல நீள் மாடத் திருச்செங்குன்றூரில் திருச்சிற்றாறு எனக்கு நல் அரணே.
திருவாய்மொழி 8.4.5
மற்றைய ஒப்பற்ற திவ்ய தேசங்களில் எழுந்து அருளி இருக்கின்றவனும் அவனைக் காட்டிலும் வேறுபட்டவன் அல்லன் என்கிற அதுவே உண்மைப் பொருள் ஆனாலும் திருச்சிற்றாற்று எம்பெருமானை ஒழிய என் உயிரானது வேறு ஒருவனைப் பொருந்தி விரும்ப மாட்டாது; ஆகையாலே அவன் எழுந்து அருளி இருக்கின்ற சிறந்த அந்தணர்களால் செய்யப்படுகின்ற யாகங்களிலே அவிர்பாகத்தின் நறுமணம் மிக்க புகையானது ஆகாயத்தின் பிரகாசத்தை மறைக்கின்ற சிறந்த நீண்ட மாடங்களை உடைய திருச்செங்குன்றூரில் திருச்சிற்றாறு எனக்கு சிறந்த புகலிடமாகும் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.
‘பொருள் அது’ என்று மாற்றுக, ‘அவன் உறைகின்ற இடம் திருச்செங்குன்றூர்’ என்று கூட்டுக. ‘மறைக்கும் மாடம் திருச் செங்குன்றூர்’ என்று சொல்க என்கிறார்.
அவனை * அல்லது என் ஆவி அமர்ந்து அணைகில்லாது என்பதனை எடுத்துக் கொண்டு கீழ்க்கண்டவாறு அவதாரிகை அருளிச் செய்கிறார். உகந்து அருளின திவ்ய தேசங்கள் பல இருக்கையில் திருச்செங்குன்றூரில் நீர் மிக்க விருப்பதை செலுத்தி வற்புறுத்துவதற்கு காரணம் என்ன என்று திருவுள்ளம் கொள்ள அது அங்கே இருந்த போதும் திருச்செங்குன்றூரில் அல்லது என் மனமானது சேர்ந்து அணையாது என்கிறார்.
அல்லதோர் அரணும் அவனில் வேறில்லை அது பொருளாகிலும், என்றது அவன் அல்லாத இடங்களும் அவனுக்கு புறம்பாக இருப்பதில்லை என்பதே உண்மை பொருள் என்கிறார்.
அல்லது என் ஆவி அமர்ந்து அணைகில்லாது என்று சொன்னது, திருச் செங்குன்றூரில் நின்று அருளினவனை அல்லது என் மனமானது சேர்ந்து அணையாது; ஸ்ரீவைகுந்த நாதன், ஈஸ்வரன் அல்லாமையும் சம்பந்தம் இல்லாமையுமோ, திருவடி வேறு ஒன்றனை என் மனம் விரும்புகிறது, இல்லை; அப்படியே இவரும்; அமர்ந்து அணைகை என்றது உள் வெதுப்பு எல்லாமல் பொருந்துகை என்கிறார்.
வேறு ஒரு பிரயோஜனத்தை கருதாத பிராமணர் செய்யும் யாகங்களில் உண்டான அவிர்பாகத்தின் வாசனையோடு கூடிய தூமம் என்று சொல்வதில் வேறு பயன்களை விரும்பாதவர்களாகில் இவர்கள் செய்கிற யாகத்திற்கு பிரயோஜனம் என்று கேட்டு யாகம் செய்வதே பயன் என்றும், பகவானுக்கு விரோதிகளாக உள்ளவர்களை அழியச் செய்யும் வேண்டுகோள் பலமாகும் என்கிறார். அப்படி வேண்டியவர்கள் யாராவது உளரோ என்று கேட்டதற்கு எம்பெருமானார் கிருமி கண்ட சோழன் அழிய திருவேங்கடமுடையானிடம் வேண்டுகோள் விடுத்து அதனை செய்து முடித்த வரலாற்றையும் உரையாசிரியர் சொல்கிறார்.
விசும்பு தன்னில் ஒளியை மறைக்கும் யாகப் புகை என்கிறார்.
Leave a comment