திவ்ய பிரபந்தம்

Home

TVM 8.4.4 பிறிது இல்லை

திருவாய்மொழி 8.4.4

பெரிய மூன்று உலகங்களும் நிறையும்படி பெரிய உருவமாகி நிமிர்ந்த அழகிய வாமனன் ஆன எம்மான், வழிக்கின்ற கடலைக் கடைந்த அழகிய மாணிக்கம் போன்ற வடிவை உடைய என் அம்மான், செறிந்த குலைகளை உடைய வாழைகளும் பாக்கு மரங்களும் தென்னை மரங்களும் அலங்காரமாய் சூழ்ந்து இருக்கின்ற திருசெங்குன்றூர் திருச்சிற்றாறு என்னும் திவ்ய தேசத்தில் வசிக்கின்றவர்கள் உள்ளபடி அறியும்படி உண்மைப் பெருமையோடு நின்ற எம்பெருமான் ஆகிய இறைவனுடைய இரண்டு திருவடிகள் அல்லாமல் மற்று ஒரு பாதுகாவல் இல்லை என்பது இந்த பாடலின் பொழிப்புரை.

அடி இணை அல்லது பிறிது ஒரு அரண் இல்லை என்கிறார். அர்ச்சாவதாரம் பூரணம் ஆகையாலே, ‘மெய்ம்மையே நின்ற என்கிறார்.

மஹாபலியை வென்றும் கடலைக் கடைந்தும் அடியார்களுடைய ஆபத்தைப் போக்கித் திருசெங்குன்றூரில் நின்று அருளினவனின் திருவடிகள் அல்லது வேறு எனக்கு அரண் இல்லை என்கிறார்.

பெரிய மூவுலகும் நிறையப் பேர் உருவமாய் நிமிர்ந்த என்றது பிரம்மலோகம் முடிய ஆகாசத்தின் இட முழுவதும் வளர்ந்த என்கிறது. தொடங்கிய காரியம் வென்ற பரீதியின் மிகுதியால் வளர்ந்தது என்கிறார்.

குறிய மாண் எம்மான் என்றது, வளருகைக்கு உடலாக இருந்த வாமன வேடத்தையும், ‘இரப்பு தன்மையையும்’ (மாண்) காட்டி என்னை அடிமை கொண்டவன் என்கிறார். மகாபலியை வெல்லுகைக்கு கொண்ட வடிவினைக் காட்டி அச்சத்தை போக்கிய எம்பெருமான் என்கிறார்.

குரை கடல் கடைந்த என்று சொல்வதில், கடல் கடைந்த ஆற்றலையும் அழகையும் காட்டி என்னை அடிமை கொண்டவன் என்கிறார்.

செறி குலை வாழை கமுகு தெங்கு அணி சூழ் என்று சொன்னது, செறிந்த குலையை தள்ளிய வாழை கமுகு தெங்கு இவற்றின் திரள்களால் சூழப்பட்ட ஊர் என்றும், ஊரின் சிறப்பும் அரணும் ஒன்றே சேர்ந்து காணப் படுகிறது என்றும் சொல்கிறார். இதனால் விரும்பாதவர்கள் புக முடியாததைச் சொல்கிறார்.

மெய்ம்மையே நின்ற எம் பெருமான் என்றது, ராமயணத்தில் ஸ்ரீ ராமன் சொல்லியபடி, ‘ஆத்மாநம் மாநுஷம் மந்யே ராமம் தஶரதாத்மஜம் (யுத்த காண்டம்.120.11), அதாவது, ‘”நான் தசரதனின் மகன், ஒரு மனிதன், ராமனாக நினைத்துக் கொண்டிருக்கிறேன். ‘ உங்களுக்கு உறவினனாகவே பிறந்து இருக்கிறேன் என்றும் மறைக்க வேண்டாதபடி நின்ற என் சுவாமி என்கிறார்.

Leave a comment