என் அமர் பெருமான் இமையவர் பெருமான் இருநிலம் இடந்த எம் பெருமான், * முன்னை வல் வினைகள் முழுதுடன் மாள என்னை ஆள்கின்ற எம் பெருமான், தென்திசைக் கணி கொள் திருச்செங்குன்றூரில் திருச் சிற்றாறங்கரை மீ பால் * நின்ற எம் பெருமான், அடியல்லால் சரணம் நினைப்பிலும் பிறிதில்லை எனக்கே.
திருவாய்மொழி 8.4.3
எனக்கு பொருந்திய பெருமான், நித்தியசூரிகளுக்குப் பெருமான், பெரிய பூமியை இடந்து கொண்டு வந்த பெருமான், முன்னைய கொடிய தீ வினைகள் முழுவதும் ஒரு நொடிப் பொழிதில் அழியும்படி என்னை ஆள்கின்ற எம்பெருமான், தெற்குத் திசைக்கு அலங்காரமாய் விளங்குகின்ற திருசெங்குன்றூரில் திருச்சிற்றாங்கரையின் மேற்குப் பக்கத்தில் நின்ற திருக்கோலமாய் எழுந்து அருளி இருக்கின்ற எம்பெருமானுடைய திருவடியே அல்லாமல் எனக்கு புகலிடம் நினைவிலும் கூட வேறு ஒன்றும் இல்லை என்பது இந்த பாடலின் பொழிப்புரை.
ஸ்ரீவராகமாய்ப் பிரளயம் கொண்ட பூமியை எடுத்து அருளித் திருசெங்குன்றூரில் நின்றவனுடைய திருவடிகள் அல்லது வேறு புகலிடம் எண்ணத்திலும் கூட எனக்கு இல்லை.
இமையவர் பெருமான் என்பது அயர்வு அறும் அமரர்கள் அதிபதியாய் (திருவாய்மொழி 1.1.1) எனக்கு அமர்ந்த ஸ்வாமியாய் உள்ளான். நித்திய சூரிகள் தனக்குப் பரிவராய் இருக்கிறபடியை காட்டி நான் அஞ்சாதபடி செய்து என்னுடைய அடிமை தன்மையை நிர்வாகித்தவன்.
இருநிலம் இடந்த எம் பெருமான் என்றது, பிரளயம் கொண்ட பெரிய பூமியை எடுத்த தன் ஆற்றலைக் காட்டி என்னை அடிமை கொண்டவன் என்றது. பிரளய சமயத்தில் எல்லோருடைய அச்சத்தையும் போக்கியபடி என் அச்சத்தையும் போக்கினான் என்கிறார்.
முன்னை வல் வினைகள் முழுதுடன் மாள என்னை ஆள்கின்ற எம் பெருமான் என்றது, பழையனவான கர்மங்கள் எல்லாம் சுத்தமாக (வாசனையுடன்) போக்கி என்னை அடிமை கொண்டவன் என்கிறார். மேலும் தன்னுடைய வீர சூர்ய பிரதாபங்களைக் காட்டி என் அச்சத்தை போக்கி என்னை அடிமை கொண்டான் என்கிறார். வல்வினை என்பது, பக்தியினால் வரும் பரவசநிலை என்றும், வரம்பில்லாத ஆற்றல்களை உடைய எம்பெருமான் என்ன வருகின்றதோ என்ற அச்சத்தை பிறப்பித்தது என்றும் கூறிகிறார்.
Leave a comment