திவ்ய பிரபந்தம்

Home

TVM 8.4.2 எங்கள் செல்

திருவாய்மொழி 8.4.2

நாங்கள் சென்று சார்வதற்குப் புகலிடமானவன், எங்களுக்கு அமுதமானவன், நித்ய சூரிகளுக்குத் தலைவன், எனக்குத் தலைவன், நிறைந்து இருக்கின்ற மூன்று உலகங்களையும் படைத்துக் காப்பாற்றி அழிக்கின்ற, பொருந்திய பிரமன், விஷ்ணு சிவன் என்ற மூன்று வகையான உருவத்தை உடையவன், எனக்கு அந்தராத்மாவாக இருப்பவன், சிறந்த கயல் மீன்கள் துள்ளுகின்ற தேன் நிறைந்த மருத நிலங்கள் பக்கங்களில் சூழ்ந்த திருச்செங்குகுன்றூர் திருச் சிற்றாறு என்னும் திவ்ய தேசத்தில் எழுந்து அருளி இருக்கின்ற காரணப் பொருள் ஆனவன் அல்லாமல் எனக்குப் பொருந்திய துணை வேறு யாவர் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.

உலகத்தை படைத்தல் முதலியவற்றில் வல்லவனாய், திருச்செங்குகுன்றூரில் நின்று அருளினவன் அல்லது வேறு எனக்கு நல் துணை இல்லை என்கிறார்.

எங்கள் செல் சார்வு என்பது அனுகூலர்களாய் இருப்பவர்களுக்கு எல்லாம் அஞ்ச வேண்டாத புகல்இடம் என்கிறார். யாமுடை அமுதம் என்பது புகல் மட்டும் அல்லாமல் இனிய பொருள் என்று ஒன்று தேட வேண்டாதாய் அமைந்துள்ளது என்கிறார். ‘எங்கள்’ என்றும் ‘யாம்‘ என்று கூறியது, ‘கேசவன் தமர்க்கு‘ (திருவாய்மொழி 2.7.1) என்று சொல்லியபிறகு தனியாய் இருப்பாரோ என்றும், ‘குன்றம் எடுத்த பிரான் அடியாரொடும், ஒன்றி நின்ற சடகோபன் ‘ (திருவாய்மொழி 7.4.11) ஒன்றி நின்ற சொல் அன்றோ என்றும் உரையாசிரியர் குறிப்பிடுகிறார்.

இமையவர் அப்பன் என் அப்பன் என்று சொல்வது, நிதியசூரிகளை அடிமை கொண்டார் போல தன்னையும் அடிமை கொண்டதைச் சொல்கிறார்.

பொங்கு மூவுலகும் படைத்து அளித்து அழிக்கும் பொருந்து மூவுருவன் என்றது, மூன்று உலகங்களையும் படைத்து, பாதுகாத்து அழிப்பவன் என்ற மூன்று செயல்களை பிரமன், ருத்ரனுக்கு அந்தர்யாமியாக இருந்தும், விஷ்ணு, தானாகவே இருந்து பாதுகாப்பும் செய்து மூன்று உருவம் எடுப்பதைச் சொல்கிறார்.

வன் எம் அருவன் என்றது மற்ற அனைவரின் காரியங்களும் நம் புரிதலுக்கு அப்பாற்பட்டதாக இருக்கும் என்று எனக்கு அறிவித்து, என் அச்சத்தை நீக்கி, எனக்கு தாரகன் அதாவது நம்பிக்கை அளித்தவன் ஆனான். அதாவது விஷ்ணு புராணத்தில் (1.9.36)ல் கூறியபடி, படைத்தல், அழித்தல், காத்தல் என்ற மூன்றுக்கும் காரணமானவனும், தனக்கு ஒரு காரணம் இல்லாதவனும் ஆன சர்வேஸ்வரனை சரண் அடையுங்கள் என்கிறார்.

செங்கயல் உகளும் என்றது, தேசத்தின் செழுமையைக் கூறுகிறது; ‘பரிவர் இலர்’ என்று முன்பே வருந்தி பின்பு ‘வார்காட அருவி’ யாய் இருக்கிறபடி கண்டு பரீதியாகும் படி இல்லாமல், எல்லா பொருட்களும் களித்தே வாழ்கின்ற தேசம் என்கிறார்.

அங்கு அமர்கின்ற என்றது விபவாவதாரங்கள் போல வந்த காரியம் முடிந்தபின் சென்று விடாதே அங்கேயே அமர்ந்து இருக்கின்ற நிலையை சொல்கிறது. ‘ஆதியான்‘ என்றது எல்லா பொருட்களுக்கும் காரணமானவன் என்கிறது. என்னுடைய சத்தைக்கு காரணம் ஆனவன் என்கிறார். குழந்தைக்கு தாய் அருகில் இருப்பதைப் போல தனக்கு அருகில், தன் சத்தையை நோக்கி கொண்டு இருக்கிறான் என்கிறார்.

Leave a comment