வார்கடா அருவி யானை மாமலையின் மருப்பு இணைக் குவடு இறுத்து உருட்டி, * ஊர் கொள் திண் பாகன் உயிர் செகுத்து அரங்கின் மல்லரைக் கொன்று சூழ் பரண் மேல், * போர் கடாவு அரசர் புறக்கிட மாட மீமசைக் கஞ்சனைத் தகர்த்த, * சீர்கொள் சிற்றாயன் திருச்செங்குன்றூரில் திருச்சிற்றாறு எங்கள் செல் சார்வே.
சென்ற பதிகத்தில், சர்வேஸ்வரன் ஸம்ஸாரிகளுடைய விருப்பத்தை மனதில் கொண்டு இங்கு வந்து அவதரித்ததும், அவர்கள் தங்களுக்கு விரும்பியவற்றை மட்டும் அடைவதற்கு இவனை அணுகினார்களே தவிர, இவனிடத்தில் ஒரு பரிவும் இல்லை என்பதையும் அறிந்து அஞ்சினான். அந்த அச்சம் தீரும்படி தம்மிடம் பரிவு காட்டுவது மட்டும் இல்லாமல் தாம் மிடுக்குடன் இருந்தாலும் தன்னை சமாதானம் செய்து பரிவு காட்டுவதை பார்த்தோம்.
இந்த பதிகத்தில் காதல் மையல் ஏறி கலங்கி, முக்தரும் நித்தியரும் இங்கு இல்லை என்றும் தவத்தையும் மனனத்தையும் தியானத்தையும் விடாத சனகர் முதலியவர் இங்கு இல்லை என்றும் பார்க்கடலை கடைந்ததும் தெய்வப் பிறவியில் தான் என்றும் இருந்த போது, ஆழ்வார் எம்பெருமானின் சூர வீர முதலான குணங்களையும் படைத்தல் போன்ற ஆச்சர்யங்களையும், எதிரிகளை வேரோடு அழித்த ஆற்றலையும் காட்டிக் கொடுத்து, மேம்பட்ட ஞானத்தையும் சக்தியையும் உடையவராய் அவன் மேல் பரிவையும் உடைய மூவாயிரம் பிராமணர்கள் உளர் என்றும் சொல்லி அவன் வடிவழகில் நெஞ்சு சென்று அனுபவித்து இனியர் ஆகிறார்.
திருவாய்மொழி 8.4.1
ஒழுகுகின்ற மதமாகின்ற அருவிகளை உடைய யானையாகிய பெரிய மலையின் தந்தங்களாகிய இரண்டு சிகரங்களை முறித்து அதனைக் கீழே தள்ளி, அந்த யானையைச் செலுத்தி வந்த வலிய பாகனுடைய உயிரையும் கவர்ந்து, சபையில் இருந்த மல்லர்களையும் கொன்று, சுற்றிலும் உள்ள மஞ்சத்தின் மேல் இருந்த, போரை செலுத்துகின்ற அரசர்கள் புறமுதுகு காட்டி ஓட, உயர்ந்த மாடத்தின் மேலே இருந்த கஞ்சனைக் கொன்ற சீரைக் கொண்ட பாலனான ஸ்ரீ கிருஷ்ணன் எழுந்து அருளி இருக்கின்ற திருச்செங்குன்றூரில் இருக்கின்ற திருச்சிற்றாறு ஆனது நாங்கள் சென்று அடைவதற்கு புகல்இடம் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.
குவலயாபீடம் முதலான விரோதிகளை அழித்த சீர்கொள் சிற்றாயனுடைய திருச்செங்குன்றூரில் இருக்கின்ற திருச்சிற்றாறு எங்களுக்கு அச்சம் இல்லாத புகல்இடம் என்கிறார்.
வார்கடா அருவி யானை மாமலையின் என்று சொன்னது, புகுவாய் நின்ற போதகம் (பெரிய திருமொழி (6.5.6)ல் சொல்லியபடி, கம்ஸன் அரண்மனையின் உள்ளே நுழைய வேண்டிய வாசலில், மதம் ஏற்றி நிறுத்தப்பட்டு இருந்த குவலயாபீடமென்னும் யானையை சொல்கிறது.
ஊர் கொள் திண் பாகன் என்றது, பயிற்சியின் பலத்தாலே, உயிர் உள்ள பொருளை நடத்துமாறு நடத்த வல்லவன் என்கிறார்.
‘ உயிர் செகுத்து ‘ என்று சொன்னது குவாலயாபீடத்தைக் கொன்று அதன் கொம்புகளை இருவரும் எடுத்துக் கொண்டு சபையின் நடுவே புகுந்து சென்றபோது, அவர்களை எதிர்த்து வந்த முஷ்டிக சாணூரர்களை கொன்று முடித்ததை சொல்கிறார். “பூமிஸ் தஸ்ய ராமஸ்ய ரதஸ் தஸ்ய ச ராக்ஷஸः ।।* ந ஸமம்யுத்தம் இத்யாஹு : தேவ கந்தர்வ கிந்நராः । (யுத்த காண்டம் 103.5)ல் சொல்லியபடி, ‘ராமர் பூமியில் நிற்பதும், ராவணன் தேரில் அமர்ந்து போர் தொடுப்பதும் நியாயமில்லை என்று தேவர்கள், கந்தர்வர்கள் மற்றும் கின்னரர்கள் அறிவித்ததைப் போல அருகில் உள்ள பெண்கள் முதலானவர்கள் அஞ்சிய சமயத்தில் அவர்கள் அச்சம் எல்லாம் போகும் படி வருத்தம் இல்லாமல் மல்லர்களை கொன்றதை சொல்கிறார்.
போர் கடா அரசர் புறக்கிட என்பதற்கு இராமாயணத்தில் இருந்து அரசர்கள் போரினை நடத்தும் ஆற்றலை அருளிச் செய்கிறார். அபியாதா ப்ரஹர்தா ச ஸேநா நய விஷாரதஃ৷৷ என்றும் ‘அப்ரதரிஷ்யஷ்ச ஸங்க்ராமே க்ருத்தைரபி ஸுராஸுரைஃ. (அயோத்தியா காண்டம் 1.29 மற்றும் 1.30) சொல்கிறார். அதாவது ‘அவர் பொறாமையிலிருந்து விடுபட்டவராகவும், அவர் போர் ரதங்களை சிறப்பாக நடத்துபவராகவும், எதிரிகளை நோக்கி முன்னேறி அவர்களைத் தாக்குபவர் என்றும் கருதப்பட்டார். அவர் படைகளை வழிநடத்துவதில் நிபுணத்துவம் பெற்றவர். தனது கோபத்தையும் பெருமையையும் அடக்கியவராகவும் இருந்தார். அவர் ஒருபோதும் தீய எண்ணம் கொண்டவராகவும், எந்த உயிரினத்தையும் அவமதித்தவராகவும் இல்லை, காலத்தின் அழுத்தத்திற்கு அடிபணிந்தவராகவும் இல்லை.’ அப்படிபட்ட அரசர்கள் புறமுதுகு காட்டி ஒடும்படி கண்ணன் போர் புரிந்தான் என்கிறார்.
மாட மீமசைக் கஞ்சனைத் தகர்த்த என்றது உயரமான மாடத்தின் இருந்த கம்சனைச் சொல்கிறது. தமக்கு எத்தனை அச்சம் உண்டு என்பதை உணர்த்தும் வகையில் மாடத்தை உயர்த்தினான் என்கிறார். கஞ்சன் குஞ்சிபிடித் தடித்தபிரான் (பெரிய திருமொழி 3.10.3) என்கிற படியே மயிரைப் பிடித்து கீழே விழவைத்து அலக்ஷியமாக மேலே பாய்ந்து இராஜகிரீடங்களை பறித்து அவனை உடைத்துக் கொன்றான் என்கிறார்.
சீர்கொள் சிற்றாயன் என்றது பருவம் நிரம்பாது இருக்கும் சிறு பிராயத்திலேயே வீர லக்ஷ்மியால் குறைவற்று இருப்பதைச் சொல்கிறார்.
எங்கள் என்றது, மகாராஜர் (சுக்ரீவன்), பெரியாழ்வார், ஸ்ரீ விதுரர், பிள்ளை உறங்காவல்லி தாசர் என்பவர்களை பறிவிற்கு சொல்வார்கள்.
Leave a comment