திவ்ய பிரபந்தம்

Home

TVM 5.9.2 என்றுகொல்

திருவாய்மொழி 5.9.2

என்னை பற்றி அறிந்திருக்கிற நீங்கள் எனக்கு ப்ரியமானவற்றைச் சொல்லி என்னைத் தேற்ற வேண்டியதாயிருக்க, என்னைக் கண்டிப்பதிலே குறியாக இருப்பதால், உங்களுக்கு ஒரு பயனும் இல்லை. நீங்கள் சொல்லும் வழியில் நான் திரும்ப போகிறேன் என்ற எண்ணமா உங்களுக்கு என்றும், அது ஒருநாளும் நடக்காது என்றும் சொல்கிறார். திருவல்லவாழ் நகர் சோலைகளிலிருந்து வீசுகின்ற நறுமணம் மிக்க தென்றலானது என்னை அவ்வழியே இழுக்க நான் நீங்கள் சொல்லும் வழியில் வருவதற்கு சாத்தியம் இல்லை என்கிறார். இந்த திருத்தலத்து எம்பெருமானுடைய திருப் பாதங்களின் தூசியை தன்னுடைய தலை மீது அணியப் பெற வேண்டும் என்று என்னுடைய ஆவல் உள்ளது என்கிறார். அது பற்றி ஏதேனும் சொல்வதானால் சொல்லுங்கள் என்றும் என்னிடம் வீணாக பேசி நலிய வேண்டாம் என்றும் சொல்வதாக அமைந்த பாசுரம்.

பொன் திகழ் புன்னை மகிழ் என்பது, ‘புன்னை பொன்னேய் தாதுதிர்க்கும் புள்ளம் பூதங் குடிதானே‘ (பெரிய திருமொழி 5.1.6), அதாவது, புன்னை மரங்கள் பொன்னிறமான தாதுகளை உதிர்க்கப் பெற்றது போல உள்ளது என்கிறார்.

மீது அணவி என்றது பூவின் மேலே சென்று அங்குள்ள வாசம் எல்லாம் கொண்டு சென்றதை சொல்கிறது. பூவில் கால் படாமல் மேல் எழுந்த பரிமளத்தை மட்டும் கொண்டு சென்றதை சொல்கிறது. இந்த நிலத்தில் உள்ள பொருள்களுக்கு தங்களிடம் இருந்து ஒன்றும் கொடுக்காமல் தான் போகும் வழியில் உள்ளவற்றை எடுத்து செல்வது ஸ்வபாவமோ என்று கேட்கிறார்.

திருவல்ல வாழ் நகருள் என்று சொல்வதில், நோவு பட்டு இருக்கும் தனக்கு, வைகுந்தத்தில் இருப்பது மட்டும் இல்லாமல், திருவல்லவாழ் புகுந்து, அருகாமையில் இருந்து உதவி செய்கிறார் என்ற அர்த்தம் சொல்லப்படுகிறது. சீதை லங்காவில் இருந்த போது இடையில் கடல் இருந்தாலும், ஒரே படுக்கையில் இருப்பது போல், அவள் இருந்த பூமியிலே இருக்க பெற்றோமே என்று ஸ்ரீராமன் சொன்னது போல, காலை பிடித்து, ‘நீ இப்படி செய்ய வேணும்’ என்று இவர் சொல்கிறார் என்று உரையாசிரியர் எழுதி உள்ளார்.

அடியோங் கொண்டு சூடுவதே? என்ற தொடருக்கு இராமயணத்திலிருந்து ஒரு காட்சியை எடுத்து காட்டுகிறார். பரதன், ஸ்ரீராமனின் திருவடிகளை தன் தலையில் சூடிக்கொண்ட போது, சொன்ன வார்த்தைகள், ‘ஸ்ரீராமன் நாட்டிற்கு முடி சூடுவதற்கு லக்ஷணம், அவர் திருவடிகளில் என்றும், பரதன் தன் சேஷத்துவத்திற்கு லக்ஷணம் தன் தலையின் மேலே” என்றும் சொன்னான்.

மாலடி முடி மேல் கோலமாம் குல சேகரன்‘ (பெருமாள் திருமொழி 7.11) என்ற குலசேகரபெருமாள் வார்த்தைகளும், ‘ கோல மாமென் சென்னிக்குன் கமலம் அன்ன குரைகழலே‘ (திருவாய்மொழி 4.3.6) என்ற நம்மாழ்வார் வார்த்தைகளும் இங்கே மேற்கோள் காட்டப்பட்டு உள்ளன.

Leave a comment