திவ்ய பிரபந்தம்

Home

TVM 5.9.1 மானேய்

நம்மாழ்வார் திருக்குடந்தை பதிகம் பாடிய பிறகு, தளர்ந்து, ‘திருவல்லவாழ்’ திவ்ய தேசத்திற்கு செல்ல நினைத்தார். ஆனால் அங்கு செல்ல முடியாமல், சோலைகளும், தென்றலும், வண்டுகளின் இன்னிசையும், வைதீக செயல்களின் ஆரவாரமும், அவரை தடுத்து அவருக்கு துயர் கொடுத்தன. அதனால் ஏற்பட்ட நோவினை ஆழ்வார் இங்கு ஒரு தலைவியாக இருந்து தன் தோழிகளுக்கு கூறும் கூற்றாக கூறுகிறார்.

தோழிகளிடம், திருவல்லவாழ் பெருமானின் திருவடிகளை என்று சென்று சேருவது என்று கேட்கும்படி அமைந்த பாசுரம்.

மானேய் நோக்கு நல்லீர்! – நான் திருவல்லவாழ் சென்று புகும்படி உங்கள் கண்களால் நன்றாக குளிர நோக்குங்கள் என்று ஒரு விளக்கம். மான் போன்ற நோக்கையுடைய பெண்களே, எனக்கு நல்லவர்களே, பிரிவு ஆற்றாமையாலே நோவு பட்டும், சோலை அழகிலே ஈடுபட்டும், உங்களின் இனிமையான வசனங்களால் தளர்ந்தும் இருக்கும் என்னை எம்பெருமானிடம் இருந்து விலக செய்யும் வார்த்தைகளை சொல்லியும், காரியங்களை செய்தும், அவன் மேல் இருக்கும் மோகத்தை அதிகரிக்க செய்யும் நல்லவர்களே என்று சொல்வதாகவும் கொள்ளலாம்.

வைகலும் வினையேன் மெலிய – ஒருகால் மெலிந்து உயிர் தரித்து இருப்பவர்களுக்கு அன்றோ பிரிவு ஆற்றாமை என்பது பொருநதும். திருவடி (ஹனுமான்) சீதா பிராட்டியை சந்தித்து திரும்பிய பின், சீதா பிராட்டியின் மனநிலையை இவளுடன் ஒப்பிடுகிறார். ஒரு நாள் பிரிவு ஆற்றாமையால் மெலிந்து, மிகவும் நோவு பட்டாள் என்கிறார்.

உலக விஷயங்களில் ஈடுபட்டவர்களுக்கு காலம் கழியக் கழிய காதல் கழியும் என்பது போல இல்லாமல், மனனம் செய்து, பாவித்து, தர்சனம் செய்து, அவனை நேரில் கண்டு, அவனுடன் சேர்வது என்று இருப்பவர் அல்லவோ இவர். தன்னை பிரியும்படியான பாவத்தைச் செய்த தான், தினமும் சோகப்பட்டும், இந்த ஒரு நாள் பிரிவினால் பொறுக்க மாட்டாதவள் ஆனாள் என்கிறார். சிறிய கூந்தல் உடையவர்களுக்கும் பேணத்தகும் குழலை உடையவர்களுக்கும் உள்ள வித்தியாசம் என்கிறார். எப்போதும் கண்களால் கண்டு கொண்டு இருக்க தகுந்த கரும் கண்களை உடையவள் என்கிறார். அவன் மடியிலே இருக்க தகுந்தவளை பார்த்து, அந்த இருப்பு இருக்க தகாதவளை கண்டு, நீண்ட நாள் சோகங்களை பார்த்து பழகிய நெஞ்சமே வருந்தும் படி சொல்கிறீர்களே என்கிறார்.

வினையேன் என்று சொன்னது, நாள் செல்லச் செல்ல ஆசை குறையாதபடியான பாவத்தை செய்தேன் என்கிறார்.

மெலிய என்று கூறியது, வானார் வண் கமுகு என்று சொல்லுதல், திருவல்லவாழ் உறை எம்பெருமான் என்னுதல், அந்த ஊரில் உள்ள எம்பெருமான், அசித்து, தாவரங்கள் இப்படி ஒன்றுடனும் இவளை ஒப்பிட முடியாது என்கிறார். இவளே நீர் பண்டமாகி விளைநீர் ஆகிறது என்கிறார். இவள் மெலிய மெலிய, எம்பெருமானும், தாவரங்களும் மெலியாமல் வளர்ந்தன என்கிறார்.

வானார் வண் கமுகும் – அவள் மெலிய மெலிய நீர்ப் பண்டமாய் அழிகிறபடி, இவன் ஒன்றும் ஆகாமல் இருந்தது. அந்த ஊர் சோலைக்கு இவளின் மெலிவு, நீர் ஆகும். வானார் என்றது, அவன் இருக்கும் இடம் குறித்து இவள் நோக்குகையை சொல்வது. கமுகு என்று சொன்னது, கொடி படர்வதற்கு, தன்னையே கொடுக்கும் அவனுடைய ஔதார்யம் சொல்லியது.

குலையார்ந்த பழுக்காயும் பசுங்காயும் பாளைமுத்தும், தலையார்ந்த இளங் கமுகின் தடஞ்சோலை‘ (பெரிய திருமொழி, 6.9.8) என்பது போல இருப்பது என்கிறார்.

மது மல்லிகையுங் கமழும் – மலட்டு கொடியாய் இல்லாமல், மணத்தை பரப்பும் மலராக இருப்பது. மதுவை உடைய மல்லிகை பரிமளம் இவள் இடத்தில் இருந்து வந்தது என்கிறார்.

வண்கமுகுகள், பிரளய காலத்தில் மார்கண்டேய மகரிஷி பட்ட பாடு போல தேன் வெள்ளத்தில் அலைந்தது. இருவரும் மது உண்டு களித்து இருக்க வேண்டிய நேரத்தில், தேன் வெள்ளம் ஓடுகின்ற சோலைகள் சூழ்ந்த திருவல்லவாழில் உறையும் எம்பெருமான் தான் மட்டும் களித்து இருக்க, அவள் மெலிந்துகொண்டு இருக்கிறாள் என்கிறார். பாவியாகிய தான் பிரிவு ஆற்றாமையுடன் இருக்க, சோலைகளும் கவி பாடி அவனைபோல போக்கியமாய் உள்ளன என்கிறாள்.

மனதை விஷயமாக்கி அனுபவிக்க முடியாதவர்கள், கண்ணுக்கு இலக்காக்கி நிற்கிறார் போல, எம்பெருமானும் அடியவர்களுக்கு உகந்த ஒரு திரவியத்தை திருமேனியாக்கி கொண்டு திவ்ய தேசத்தில் எழுந்து அருளி உள்ளார். இங்கு உள்ளவர்களும், தாவரங்களும், மிருகங்களும் அவனை விட மாட்டாதபடி நிற்கிறார்கள் என்கிறார். அதே போல எம்பெருமான் உகந்து அருளின நிலங்களில் உள்ள அனைத்தும் எம்பெருமானும் பிராட்டியாரும் சேர்ந்து உருவாக்குபவை என்றும் பக்தர்களும், நித்யர்களும் முக்தர்களும் அவற்றில் பற்று உடையது போல ஆக்கும் என்றும் சொல்கிறார். ப்ரமாணத்தில் பிறக்கும் பிரபத்தியை போன்றது அல்லவே கண்ணுக்கு நேரே இலக்காவது. கண் அழிவற்றவெளி சிறப்புடையார்க்கு இங்கேயே இருக்கும் என்பதை நல்லான் பட்டர் உரையாடல் மூலம் உணர்த்துகிறார்.

கோனாரை அடியேன் என்று சொன்னது, நாராயண சப்தமும் பிரணவ சப்தத்தையும் ஒன்றோடு ஒன்று சேர்ந்து வருவது போல உள்ளது என்கிறார். கோனார் என்றது நாராயண சப்தத்தையும், அர்த்ததையும், ஈஸ்வர பிரதானத்தையும், மற்றும் அடியேன் என்றது பிரணவ சப்தத்தையும், அர்த்ததையும், ஜீவ பிரதானத்தையும் சொல்கின்றன என்கிறார்.

அடிகூடுவது என்று கொலொ என்று சொன்னது, பொதுவாக இருவருக்கும் சொன்னது. அவன் நாயகன். இவள் தைரியம் இழந்தவள். இருவரும் எப்போதும் ஸ்வரூபம் மாறாதவர்கள். இவள் எப்போதும் அவஸ்தைகளை கொண்டவளாகவே இருக்கிறாள்.

ஆழ்வார், தன் ஸ்வரூபம் மாறாமல் இருக்கிறார் என்பதற்கு,

  • தானாக பாடும் போது, ‘அடி தொழு எழு ‘ என்பார்;
  • உபதேச காலத்தில் ‘திண் கழல் சேர் ‘ என்பார்;
  • தூது விடும் போது, ‘திருவடிக்கீழ் குற்றறேவல்’ என்பார்;
  • பிறருக்கு சொல்ல வேண்டுமானால், ‘தாட்பட்ட தண்டுழாய்த்தாமம் காமுற்றாயே’ என்பார்
  • கலங்கி மடல் எடுக்கும் போது, ‘தலையில் வணங்கவுமாங்கொலோ ‘ என்பார்
  • பித்து பிடித்த மாதிரி இருக்கும் போது, ‘கண்ணன் கழல்கள் விரும்புமே’ என்றும், ‘ஏறின பித்தினோடு எல்லா உலகும் கண்ணன் படைப்பு’

என்று உதாரணங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

Leave a comment