அற்புதன் நாராயணன் அரி வாமனன், * நிற்பது மேவி இருப்பது என் நெஞ்சகம், * நற்புகழ் வேதியர் நான்மறை நின்று அதிர், * கற்பகச் சோலைத் திருக்கடித் தானமே.
திருவாய்மொழி 8.6.10
அற்புதனும் நாராயணனும் அரியும் வாமனனும் ஆன எம்பெருமான் பொருந்தி வீற்று இருப்பது என் நெஞ்சகமாகும். நின்று கொண்டு இருப்பது நல்ல புகழ் நிறைந்த பிராமணர்களுடைய நான்கு வேதங்களும் நிலை பெற்று முழங்கிக் கொண்டு இருக்கின்ற கற்பகச் சோலை சூழ்ந்த திருக்கடித்தானம் என்னும் நகரம் ஆகும் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.
‘மேவி இருப்பது என் நெஞ்சகம்; நிற்பது திருக்கடித்தானம் என்று கொள்ளலாம். என்னை பெறும் வரையில் திருக்கடித்தானத்தில் நின்றான்; என்னை பெற்ற பிறகு நிற்பதும் இருப்பதும் என் நெஞ்சிலே என்கிறார்.
நாராயணன் என்பது தன் உடைமையை விட்டுக் கொடுக்காத வத்சலன், அதாவது அன்பை உடையவன் என்கிறார். அரி என்று சொல்வதால், அடியவர்களின் விரோதிகளை அழிக்கின்ற ஆற்றல் பெற்றவன் என்கிறார்; வாமனன் என்பதால் தன்னை சிறுக விட்டு அடியார்களுடைய விருப்பங்கள் அனைத்தையும் முடிக்குமவன் என்கிறார். அற்புதன் என்பதால், மேற்சொன்னபடி எல்லாம் செய்து ஆச்சரியத்தை உடையவன் என்கிறார்.
சுயம் பிரயோஜனர் என்று இல்லாமல், அநன்யப் பிரயோஜனர் என்னும் புகழை உடைய வைதிகராலே உச்சரிக்கப் படுகின்ற நான்கு வகை வேதங்களும் முழங்கும் கற்பக வனத்தை உடைய திருக்கடித்தானத்தில் அவன் நிற்பது; மேவி இருப்பது என் நெஞ்சகத்தில் என்கிறார்
மேலும், திருக்கடித்தானத்து நாராயணன், அரி, வாமனன் அற்புதன் நிற்பதும், மேவி இருப்பதும் என் நெஞ்சகம் என்றும் கொள்ளலாம்.
Leave a comment