சோலை திருக்கடித்தானத்து உறை திருமாலை, * மதிள் குருகூர்ச் சடகோபன் சொல், * பாலோடு அமுது அன்ன ஆயிரத்தில் இ பத்தும், * மேலை வைகுந்தத்து இருத்தும் வியந்தே.
திருவாய்மொழி 8.6.11
சோலைகள் சூழ்ந்த திருக்கடித் தானத்தில் உறைகின்ற திருமாலை, மதிள்களை உடைய திருக் குருகூரிலே அவதரித்த ஸ்ரீ சடகோபராலே அருளிச் செய்யப்பட்ட பாலையும் அமுதையும் போன்ற ஆயிரம் திருப்பாசுரங்களில் இப்பத்துத் திருப்பாசுரங்களும் எல்லா உலகங்களிலும் மேலே உள்ள பரமபதத்திலே வியக்க இருத்தும் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.
இப்பத்தும் வைகுந்தத்து வியக்க இருத்தும். இந்த பதிகத்தின் முடிவில் இத்திருவாய்மொழி கற்றவர்களை இது, தானே, திருநாட்டிலே கொண்டு போய் விடும் என்கிறார்.
சோலை திருக்கடித்தானத்து உறை திருமாலை, என்பதால், சிரமத்தைப் போக்குவதாய்க் காட்சிக்கு இனியதான சோலைகள் உடைய திருக்கடித்தானத்தில் நித்திய வாசம் செய்கின்ற திருமகள் கேள்வனை சொல்கிறார்.
மதிள் குருகூர் என்பதால் சம்சாரம் காரணமாக உண்டாகின்ற பாவக் கூட்டங்கள் புக முடியாத அரணை உடைய திருநகரி என்கிறார்.
‘ரகுவரசரிதஂ முநிப்ரணீதம்‘ (பாலகாண்டம் 2.43) என்று சொன்னது, ‘வால்மீகி முனிவரால் இயற்றப்பட்ட இந்த ராமர் கதை, கூட்டுச் சொற்கள், மற்றும் அர்த்தமுள்ள சொற்றொடர்களில் இயற்றப்பட்ட வரிகளைக் கொண்டுள்ளது’ என்பதைப் போல, ‘ பாலோடு அமுது அன்ன ஆயிரம்’ என்று சொன்னது, சொற்களின் பொருள் மற்றும் வாசகங்களின் சேர்த்தி என்கிறார். பால் என்றது திருக்கடித்தானத்து திருமாலை ; அமுது என்றது சடகோபன் சொல் என்கிற வாசகத்தை என்று ஆளவந்தார் நிர்வகிப்பார் என்கிறார்
‘மாயக் கூத்தா’ என்ற சென்ற பதிகத்தில் உண்டான விடாய் நடையாடாத தேசத்திலே வைத்து, ஒரு நாளும் பிரியாத அனுபவத்தை கொடுக்கும் என்கிறார்.
Leave a comment