கொண்மின் இடர்கெட உள்ளத்துக் கோவிந்தன், * மண் விண் முழுதும் அளந்த வொண் தாமரை, * மண்ணவர் தாம் தொழ வானவர் தாம் வந்து, * நண்ணு திருக்கடித் தான நகரே.
திருவாய்மொழி 8.6.7
கோவிந்தனுடைய மண்ணுலகம், விண்ணுலகம் முழுவதையும் அளந்த தாமரை போன்ற திருவடிகளை மக்கள் தொழ, நித்திய சூரிகள் வந்து சேரும் படியான, திருக்கடித்தானம் ஆகிற நகரத்தை உங்கள் துன்பம் எல்லாம் நீங்கும்படி மனத்திலே கொள்ளுங்கள் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.
உங்கள் துன்பம் நீங்குவதற்கு ஏத்த வேண்டாம் ; திருக்கடித்தானத்தை நெஞ்சாலே நினைக்க அமையும் என்கிறார். அதாவது இடர்கெட உள்ளத்துக் கொண்மின் என்கிறார்.
கோவிந்தன் என்பது சர்வ சுலபன் என்பதைக் குறிக்கும். ஒரு தாமரைப் பூவைக் கொண்டு பூமியையும் வானுலத்தையும் அளந்து கொண்டது என்கிறார். மண்ணவர் தாம் தொழ என்றது, வலக்கை இடக்கை அறியாதவர், பூமியில் தொழுவது; பரமபதம் நித்திய சூரிகளுக்கே இருப்பதைபோலே, உகந்து அருளின தேசம் ஸம்ஸாரிகளுக்கே என்கிறார்.
இங்கு உள்ளார் அங்கு செல்வது, அவனின் மேன்மையை அனுபவிக்க, அங்கு உள்ளார் இங்கு (திருக்கடித்தானம்) வருவது அவனின் சீல குணத்தை அனுபவிக்க என்கிறார்.
Leave a comment