கூத்த அம்மான் கொடியேன் இடர் முற்றவும், * மாய்த்த அம்மான் மது சூத அம்மான் உறை, * பூத்த பொழில் தண் திருக்கடித் தானத்தை, * ஏத்த நில்லா குறிக் கொண்டமின் இடரே.
திருவாய்மொழி 8.6.6
குடக்கூத்து ஆடிய அம்மானும், கொடியேனுடைய துன்பம் முழுதினையும் அழித்த அம்மானும், மதுசூதனனாகிய அம்மானுமாகிய எம்பெருமான் எழுந்து அருளி இருக்கின்ற, மலர்ந்து இருக்கின்ற சோலைகள் சூழ்ந்த குளிர்ந்த திருக்கடித்தானத்தை துதித்த அளவிலே துன்பம் முழுவதும் நில்லாவாம்; இதனை நினையுங்கள் என்பது இந்த பாடலின் பொழிப்புரை. தம்முடைய மிக்க பிரீதியாலே ‘திருக்கடித்தானத்தை எல்லோரும் அடையுங்கள்’ என்கிறார்.
கூத்தஅம்மான் என்று சொன்னது, எல்லோர் மனங்களையும் கொள்ளை கொள்ளுகின்ற செயல்களை உடைய சர்வேசவரன் என்பதாகும்.
இடர் முற்றவும் என்று சொன்னது, தன்னைப் பிரிந்து தான் பட்ட துன்பங்கள் எல்லாம் வாசனையோடு போக்கிய என் சுவாமி என்பதாகும்.
மதுசூத அம்மான் என்றது, பகைவர்களை அழிக்கும் தன்மையனான சர்வேசவரன் நித்ய வாசம் செய்கின்ற தேசன் என்பதாகும்.
அவன் நித்ய வாசம் செய்வதால் எப்போதும் மலர்களோடு கூடிய பொழில் என்றும், திருவருளாகிய மழை மாறினால் தானே பூக்கள் மாறுவது என்றும் கூறுகிறார்.
இனிமையாக ஏத்தினால் இடர் போகுமோ என்று கேட்டு, இனியதனைச் செய்ய, இடரானது, இது நமக்கு தேசன் அன்று என்று ஓடும் என்றும், இது ஓலக்க வாரத்தை என்று இல்லாமல் புத்தியில் கொள்ள வேண்டும் என்கிறார்.
Leave a comment