கோயில் கொண்டான் தன் திருக்கடித் தானத்தை, * கோயில் கொண்டான் அதனோடும் என் நெஞ்சகம், * கோயில் கொள் தெய்வம் எல்லாம் தொழ, * வைகுந்தம் கோயில் கொண்ட குடக் கூத்து அம்மானே.
திருவாய்மொழி 8.6.5
ஒவ்வொரு கோவிலில் தங்கி இருக்கின்ற தெய்வங்கள் எல்லாம் தொழும்படியாக ஸ்ரீவைகுந்தத்தைக் கோவிலாகக் கொண்ட குடக்கூத்து ஆடிய அம்மான், திருக்கடித்தானத்தைத் தனக்குக் கோவிலாகக் கொண்டான்; திருக்கடித்தானத்தோடு கூட வந்து என் நெஞ்சினைக் கோவிலாக் கொண்டான் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.
ஈட்டு உரையாசிரியர், என் பக்கம் உண்டான மிக்க காதலால் திருக்கடித்தானத்தோடு கூட என் மனதிலே புகுந்து அருளினான் என்கிறார். திருவடி திருவனந்தாழ்வான் மற்றும் சேனை முதலியார் தொழும்படி ஸ்ரீ வைகுந்தத்தை தனக்குக் கோவிலாக் கொண்ட சர்வேசவரன், கிருஷ்ணனாய் அவதரித்த கூட கூத்த அம்மான் என்கிறார். அந்த சிரமம் ஆறும்படி திருக்கடித்தானத்தில் கோவில் கொண்டான். அதனோடு கூட என் மனத்தினை தனக்கு கோவிலாகக் கொண்டான் என்கிறார்.
திருக்கடித்தானத்தில் இருந்தது தன்னை பெறுவதற்காக என்று ஆழ்வார் சொல்லி, அது சாத்தியம் ஆனதால், அந்த சாதனத்தோடு (அந்த திவ்ய தேசத்தோடு) வந்து புகுந்தான் என்கிறார்.
Leave a comment