திவ்ய பிரபந்தம்

Home

TVM 8.6.4 மாயப்பிரான் என

திருவாய்மொழி 8.6.4

திருக்கடித்தானத்தை கோவில் கொண்டான், நேசத்தினால் நெஞ்சம் நாடு குடி கொண்டான் என்பது அவதாரிகை.

ஒளியை உடைய நித்திய சூரிகள் எழுந்து அருளி இருக்கிற வாசனையை உடைய சோலைகள் சூழ்ந்த திருக்கடித்தானத்தை நிலை பெற்ற கோவிலாக் கொண்டு நித்ய வாசம் செய்கின்ற மாயப் பிரான், என்னுடைய கொடிய வினைகள் எல்லாம் வாசனையோடு அழியும்படியாக அன்போடு என் நெஞ்சமாகிய நாட்டினைப் பரம பதத்தைப் போலக் குடி இருப்பாகக் கொண்டான் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.

திருக்கடித்தானத்தைப் பகல் இருக்கை மாத்திரமாகக் கொண்டு, அன்பின் மிகுதியாலே என் மனத்தையே எப்பொழுதும் வசிக்கும் இடமாகக் கொண்டான் என்று ஈடு உரையாசிரியர் சொல்கிறார்.

மாயப்பிரான் என்று சொல்வது, ஆச்சரியமான குணங்களையும் செயல்களையும் உடைய உபகாரகன்;

என் வல்வினை மாய்ந்து அற என்றது சென்ற பாடலில் சொன்ன தன் துயரத்திற்கு தகுதியாக, தன்னை பிரிந்து ஆழ்வார் பட்ட துன்பம் எல்லாம் நசிந்து போகும் படி என்றது. அதே போல சென்ற பதிகத்தில் (மாயக்கூத்தா ) ‘காண வாராய் என்று கண்ணும் வாயும் துவர்ந்து’ என்று பட்ட கஷ்டங்கள் எல்லாம் வாசனையோடு அகலும்படி என்றது.

நெஞ்சம் நாடு என்று சொன்னது கலவியினாலும், பிரிவினாலும் ஒரு பரம பதத்தைப் போல இவர் திரு உள்ளத்தை ஆக்கினான் என்கிறார்.

குடி கொண்டான் என்றது பரிகரங்களோடு நித்ய வாசம் செய்கிறான் என்றது. பெரியாழ்வார் திருமொழி (5.2.10)ல் சொல்லியதை, “அரவத்து அமளியினோடும், அழகிய பாற் கடலோடும், அரவிந்தப் பாவையும் தானும் அகம்படி வந்து புகுந்து” நினைவில் கொள்ளலாம்.

தேசத்து அமரர் திருக்கடித் தானத்தை என்று சொன்னது, நித்ய அனுபவம் கொண்டதால் உண்டான ஜோதி / ஒளி உடைய நித்ய சூரிகள் அடையத்தக்க திருக்கடித்தானத்தை என்கிறார்.

தேசத்து அமரர் திருக்கடித் தானத்தை, நேசத்தினால், நெஞ்சம் நாடு குடி கொண்டான் என்று ரசிக்கலாம்.

Leave a comment