திவ்ய பிரபந்தம்

Home

TVM 8.6.3 ஒருவர் இருவர்

திருவாய்மொழி 8.6.3

ஒருவர் என்னும்படியாகவும், இருவர் என்னும்படியாகவும், ஒரு மூவர் என்னும் படியாகவும் நின்றும், சாரிகை வந்த வேகத்தாலே, கண்களால் காண முடியாதவாறு நின்றும் உருக்கெட வாளி பொழிந்த ஒருவனும், திரு அமர்ந்த மார்பனும், திருக்கடித்தானத்தை மருவி எழுந்து அருளி இருக்கிறான் என்றும் என் மாயப்பிரான் நினைக்கும் தோறும் இனியன் ஆகிறான் என்று சொல்வது இந்த பாடலின் பொழிப்புரை.

கரந்து என்பதை சென்ற பாடலின் ‘பொழிந்த‘ என்பதுடன் சேர்த்து, கரந்து பொழிந்த ஒருவன், திரு அமர் மார்வன்; அவன் திருக்கடித்தானத்தை மருவி உறைகின்ற மாயப்பிரான் ஆவான்; அவன் உள்ளந்தோரும் தித்திப்பான் என்கிறார்.

பிராட்டியோடு திருக்கடித்தானத்திலே நித்திய வாசம் செய்கிற ஆச்சரியத்தை உடையவனான உபகாரகன் நினைக்கும்தோறும் இனியவனாக நின்றான் என்கிறார்.

சென்ற பாசுரத்தில் ‘வாளி பொழிந்தபடி’ என்று சொன்னது எங்கே என்று கேட்டு இங்கே என்று பதிலும் சொல்கிறார். ஒருவர் இருவர் மூவர் என்று தோன்றி செருக்கு எடுத்து அன்று இருந்த அரக்கரை உருக்கெட வாளி பொழிந்த ஒருவன், திருக்கடித்தானமும் என்னுடைய சிந்தையும் உருக்கெடுத்து உள்ளே உறையும் பிரான் கண்டீர் என்று சென்ற பாசுரத்துடன் சேர்த்து அனுபவிக்கலாம். மூல பலத்தை நிர்மூலம் ஆகும்படி ஒருவனாய் தோன்றி, வேகம் மிக மிக, இருவரும், மூவருமாய் தோன்றி, வேகம் அதிகமாகி, இந்திரியம் செயல் படுவதற்கு இடம் இல்லாதபடி வேகமாய், இருக்கிற ரூபம் அரியதாய், உருக்கெட வாளி பொழிந்த ஒருவன் என்று 24 ஆயிரம் படி உரையாயசிரியர் கூறுவது சிறப்பு.

திரு அமர் மார்வன் என்பது குற்றம் செய்யாதவர் யார் என்று கேட்ட பிராட்டியோடு கூட வந்தது கூறியது.

Leave a comment