திவ்ய பிரபந்தம்

Home

TVM 8.6.2 திருக்கடித்தானமும்

திருக்கடித் தானமும் என்னுடைச் சிந்தையும், * ஒருக்கடுத்து உள்ளே உறையும் பிரான் கண்டீர், * செருக்கு எடுத்து அன்று திகைத்த அரக்கரை, * உருக்கெட வாளி பொழிந்த ஒருவனே.

திருவாய்மொழி 8.6.2

அக்காலத்தில் போரிலே சீற்றம் கொண்டு அறிவு மயங்கிய இராவணன் முதலான அரக்கர்களுடைய உருவங்கள் அழியும்படி அமு மழையைப் பொழிந்த ஒருவன், திருக்கடித்தானத்தையும் என்னுடைய மனத்தினையும் ஒன்றாக நினைத்து உள்ளே வாசிக்கின்ற பிரான் ஆவான் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.

என் பக்கம் வருவதற்கு உள்ள தடைகளையும் தானே போக்கி, திருக்கடித்தானத்திலும் என் மனத்திலும் ஒருசேர காதல் கொண்டு என் உள்ளே வசிக்கிறான், என்கிறார்.

அரக்கர்கள் பட்ட பாட்டினை விரோதி பட்டது என்கிறார். போரில் செருக்கு எடுத்து, ஒருவரையும் வணங்கேன் என்று அன்று திகைத்த அரக்கர்களை, சக்ரவர்த்தி திருமகனை வெல்லலாம் என்று நினைத்த மதி கேடர்களான இராக்கதர்களை, சின்னங்களாகவும் பின்னங்களாகவும் அம்புகளால் கொளுத்தப் பட்டவைகளாக அம்பு மழையை பெய்தார் அன்றோ என்று சொல்லி, ஏக வீரன் ஆனவன் என்கிறார்.

இராமாயணத்தில் இராவணன் சொல்வது, “த்விதா பஜ்யேயம் அப்யேவம் நநமேயம் து கஸ் யசித் * ஏஷமே ஸஹஜா தோஷஸ் ஸ்வபாவ துரதிக்ரமः (யுத்த காண்டம் 36.11), அதாவது “நான் என் தலையை இரண்டாக உடைப்பேன், ஆனால் யாருக்கும் என் தலையை குனிய விடமாட்டேன். அது என் பலவீனம். இயற்கையை வெல்வது கடினம்.”

வால்மீகி ‘சிந்நம் பிந்நம் ஶரைர் தக்தம் ப்ரபக்நம் ஶஸ்த்ரபீடிதம் । * பலம் ராமேண தத்ருஶுர்ந ராமம் ஶீக்ரகாரிணம் ।। (யுத்த காண்டம் 94.22) என்கிறார் அதாவது, இராவணனின் சேனை சிதறடிக்கப்பட்டு, துண்டு துண்டாக உடைந்து, இராமரின் ஈட்டிகளால் துன்புறுத்தப்படுவதை அவர்களால் காண முடிந்தது, ஆனால் மிக வேகமாகச் செயல்படும் இராமரைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்பதாகும்.

மீண்டும் வால்மீகி, “ததோ ராமோ மஹா தேஜா தநுராதாய வீர்யவாந் । * த்ருஷ்டவா ராக்ஷஸம் ஸைந்யம் ஶரவர்ஷம் வவர்ஷ ஹ ।। (யுத்த காண்டம் 94.18) என்கிறார். அதாவது, பின்னர், மிகுந்த சக்தியும் வீரமும் கொண்ட இராமர், வில்லை எடுத்துக் கொண்டு, ராட்சசப் படையின் மீது அம்பு மழையைப் பொழிந்தார் என்பதாகும்.

என்னிடத்தே வருகைக்கு இடையூறாக உள்ளவற்றையும் தானே தவிர்த்து, திருக்கடித்தானத்திலும் என்னுடைய ஹ்ருதயத்திலும் ஒருங்கே என்னுள்ளே எழுந்தருளினார். திருக்கடித்தானப்பதியையும் இவருடைய திருவுள்ளத்தையும் ஒன்றாக நினைக்கை, ஸ்ரீவசந பூஷணத்தில்(171) சொல்லியபடி, “அங்குத்தை வாஸம் ஸாதநம், இங்குத்தை வாஸம் ஸாத்யம். என்பது போல ஆகும்.

எம்பெருமான் புராதன திவ்ய தேசங்களில் நெடுநாளாகப் பண்ணிக் கொண்டிருந்த ஆதரத்தைக் குலைத்துக்கொண்டு இன்று தன் ஹ்ருதயத்திலே அளவு கடந்த ஆதரத்தைப் பண்ணிக் கொண்டிருக்கும் படியைக் காணும் ஞானியானவன் “பிரானே! என் உள்ளத்தனுள் புகுந்ததானால் பாலாலயம் போன்றிருந்த திருப்பாற்படல் முதலியவற்றில் உன்னுடைய ஆதரத்தைக் குறைத்துக் கொள்ளக் கூடாது“ என்று எம்பெருமானை நோக்கி பிரார்த்திக்க வேண்டும்படியாக இருக்கும் என்கிறார்.

ஸ்ரீஸூக்திகளின் கருத்தாவது திவ்யதேசங்களிற் காட்டிலும் ஞானிகளின் திருமேனியில் எம்பெருமான் காட்டும் ஆதரம் அளவற்றது, எம்பெருமான் திவ்ய தேசங்களில் எழுந்தருளி இருப்பதானது, தக்க உபாயங்களாலே அடியவரை சேர்த்துக் கொள்வதற்காகவாகும். ஆகையால் திவ்ய தேச வாஸம் ஸாதனம், இந்த அடியவன் திருந்தி இவனுடைய இதயத்திற்குள்ளே தான் வஸிக்கப் பெற்றது, அந்த திவ்யதேச வாஸத்தின் பயனாகையாலே, ஞானிகளிடத்தில் வாஸமே எம்பெருமானுக்கு பரம ப்ரயோஜனம். அந்த பரம பிரயோஜனத்தை கொடுத்த திவ்ய தேசங்களையும், (அர்ச்சை), பரமபதத்தையும், திருப்பாற்கடலையும் ஒன்றாகவே கொண்டு ஒன்றிலும் ஆதரம் குறையாமல் இருக்கிறான் என்கிறார்.

Leave a comment