திவ்ய பிரபந்தம்

Home

TVM 8.6.1 எல்லியும் காலையும்

திருவாய்மொழி 8.6.1

சென்ற ‘மாய கூத்தா’ பதிகத்தில் நம்மாழ்வார் எம்பெருமானை பிரிந்து ஒரு மாதம் கூட உயிர் வாழ மாட்டேன் என்கிறார். ஆனால் எம்பெருமானின் நிலையோ நம்மாழ்வாரை பிரிந்து ஒரு கணம் நேரம் கூட இருக்க மாட்டேன் என்பது ஆகும். இராமாயணத்தில் சீதா சொல்வது, “ஜீவிதம் தாரயிஷ்யாமி மாஸம் தஸரதாத் மஜ. * ஊர்த்வம் மாஸாத் ந ஜீவிஷ்யே ஸத்யேந அஹம் ப்ரவீ மிதே” (சுந்தர காண்டம் 38.67), அதாவது, இன்னும் ஒரு மாதத்திற்கு மேல் உயிர் வாழ மாட்டேன் என்றும் அது சத்தியம் என்றும் இதனை ஸ்ரீ ராமனிடத்தில் சொல்லவும் என்றும் சொல்கிறாள். அதே போல ராமன், “சிரம் ஜீவதி வைதேஹீ யதி மாஸம் தரிஷ்யதி. * ந ஜீவேயம் க்ஷண மபி விநா தாம் அஸி தேக்ஷணாம் (சுந்தர காண்டம் 66.10), அதாவது, ஸ்ரீராமன் (எம்பெருமான்) ஸ்ரீதா தேவியை பிரிந்து ஒரு கணம் கூட உயிர் தரிக்க மாட்டேன் என்கிறார்.

நம்மாழ்வார் சொல்வதைக் கேட்டு எம்பெருமான் தலைகுனிந்து ‘உங்களுடைய வருகையினால் நான் மிகவும் நாணம் அடைந்தேன்’ என்று நாணி, இனி முகத்தை பரீதியுடன் இருக்க வேண்டும் என்று திருக்கடித்தானத்தில் வந்து நின்றதாக சொல்கிறார். இது ராமயணத்தில் ஸ்ரீ ராமன் முனிவர்களை பார்த்து “ப்ரஸீதந்து பவந்தோ மே ஹ்ரீரேஷா ஹி மமாதுலா. * யத் ஈத்ருஸை : அஹம் விப்ரை : உப ஸ்த்தேயை : உபஸ்திதஃ (ஆரண்ய காண்டம் 10.9), உங்களை போன்றவர்கள் என்னிடம் வந்து சொல்வதற்கு முன், நான் உங்களை அடைந்து இருக்க வேண்டும், இது எனக்கு அளவிடமுடியாத அளவிற்கு வெட்கத்தை தருகிறது என்கிறார்.

தன்னுடன் சேர்வதற்கு பிரியம் உள்ளவனாகவும், தன்னுடைய ப்ரீதியை பொறுப்புடன் காண்பித்து, திருக்கடிதானத்தில் எழுந்துயருளி, தம்மிடம் காட்டும் பிரேமத்தை நினைத்து இனியவராய் அதனை பேசி இந்த பதிகத்தில் ஆழ்வார் அனுபவிக்கிறார். சென்ற பதிகத்தில் துக்கம் கொடுத்ததினால், இந்த பதிகத்தில் உஜ்ஜீவனம் அடைந்தவராய் ஆழ்வார் அனுபவிக்கிறார்.

இரவும் பகலும் தன்னையே நினைந்து வாழும்படியாக சிறந்த திருவருளை நமக்கே கொடுத்துக் கிருபை செய்கின்றவனான அல்லியை உடைய அழகு பொருந்திய குளிர்ந்த திருத் துழாய் மாலையை அணிந்த என் தந்தையானவன் எழுந்தருளி இருக்கின்ற நகரம், கைங்கர்ய செல்வத்தை உடைய வைஷ்ணவர்கள் வாழ்கின்ற திருக்கடித்தானம் என்ற திவ்ய தேசம் ஆகும் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.

என்னுடைய துன்பத்தை தீர்த்து அருளுவான் சர்வேஸ்வரன் அவன் ஊர் திருக்கடித்தானம் என்கிறார்.

பகல் இரவு என்று வேறுபாடு இன்றி, எல்லாக் காலத்திற்கும் உபகாரகன் என்கிறார்.

நல்ல அருள்கள் என்பது, என் குற்றத்தை பாராமல், என் அறிவு முழுமை ஆகாததை பாராமல், அவனுக்கு பேறு என்று மகிழ்வுடன் செய்த அருள் என்கிறார்.

நமக்கே என்பதில் உள்ள ஏகாரம், நித்ய சூரிகளும் தான் பெற்ற பேறு பெற்றிலர் என்கிறார்.

இப்படி உபகாரகானானவன் வாழும் திருக்கடித்தானம் நமக்கும் அடையத் தக்க தேசம் என்கிறார். இங்குள்ளவர்கள் அவன் அனுபவத்தோடு காலத்தை கழிக்கிறவர்கள் என்றும், அனுபவம் சம்பத்து ஆகுமோ என்று கேட்டு, லக்ஷ்மணன் கைங்கர்ய லகஷமியை பெற்றான் என்பதை, இராமாயணம், ‘ஸர்வ ப்ரிய கர : தஸ்ய ராமஸ்யாபி ஸரீரத: * லக்ஷ்மணோ லக்ஷ்மி ஸம்பந்நோ பஹி: ப்ராண இவாபர:. (பாலகாண்டம் 18.28) மூலம் காட்டுகிறார்.

Leave a comment