எத்திசையும் அமரர் பணிந்தேத்தும் இருடீகேசன் வலி செய்ய * முத்தன்ன வெண் முறுவற் செய்ய வாயும் முலயும் அழகழிந்தேன் நான் * கொத்தலர் காவில் மணித்தடம் கண் படைகொள்ளும் இளங்குயிலே என் தத்துவனை * வரக் கூகிற்றியாகில் தலையல்லால் கைம் மாறிலேனே
நாச்சியார் திருமொழி 5.6
தான் உயிர் தரிப்பதற்கு மூலக் காரணமான அவன் வரும் வண்ணம் கூவினால், தன் வாழ்நாள் உள்ள அளவும் தன் தலையை அதன் கால்களில் பொருந்தும்படி செய்வதாக ஆண்டாள் இந்த பாடலில் கூறுகிறாள்.
பூங்கொத்துக்கள் மலரும் இடமான சோலையில் அழகான ஒரு இடத்தில் உறங்குகின்ற இளம் குயிலே, எல்லா திசைகளிலும் தேவர்கள் வணங்கி துதிக்கும் படியான பெருமைகள் கொண்ட, காண்பவர்களுடைய இந்திரியங்களை எல்லாம் கொள்ளை கொள்ளுகின்ற எம்பெருமான், என்னை தனக்கு காட்டாமல் முறுக்கு செய்ய, அதனால் நான் முத்து போல வெளுத்த முறுவலும் சிவந்த அதரங்களும் முலைகளையும் உடைய நான், அவை அழகு இழந்து மாறுபட்டேன். நான் உயிரை பிடித்து கொண்டு இருப்பதற்கு காரணமான எம்பெருமானை இங்கே வர சொல்லி கூவினால் என் வாழ் நாள் உள்ள வரையில் என் தலையை உன் காலிலே வைத்து இருப்பது தவிர வேறு ஒரு பிரதி உபகாரம் செய்வது அறியமாட்டேன் என்கிறாள்.
எத்திசையும் அமரர் பணிந்தேத்தும்
எவரையும் பணிந்து பழக்கம் இல்லாத, துர் அகங்காரம் உடைய பிரமன் இந்திரன் சிவன் முதலான தேவர்கள் எம்பெருமானை பார்த்த எல்லா இடங்களிலும், தங்களுடைய அகங்காரங்களை கைவிட்டு, அவன் திருவடிகளில் விழுந்து வணங்கி, அவனுக்கு தோற்று இருப்பது போன்ற ஒரு தோற்றத்தை கொண்டு அவனுக்கு துதி பாடுவார்கள்,
இருடீகேசன் வலி செய்ய
இப்படி அனைவராலும் வணங்கப் படுகின்ற ரிஷிகேசன், என்னுடைய இந்திரியங்கள் எல்லாவற்றையும் அபகரித்து, எனக்கு தன்னை காட்டாமல், என்னை துன்புறுத்தி, இந்திரியங்களை நியமிக்கும் ஈசன்.
முத்தன்ன வெண் முறுவற் செய்ய வாயும் முலயும் அழகழிந்தேன் நான்
இயற்கையிலே அழகுடைய ஸ்தனங்களும் அழகு அழியும் நிலையை நான் அடைந்தேன். என்னுடைய முறுவலும் வாயும் முலைகளும் அவனுக்கே தாரக, போக்கிய, போக விஷயங்களாக இருக்க, அவற்றையும் அழிக்கின்றான். “கதாநுசாருபிம்போஷ்டஂதஸ்யாஃபத்மமிவாநநம் * ஈஷதுந்நம்யபாஸ்யாமிரஸாயநமிவாதுரஃ “ (இராமாயணம், யுத்த காண்டம் 5.13) ’அவளது தாமரை போன்ற திருமுகத்தை நான் எப்போது சற்றே உயர்த்தி கோவைகனி போன்ற அவளது அழகான உதடுகளை ஒரு துன்பப்பட்ட மனிதன், மேலான ரசாயனத்தை உடைய இனிப்பு ரசம் குடிப்பது போல, எப்போது குடிப்பேன் என்று தெரியவில்லை’ என்று ஸ்ரீராமன் சீதையை குறித்து சொல்லியதை மேற்கோள் காட்டி, அதை சொன்னது ஸ்ரீ ராமபிரானே தவிர, சீதை அல்லவே என்று சொல்கிறாள்.
கொத்தலர் காவில் மணித்தடம் கண் படைகொள்ளும் இளங்குயிலே
அழகிய பூக்கள் பூக்கும் சோலையில் உறங்கும் குயிலே, அவனுடைய சொத்துக்கள் இப்படி அழிந்து கொண்டு இருக்கும்போது, அவற்றை பாதுகாக்காமல், கர்வத்துடன் நீ இப்படி உறங்குகிறாயே, நான் இப்படி துன்பப்படும் போது, நீ கவலையின்றி உறங்குவது நியாயமா என்று கேட்கிறாள்.
என் தத்துவனை வரக் கூகிற்றியாகில் தலையல்லால் கைம் மாறிலேனே
தத்வம் என்பது ஸ்வரூப விஷயத்தை குறிப்பது ஆகையால், தத்துவன் என்பது அதற்கு காரணமானவனை குறிக்கிறது. குயில் கூவும் வரை அவன் வராமல் தாமதம் செய்த போதிலும், இவள் அவனிடம் இருந்து பிரிந்த நிலையில் இருக்கும் போதும், இவள் உயிர் தரித்து இருப்பதற்கு, அவனே உண்மையான காரணம் என்பதை இவள் உணர்ந்து இருக்கிறாள். இதற்கு ஒரு ஐதீகம் சொல்லப்படுகிறது.
இராவணன், சீதையிடம் ஒரு மாய சிரஸ்சை காட்டி, ஸ்ரீ இராமன் இறந்தான் என்று ஒரு தோற்றத்தை உருவாக்கிய போது, “சர்வ லோக சக்ரவர்த்தி இந்த சீதையை கை பிடிக்க போகிறான் என்று ஜோதிடர்கள் சொன்ன வார்த்தைகள் பொய்யாக மாறியதே, என்று இந்த உலக சாதாரண பெண்கள் கணவனை இழந்த போது பொய்யாக கண்ணீர் விட்டு அழுவது போல அழுதாளே ஒழிய, சீதை தன் பதிவிரத தன்மைக்கு ஏற்ப கணவன் இறந்தான் என்ற சொல் கேட்டவுடன், உயிர் பிரியாமல், உயிர் தரித்து இருந்தது எப்படி?” என்று நம்பிள்ளை, என்ற ஆச்சாரியார், அவருடைய ஆச்சார்யரான நம்ஜீயரை கேட்க, ‘ஸ்ரீராமன் உயிருடன் இருக்கிறான் என்ற ஞானம் காரணம் இல்லை, ஸ்ரீராமன் உயிருடன் இருந்தான் என்ற சத்தியமே, சீதை உயிருடன் இருந்ததற்கு காரணம் என்று அருளி செய்தார். ஸ்ரீராமன் உயிர் பிரிந்து இருந்தால், இவள் உயிரும் பிரிந்து இருக்கும் என்றும், வெறும் மாய காட்சிகளினால் இவள் உயிர் போகாது என்றும் அருளினார். இங்கே ஆண்டாள், தத்துவன் என்றது, ‘தான் உளனாகில், அவள் உள்ளவளாம் படியாக இருக்கிறேன்’ என்ற இதே கருத்தை உடையதாக உள்ளது.
தலையல்லால் கைம் மாறிலேனே என்பதற்கும் ஒரு ஐதீகம் குறிப்பிடப்பட்டு உள்ளது. இங்கே பெற்றி என்ற ஒரு சிஷ்யன் ஆச்சாரியன் பெருமை பற்றி கூறுவது சிறப்பாக சொல்லபட்டு உள்ளது. ஒருமுறை பெற்றி வெளியூர் சென்ற போது, அவரிடம் ‘தலையல்லால் கைம் மாறிலேனே ‘ என்பதற்கு ஒருவர் அர்த்தம் கேட்டபோது, பெற்றி, ‘நீ அவன் வரும்படி கூவினால் என் தலையை அறுத்து கொடுப்பேன்’ என்று பொருள் கூறினாலும் இது பொருந்த வில்லையே என்ற சந்தேகம் அவருக்கு இருந்தது. ஊர் திரும்பியதும், அவர் நம்பிள்ளை என்ற அவருடைய ஆசாரியனிடம், இதற்கு நம்ஜீயர் என்ன பொருள் கூறுவார் என்று கேட்டார். நம்பிள்ளை, ‘நீ செய்த உபகாரத்திற்கு ஒரு கைமாறு செய்வது இயலாது ஆகையால், என் தலையை உனக்கு உரியதாக்கி எல்லா காலமும் உன் காலிலே வணங்கி வாழ்வேன்’ என்று அருளி செய்வார் என்று கூறினார். இதனை கேட்ட பெற்றி, நம்ஜீயரை கொண்டாடி, தான் அவரிடன் பதினொரு முறை திருவாய்மொழி விளக்கம் கேட்டதாகவும், மற்ற திருமொழிகளுக்கு விளக்கம் கேட்டவில்லை எனவும், பிறர் கேட்கும் போது, நம்ஜீயர் அருளி செய்த அர்த்தங்கள் தனக்கு தோன்றி, தான் அவற்றை மற்றவர்களுக்கு சொல்ல வேண்டும் என்றும், நம்பிள்ளையிடம் மற்ற திருமொழிகளுக்கு அர்த்தம் சொல்லி தர வேண்டினார். அவரும் அப்படியே அருளினார். அவைகளை கேட்ட பெற்றி, இவை தவம் செய்து பெற முடியாது என்றும், ஆச்சார்யன் ஒருவனிடம் இருந்து கேட்டே அறிய வேண்டும் என்றும் கூறி ஆச்சார்ய பெருமைகளை சொல்வது ஒரு ஐதீகம்.
Leave a comment