திவ்ய பிரபந்தம்

Home

NT 5.5 மென்னடை அன்னம்

நாச்சியார் திருமொழி 5.5 

மந்தக தன்மை உடைய அன்ன பறவைகள், எங்கும் பரவி, விளையாடுவதற்கு இருப்பிடமான ஸ்ரீவில்லிபுத்தூரில் எழுந்து அருளி இருக்கின்ற எம்பெருமானுடைய அழகிய திருவடிகளை காண்பதற்கு உண்டான ஆசையினால், சண்டை இடும் இரண்டு கெண்டை மீன்கள் போன்ற கண்கள் தூங்குவது இல்லை. ஓ குயிலே, திரிவிக்ரமனாய் உலகங்களை அளந்த எம்பெருமான், இங்கே வரும் படி கூவுவாய், அப்படி கூவினால், இனிய சோற்றையும், பால் அமுதையும், ஊட்டி வளர்க்கப் பெற்ற எனது கிளியை உன்னோடு ஸ்நேகிதத்தை ஏற்படுத்தி கொடுப்பேன் என்கிறாள்.

வடபத்ரசாயியை தான் காண வரும்படி, கூவுவாய் என்று கூறுகிறாள்.

மென்னடை அன்னம் பரந்து விளையாடும் வில்லிபுத்தூர்

ஊர் முழுவதும், அன்னக் கூட்டம் பெருகி உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் என்கிறார். 

வில்லிபுத்தூர்உறைவான் தன் பொன்னடி காண்பதோர் ஆசையினால்

அன்ன மென் இடையாளான ஆண்டாள் அவதரித்த பின்பு பரமபதத்தில் நித்யசூரிகளை கண்டு களித்து இருப்பவன், அதை விட்டு தன்னை போன்ற நடை அழகை உடைய அன்னங்களை கண்டு பொழுது போக்குவதற்கு, அந்த அன்னங்கள் எங்கும் பரவி விளையாடும் ஸ்ரீவில்லிபுத்தூரில் வடபெரும்கோவில் உடையவனாக வாழ்கிறான்.

வடபத்ரசாயின் அழகிய திருவடிகளை காண வேண்டும் என்ற ஒப்பற்ற ஆசையினால் ‘வைகுந்தன் என்பதோர் தோணி பெறாது உழல்கின்றேன் ‘ என்பது பொருந்தும். பரமபதம் கைக்கு எட்டாத தூரத்தில், இருக்கையால், இவளுக்கு காட்சி கொடுப்பதற்காக பள்ளி கொண்டு இருக்கும், வடபெரும் கோவில் உடையானை காண முடியாமல் துன்புற்று கண் உறங்காமல் இருந்தாள் என்பது எப்படி பொருந்தும் என்று நம்பிள்ளை நம்ஜீயரிடம் கேட்டார். கோவிலுக்குள் இவள் சென்றால், இவள் மயங்கி விழுவாள் என்று இவளுடைய உறவினர்கள் இவளை கோவிலுக்கு அழைத்து செல்ல மாட்டார்கள் என்றும், இது ஸ்ரீ ராமனை கண்ட பரதன் மயங்கி விழுந்தது போல ஆகும் என்றும் சொன்னார் என்பது ஐதீகம்.

குழையும் வாள்முகத் தேழையைத் தொலைவில்லி மங்கலம் கொண்டு புக்கு, இழை கொள் சோதிச் செந்தாமரைக்கட் பிரான் இருந்தமை காட்டினீர்‘ (திருவாய்மொழி 6.5.5) ல் சொல்லிய படி, பாராங்குச நாயகியான நம்மாழ்வாரை நோய் வந்த போது, அதற்கு பரிகாரம் செய்ய வேண்டிய தாய்மார்கள் அவளை திருத்தொலைவில்லி மங்கலம் அழைத்து சென்றதாவும் அங்கு எம்பெருமான் வீற்று இருக்கும் அழகையும், அவனுடைய கண் அழகையும் காட்டி, ஆழ்வாரை வெட்டு பட்ட வாழை கன்றை போல, தன்னை மயங்கி விழ செய்து விட்டதாகவும், கோவிலுக்கு அழைத்து சென்று அவனை காட்டி, கெடுத்து விட்டதாகவும் சொல்கிறார் என்பதை மேற்கோள் காட்டப் பட்டது.  

பிறர்க்கு காட்டுவதற்காக வந்து வேண்டுமென்றே கிடக்கிறவனின் , பொன் போன்ற திருவடிகளை காண்பதற்கு ஆசை கொண்ட தான் என்று ஆண்டாள் சொல்கிறாள். ஒன்றுக்கு ஒன்று ஒப்பான கண்கள் இரண்டும் உறங்காமல் அவனை காண துடிக்கின்றன. இந்த கண்ணாகிற அம்பினால் அடிக்கபட்ட அவன் படவேண்டிய பாட்டை இவள் படுகிறாள் என்கிறாள்.

இன் அடிசிலோடு பால் அமுதூட்டி எடுத்த என் கோலக் கிளியை

ஆண்டாள் குயிலை நோக்கி, அதற்கு ஒரு குறை இருப்பதாகவும், அது தனக்கு தெரியும் என்றும், அது தான் இனிய சோற்றையும், பால் அமுதையும், ஊட்டி வளர்த்த தனது கிளியுடன் ஸ்னேகம் கொள்ள வேண்டும் என்று குயில் விரும்புவதாகவும் சொல்கிறாள்; அந்த கிளியின் தலைவியாகிய தான் அதற்கு ஏற்பாடு செய்வதாகவும் சொல்கிறாள்; இது ஸ்வாபதேசத்தில் குயில் என்பது ஆச்சார்யான் என்றும் ‘உன்னோடு தோழமை கொள்விப்பன் என்று சொல்லாமல் ‘கொள்ளுபவன்’ என்று கூறியது, தானே ஆச்சாரியனுக்கு அடிமை ஆகி, எனது உடைமைகளையும் அவனுக்கு அடிமை ஆக்குவேன் என்ற கருத்து வெளிப்பட கூறுகிறாள். அதாவது அந்த கிளிக்கு செய்யும் உபசாரம் எல்லாம் குயிலுக்கும் செய்வேன் என்கிறாள்.

உலகளந்தான் வரக் கூவாய்

குணத்தில் உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்று வித்தியாசம் பாராமல் தீண்டினால் புனிதப்படுத்தும் உத்தம புருஷன், தீண்ட தகாத சண்டாளர்கள் என்ற வித்தியாசம் பார்க்காமல் அனைவரையும் தன் திருவடிகளால் அணைத்தவனான திரிவிக்ரமன் வந்து ஆண்டாளான தன்னை அணைக்கும் படி வந்து கூவுவாய் என்று கூறுகிறாள். அவன் அனைவரோடும் வரம்பின்றி பொருந்துபவன் ஆகையால் குயில் கூவினால் காரியம் நிறைவேறும் என்ற கருத்து தோன்ற கூறுகிறாள்.

Leave a comment