என்பு உருகி இன வேல் நெடுங் கண்கள் இமை பொருந்தா பல நாளும் * துன்பக் கடல் புக்கு வைகுந்தன் என்பதோர் தோணி பெறாது உழல்கின்றேன் * அன்புடையாரைப் பிரிவுறு நோயது நீயும் அறிதி குயிலே * பொன் புரை மேனிக்கு அருளக் கொடியுடைப் புண்ணியனை வரக் கூவாய்
நாச்சியார் திருமொழி 5.4
ஓ குயிலே, எலும்புகள் உருகி போனதும் இல்லாமல், வேல் இனம் போன்று நீண்ட பரந்த கண்கள் உறக்கம் இல்லாமல் மூடாமல் இருக்கின்றன. நெடும் காலமாக பிரிவு துன்பமாகிற கடலில் அழுந்தி, ஸ்ரீ வைகுந்தநாதன் என்ற தோணியை அடையாமல் அந்த கடலுக்குள்ளே தட்டு தடுமாறி இருக்கின்றேன்; அன்புக்கு உரியவர்களை பிரிவதனால் உண்டாகும் துன்பத்தை, துக்கத்தை நீயும் அறியமாட்டாயா என்றும், பொன் போன்ற திருமேனியை உடையவனாய், கருட கொடியை உடையவனாய், தர்மமே வடிவு எடுத்தவனாய், இருக்கும் கண்ணன் இங்கே வரும் படி கூவு என்கிறாள்.
அடியவர்களை காப்பதற்காக கொடி கட்டி கொண்டு இருப்பவனாய், மோக்ஷம் கிடைக்க அருள் செய்ய கூடியவனாய், வைகுந்தன் வரும்படி கூவுவாயாக என்கிறாள்.
என்புருகி
எனக்கு வந்து இருக்கும் காதல் நோய், தோலினை மட்டும் வருத்துவது இல்லை, உள்ளே உள்ள எழும்புகளையும் உருக்குகிறது.
இன வேல் நெடுங் கண்கள் இமை பொருந்தா
‘அநித்ரஸ்ஸததஂ ராமஸ்ஸுப்தோபி ச நரோத்தமஃ. * ஸீதேதி மதுராஂ வாணீஂ வ்யாஹரந்ப்ரதிபுத்யதே৷৷ (இராமாயணம், சுந்தர காண்டம் 36.44)
சீதையை பிரிந்த ராமன் எப்போதும் தூக்கமற்றவராகவே இருக்கிறார். நரசரேஷ்டனான ஸ்ரீ ராமன், அவர் தூங்கினாலும், ‘சீதே ‘ என்னும் அழகிய சொல்லை சொல்லிக்கொண்டே கண் விழிக்கிறார் என்பது போல அவன் உறங்காமல் பட வேண்டிய துன்பத்தை தான் அனுபவிப்பதாக சொல்கிறாள். இராமன் தூக்கம் அற்றவனாக இருக்கிறான் என்று வால்மீகி சொல்வதற்கு காரணம், இராஜகுமாரர்கள் இரவில் தூங்குவது மட்டும் அன்றி, பகலிலும் சிறிது நேரம் தூங்குவார்கள் என்று இருக்கும் போது, செல்லபிள்ளையான சக்கரவர்த்தி திருமகனான தூக்கம் இன்றி இருந்தான் என்கிறார். கூடவே தூங்கினாலும் என்று சொல்வது, வெளி உணர்வு இல்லாமல் மயங்கி நிற்கும் நிலையில் ஸ்ரீராமன் இருந்ததை சொல்கிறார். வெளி உலக பொருட்களை சொல்லகூட முடியாத நிலையில் இருந்தான் என்கிறார். இப்படி காதலியை பிரிந்த பின்பு இப்படி இருப்பதே புருஷ லக்ஷணம் என்பது கருத்து.
புருஷோத்தமனான ஸ்ரீ ராமன், லக்ஷ்மன் இல்லாவிடில் தூங்க மாட்டான், தனக்கு கொண்டு வரபட்ட நல் உணவை லக்ஷ்மணன் இல்லாமல் உண்ண மாட்டான் என்று அன்பு தம்பியை பற்றி வால்மீகி சொல்லி உள்ளார். சீதே என்று சொல்லி கொண்டே எழுந்து இருக்கிறான். சீதையின் வேல் போன்ற கண்களால் இலக்கான படியால் இராமனுக்கு இந்நிலை ஏற்பட்டதால் அவள் பெயரே அவனுக்கு வருகிறது என்ற கருத்து. இப்படி இராமன் படும் பாட்டை தான் படுவதாக ஆண்டாள் சொல்கிறாள்.
பல வேல்கள் ஒன்று சேர்ந்து வைத்தார் போல பாய்ந்தால், அடிபட்டு விழுவது போல, இவன் தோற்று விழவேண்டும். இப்படி கண் அடி பட்டவன் தூங்காமல் இருக்க வேண்டியது, ஆனால் தன் கண்கள் பொருந்த மாட்டேன் என்கிறது என்று ஆண்டாள் சொல்கிறாள்.
பல நாளும் துன்பக் கடல் புக்கு
இப்படி பட்ட துன்ப கடலில் பல காலமாக மூழ்கி கிடந்து, கரை சேர்வதற்கு ஒரு தோணியை தேடி கொண்டு இருந்ததாக சொல்கிறாள்.
வைகுந்தன் என்பதோர் தோணி பெறாது உழல்கின்றேன்
தோணி கிடைக்குமோ என்று தேடி, எம்பெருமான் உகந்து அருளின திவ்ய தேசங்களில் அர்ச்சாவதாரத்தை பல்லாண்டு பாடி கரை ஏறலாம் என்று இருந்தேன் என்கிறாள். அந்த எம்பெருமான், அணைத்தல், ஆறுதல் சொல்லுதல் போன்றவற்றை செய்யாமல் இருந்ததால் தனது துன்பம் குறைய வில்லை என்று சொல்கிறாள். விபவாவதாரங்களை கொண்டு கரை ஏறலாம் என்று பார்த்தால் அவை வெகுகாலத்திற்கு முன்பே நடந்து விட்டதால், அவையும் பலன் அளிக்கவில்லை என்கிறாள். அதனால் இந்த திருமேனிகளுக்கு மூல காரணமான பரத்துவ ஸ்வாமியின் வைகுந்த தோணியை கொண்டு கரை ஏறலாம் என்று பார்த்தால், தனது காதல் கரை புரண்டு ஓடியதால், அந்த தோணியும் கடலில் மரத் தோணி போல பயன் அற்றதாக ஆகி விட்டது என்கிறாள்.
அன்புடையாரைப் பிரிவுறு நோயது
பிரிவாற்றாமையால் படுகிற துன்பத்தை நீ அறிவாயோ என்று குயிலை பார்த்து கேட்கிறாள். இராமாயணத்தில் அயோத்யா காண்டத்தில், “ஸர்வே க்ஷயாந்தாஃ நிசயாஃ பதநாந்தா ஸமுச்ச்ரயாஃ. * ஸஂயோகா விப்ரயோகாந்தா மரணாந்தஂ ச ஜீவிதம்৷৷ 105.16, அதாவது செல்வத்தின் அனைத்துக் குவிப்புகளும் இறுதியில் தீர்ந்துவிடும். உயர்ந்த நிலையை அடையும் ஒவ்வொரு மனிதனும் இறுதியில் வீழ்கிறான். ஒவ்வொரு சேரக்கையும் பிரிவினையில் முடிவடைகிறது. ஒவ்வொரு வாழ்க்கையும் மரணத்தில் முடிகிறது என்று சொல்கிறது. அதனை அறிந்தவள், குயிலும் அறிந்து இருக்கும் என்ற காரணத்தால் பிரிவு துயர் பற்றி கேட்கிறாள்.
பொன் புரை மேனிக்கு
தன்னை பிரிந்த எம்பெருமான், சேர்ந்து இருந்த போது இருந்த பொன்னிறத்திலேயே இன்னும் இருப்பான் என்று வெறுப்போடு சொல்கிறாள். பிரிவாற்றாமையால் அவன் நிறம் வெளுத்து இருப்பான் என்பதை மறைந்து சொல்கிறாள்.
கொடியுடை
எம்பெருமான், துன்பத்தில் உள்ளவர்களை காப்பாற்றுவதற்காக கருட கொடியை கட்டிகொண்டு இருக்கிறான், நீ கூவினால் நிச்சயம் வருவான் என்று கூறுகிறாள்.
புண்ணியனை
சுந்தர காண்டம், ஆநரிஷஂஸ்யஂ பரோ தர்மஸ்தவத்த்த ஐவ மயா ஷ்ருதஃ. * ஜாநாமி த்வாஂ மஹாவீர்யஂ மஹோத்ஸாஹஂ மஹாபலம் 38.41 சொல்லியது போல, இரக்கம் என்பதே மேலான தர்மம் என்பதை உங்களிடம் இருந்தே அறிந்து கொண்டேன் என்று சீதா பிராட்டி கூறவது போல, அவன் இரக்கம் என்பதை முக்கியமான தர்மமாக வாழ்பவன் என்று ஆண்டாள் கூறுகிறாள். பிறர் துன்பப்படுவதை பொறுக்க மாட்டேன் என்று கூறும் எம்பெருமான், கருணை, தயை அல்லது இரக்கம் என்ற இந்த குணத்தையே முக்கியமான தர்மமாக கருதுகிறேன் என்று சொன்னதாக சீதா பிராட்டி கூறுகிறாள். இது அனுமனிடம் அனுப்பிய ஓலை செய்தி போல அல்ல என்றும், அவளிடம் நேரிடையாக அவள் காது கேட்கும் படி அவனே நேரில் சொல்லியது என்றும், அந்த வார்த்தைகள் பிறருக்காக என்றும், தான் அனுஷிடிக்க அல்ல என்பதை தான் இப்போது புரிந்து கொண்டதாகவும் அனுமனிடம் தன்னை பிரிந்து துன்புற செய்த ஆதங்கத்தில் இருந்து ஸ்ரீ ராமனை பற்றி சொன்னாள் அல்லவா. ஆண்டாள் இதைக் கொண்டு புண்ணியன் என்று உணர்த்துகிறாள்.
அவன் கருணை இல்லாதவன் இல்லை, ஆகையால் அவன் இருக்கும் இடத்திற்கு சென்று கூவினால் அவன் நிச்சயம் வருவான் என்கிறாள்.
Leave a comment