மாதலி தேர் முன்பு கோல் கொள்ள மாயன் இராவணன் மேல் சரமாரி * தாய் தலை அற்று அற்று வீழத் தொடுத்த தலைவன் வர எங்கும் காணேன் * போதலர் காவில் புதுமணம் நாறப் பொறி வண்டின் காமரங் கேட்டு உன் * காதலியோடு உடன் வாழ் குயிலே என் கருமாணிக்கம் வரக் கூவாய்
நாச்சியார் திருமொழி 5.3
சிறந்த பூக்கள் அலர்கின்ற சோலையில், புதிய பரிமளம் வீச, அழகிய வண்டினுடைய ‘காமரம் ‘ என்ற பண்ணினை கேட்டுகொண்டு உன் காதலியோடு வாழ்கின்ற குயிலே, மாதலியானவன் இராவணனின் தேரின் முன் கோலைக் கொண்டு தன் தேரை நடத்த மாயாவியான இராவணன் மேலே சரமாரியாக அம்புகளை பிரயோகித்து, இராவணனின் பிரதான தலை, பலமுறை அற்று விழும்படி செய்த எம்பெருமானை வரவை எந்த ஒரு திசையிலும் நான் காணவில்லை. ஆகையால் என்னுடைய அனுபவத்திற்கு யோக்யனாய், நீலரத்னம் போன்ற திருமேனியை உடையவனான அந்த எம்பெருமான் இங்கே வரும் படியாக நீ கூவிட வேண்டும் என்கிறாள்.
நம்முடைய விரோதிகளை போக்கி, பரம போக்கியமான திருமேனியை தங்களுடைய அடியவர்களின் அனுபவத்திற்கு கொடுக்கக்கூடியவன் வரும்படி நீ கூவு என்கிறாள்.
மாதலி தேர் முன்பு கோல் கொள்ள
இந்திரனின் தேர் பாகனான மாதலி, இந்திரனால் அனுப்ப பெற்று, இராம இராவண யுத்தத்தில், ஸ்ரீ ராம பிரானை தேரில் எழுந்தருளி செய்து, இராவணன் முன்னே நடத்தினான். இந்திரன் இராவணன் உடன் போர் புரியும்போது, இந்திரன் புறமுதுகு காட்டி ஓடியதால், இராவணன் தேர் முன் மாதலி எதிர்த்து நின்றதில்லை. ஆனால் இராமனுக்காக தேர் ஓட்டும் போது, இராவணன் எதிரில் தேர் நடத்தும் அந்த பாக்கியத்தை பெற்றான்.
மாயன் இராவணன்
தர்ம யுத்தம் என்றால் என்ன என்பதை அறியாத இராவணன் மாய வஞ்சகமாக போர் புரிவதை இயல்பாக கொண்டவன் என்கிறார். இராமாயணத்தில் சீதா பிராட்டி, “யதா தரிப்தஷ்ச மாதங்கஃ ஷஷஷ்ச ஸத்தரிஷோ யுதி * ததா மாதங்க வத்ராமஸ் த்வஂ நீச: ஷஷவத் ஸ்மரிதஃ (சுந்தர காண்டம் 22.16) சொல்வது போல, ’இது ஒரு முயலுடன் போரில் போரிடும் பெருமைக்குரிய யானை போன்றது. ஸ்ரீ ராமன் யானை போன்றவர், நீங்கள் மக்கள் பேசும் ஒரு சாதாரண முயலைப் போலவும் இருக்கிறீர்கள்.’ இராவணன் ஒரு கோழையை போல இருக்குகிறான் என்று சொல்வது இங்கே குறிப்பிட்டு உள்ளது. இராமனையும் இலட்சுமணனையும் கண்டு பயந்து, தான் தனியே இருக்கும் போது, பயந்து, அவர்களை பிரித்து, திருடி கொண்டு வந்த இராவணனான அவனா ஸ்ரீ ராமனை இகழ்ந்து பேசுவதும் சொல்லப் பட்டுள்ளது. அதே போல,
யதந்தரஂ ஸிஂஹஷரிகாலயோர்வநே யதந்தரஂ ஸ்யந்திநிகா ஸமுத்ரயோஃ. * ஸுராக்ர்ய ஸௌவீரகயோர்யதந்தரஂ ததந்தரஂ வை தவ ராகவஸ்ய ச৷৷ (ஆரண்ய காண்டம் 47.45) சொல்வது போல, இராவணனுக்கும் ஸ்ரீராமனுக்கும் இடையிலான வித்தியாசம், காட்டில் உள்ள ஒரு நரிக்கும், சிங்கத்திற்கும், ஒரு எச்சில் நீருக்கும் கடலுக்கும் இடையில், உயர்ந்த இலந்தை ரசத்திற்கும் மதுவிற்கும் இடையிலான வித்தியாசம் என்பதை சொல்லி, ஸ்ரீ ராமன் சிங்கம் என்றும் ராவணன் நரி மற்றும் முயல் என்று சொல்லி, சீதை இராவணனுக்கு மரியாதை கொடுக்காததை கூறுகிறாள்.
மாயன் என்று சொல்லி, ராவணன் ஆச்சரியமான வஞ்சனைகள் செய்பவன் என்று சொல்கிறாள்.
சரமாரி தாய் தலை அற்று அற்று வீழத் தொடுத்த தலைவன்
உடம்பில் பிரதானமான தலை பலமுறை அறுக்கப்பட்டு மீண்டும் மீண்டும் தலைகள் தோன்றுவது ஸ்ரீ ராமனின் அம்புகள் செய்த பாக்கியம் என்கிறாள். இதுவே பொழுதுபோக்காக இராமன் செய்து கொண்டு இருக்கும் போது, வர பலத்தாலே இராவணனின் தலை இப்படி தோன்றாவிட்டால், இராமனால் தன்னுடைய பாணங்களுக்கு திருப்தி கொடுக்க முடியாமல் போய் இருக்கும் என்கிறாள்.
Leave a comment