திவ்ய பிரபந்தம்

Home

NT 5.2 வெள்ளி விளி சங்கு

நாச்சியார் திருமொழி 5.2

தேன் பெருகுகின்ற செண்பக பூவில் அசாதாரணமான அம்சத்தை தள்ளி, சத்தான அம்சத்தை அனுபவித்து அதனால் ஆனந்தம் அடைந்து, அந்த ஆனந்தத்திற்கு அடையாளமாக சங்கீதம் பாடுகின்ற கோகிலமே, சுத்த ஸ்வபாவமாய், கைங்கர்ய ஆசை உடையவர்களை, அழைக்கும் பாஞ்சன்னியத்தை இடது கையில் ஏந்தி கொண்டு இருக்கிற பரிசுத்தமான பரம புருஷன் தனது திவ்ய மங்கள உருவத்தை / விக்ரகத்தை எனக்கு காண்பிக்க மாட்டேன் என்கிறான்; அதுவும் இல்லாமல் என்னுடைய இதய கமலத்தில் வந்து புகுந்து என்னை நைந்து போகும்படி பண்ணி, அவ்வளவில் நான் முடிந்து போவதாய் இருந்தால் பரவாயில்லை, என்னை இன்னும் துன்பப் படுத்துவதற்காக, என்னை முடியவிடாமல் செய்து, நாள் தோறும் என்னை உயிர்ப்பித்து, தத்தளிக்க செய்து, வேடிக்கை பார்க்கிறான். நீ செய்ய வேண்டியது என்ன என்றால், என் அருகில் இருந்து கொண்டு, உன் மழலை சொற்களை சொல்லி, சேஷ்டைகளை செய்யாமல், எனக்காக திருவேங்கடமலையில் வந்து நிற்கின்ற எம்பெருமான் வரும்படியாக கூப்பிட வேண்டும் என்கிறாள்.

தான் இப்போது இருக்கும் நிலையை தெரிவித்தால் தான், குயிலால் தனக்கு பரிகாரம் செய்ய முடியும் என்று, அந்த நிலையை சொல்கிறாள்.

சோலையில் வாழும் குயிலிடம், தானும் இங்கேயே இருப்பதால் தன்னுடைய துயர், குயிலுக்கு தெரிந்து இருக்கும், நல்ல குரல் படைத்து என்ன பலன், குயில் ஒரு பாட்டு பாடி, கண்ணனனை அழைத்து வா என்று சொல்லும் பதிகம்.

செண்பகப் பூவிலே ஆனந்தம் அடைந்து, இசை பாடும் குயிலிடம், ஸ்ரீ பாஞ்சசன்யத்தை இடக்கையிலே ஏந்திக் கொண்டிருக்கிற பரமபுருஷன் தனது திவ்யமங்கள விக்ரஹத்தை தனக்கு சேவை சாதிக்காமல் இருக்கிறான் என்பதாகவும், தன்னுடைய உள்ளத்தில் புகுந்து தத்தளிக்க செய்கிறான் எனவும், தனக்காக திருவேங்கடமலையிலே வந்து நிற்கிற எம்பெருமான் இங்கே வரும்படியாக கூப்பிட வேண்டும் என்கிறாள்.

வெள்ளை விளிசங்கு இட கையிற் கொண்ட விமலன், எனக்கு உருக்காட்டான்

நீல நிறம்உடைய திருமேனிக்கு வர்ண சேர்த்தி அழகை அளிக்கும் வெள்ளை நிறத்தை உடையதாய், அடிமை செய்ய தாழ்ந்தவர்களை, ‘அடிமை செய்ய வாருங்கள்,’ என்று அழைப்பது போல இருக்கும் ஒலியை உடைய ஸ்ரீ பாஞ்சந்நியத்தை இடக்கையில் தரித்த

சீதா பிராட்டியைக் கைப்பிடிப்பதற்காக மிதிலையின் புறச்சோலையிலே வந்து தங்கி இருந்தார் போல், திருமலையிலே வந்து நின்ற எம்பெருமானை இங்கே வரும்படியாக குயில் கூவ வேணும் என்று வேண்டுகிறாள். கரிய திருமேனிக்கு அருகில் நன்றாக விளங்கும்படி வெண்மை நிறத்தை உடைய பாஞ்சஜன்யம், ‘என்னைப் போலே நீங்களும் கைங்கர்யம் பண்ண வாருங்கள்’ என்று அழைப்பது போல் எம்பெருமானின் இடது திருக்கையிலே ஏந்தி இருப்பது கூறப்பட்டது. வலது கையில் ஏந்தி உள்ள, சக்கரத்தாழ்வானையும் சொன்னது போல ஆகும். இங்கே, திருவாய்மொழி (6.4.9) ‘வலக்கை ஆழி, இடக்கை சங்கம்’, மற்றும், ‘இடங்கை வலம்புரி நின்று ஆர்ப்ப, எரி கான்று அடங்கார் ஒடுங்கு வித்து ஆழி (இரண்டாம் திருவந்தாதி, 71 ) என்றும் இரண்டு திவ்ய ஆயுதங்களையும் சேர்த்தே அனுபவித்தார்கள். இராஜ குமாரணை விரும்பும் பெண்கள், அவன் கையில் அணிந்து இருக்கும் மோதிரத்தையும் விரும்புவது போல, இவளும் அவனின் திருக்கரத்தில் ஏந்தி இருக்கும் பாஞ்சந்நியத்தையும் ஆராதிக்கிறாள்.

தன்னுடைய திவ்ய ஆபரணங்களும் திவ்ய ஆயுதங்களும் தனக்கு அல்ல, தன்னுடைய அடியவர்களுக்கு என்று இருக்கும் பரிசுத்தியை உடைய எம்பெருமானை விமலன் என்கிறார். விமலன் என்றது, திவ்ய ஆயுதங்களை ஏந்தி இருப்பது அடியார்களை காப்பதற்காகவே என்ற சுத்தமான இதயத்துடன் இருப்பவன் என்பதைக் காட்டுகிறது. 

எனக்கு என்று சொல்வது ஆசையின் எல்லையில் நிற்கின்ற எனக்கு என்று பொருள்.

எனக்கு உருக்காட்டான் என்றது காணாவிட்டால் தரிக்க மாட்டேன் என்று இருக்கும் எனக்கு காட்டாமல் வேறு யாருக்கு காட்ட நினத்து இருக்கிறான் என்று கேட்கிறாள். தண்ணீரில் வாழும் மீன்களுக்கு நீர் தர்மம் செய்வது போல, எப்போதும் தரிசனம் கொடுத்து கொண்டு இருக்கும் நித்யஸூரிகளுக்கு தொடர்ந்து தரிசனம் தந்து அனுபவம் தர நினைத்து இருக்கிறானோ, அல்லது அதை காண ஆசை படாத ஸம்ஸாரிகளுக்கு காட்ட நினைத்து இருக்கிறானோ என்கிறாள். பெரிய திருமொழியில் (4.9.4) சொல்லிய ‘காசினொளியில் திகழும் வண்ணம் காட்டீர்’ என்பதை நினைவூட்டுகிறார். ‘ உன்னுடைய திருமேனியின் சிறப்பையும், அதை ஆசைபடுகிற எங்களுடைய சிறுமையையும் துல்லியமாக கணக்கிட வல்லவராக இருக்கீர், பெரியவர், சிறியவர் என்று அவரவர்க்கு தக்கபடி படி அளக்காமல், எமது சிறுமையை பார்த்து உன் திருமேனியை எங்களுக்கு காட்டாமல் போனால் போம், நீர் வாழ்ந்தே போம்’ என்ற திருமங்கை ஆழ்வார் வார்த்தைகள் நினைவில் கொள்ளலாம்.

தாகம் எடுத்தவர்களுக்கு தண்ணீர் கொடுக்காதவர் போல், திருமேனியை காண விரும்புவர்களுக்கு அதை காட்டாமல் இருந்தாலும், எங்களையும் நிம்மதியாக இருக்க விடுவதில்லையே என்கிறாள்.

உள்ளம் புகுந்தென்னை நைவித்து நாளும் உயிர்பெய்து, கூத்தாட்டுக் காணும்

இத் திருமேனியை மறந்து பிழைத்து இருக்கவும், முடியாமல் என் நெஞ்சில் வந்து புகுந்தான். இதயத்தில் புகுந்தால் அதை அனுபவிக்க ஆசைபடும் இவளுக்கு நைந்து நைந்து கரையாமல் இருக்க முடியாதே. இங்கே திருவாய்மொழி (9.6.2) ‘நினைதொறும் சொல்லும் தொறும், நெஞ்சு இடிந்து உகும்‘ என்பதும், ‘நினைந்து நைந்துள் கரைந்துருகி,’ (திருவாய்மொழி 1.5.2) என்பதும் நம்மாழ்வார் அருளி செய்த வார்த்தைகள். 

உள்ளம் புகுந்தென்னை நைவித்து நாளும் உயிர்பெய்து கூத்தாட்டுக் காணும் என்று சொன்னதற்கு உரையாசிரியர், நாளும் உயிர்ப்பித்து குற்றவாளிகளை அடிக்கும்போது உயிர்போகும் தருணத்தில் சேவகர்கள் அவனுக்குத் தண்ணீர் வார்த்துத் தேறுதலை உண்டாக்கிக் கொஞ்சம் தெளிவித்து, பழையபடியே அடிப்பார்கள், அதுபோல முடியப்போகிற உயிரை மறுபடியும் உண்டாக்கி வருத்துகிறான் என்கிறார்.

அப்படியே அவனும் என் நெஞ்சினில் புகுந்து என்னால் மறக்க முடியாதபடி பண்ணுவான். இப்படி என் நெஞ்சில் இருப்பவனை அணைக்க நான் கை நீட்டுவேன், நெஞ்சில் இருந்தாலும், கையில் கிடைக்காததால் துன்பப் படுவேன். ஒரேடியாக இறந்து, இந்த துன்பத்தில் இருந்து பிழைக்க முடியாமல் மறுபடி மறுபடி நெஞ்சில் தோன்றி, உயிரூட்டி அணைப்பதற்கு ஆசையை விளைத்து அதை அளிக்காமல், கண நேரமே உயிர் வாழும் பொருள் போல சாவதும், உயிர்பெறுவதும், எப்போதும் துன்பப்படுவதே வாழ்க்கை நடைமுறை ஆகி விட்டது எனக்கு. இப்படி படாதபாடு படுத்தி இதையே பொழுதுபோக்காக கொண்டு நான் துடிப்பதை கண்டு களிக்கிறான் என்கிறாள்.

கள் அவிழ் செண்பகப் பூமலர் கோதிக் களித் திசை பாடுங் குயிலே, மெள்ள விருந்து மிழற்றி மிழற்றாது என் வேங்கடவன் வரக் கூவாய்

‘நான் இப்படி துடிக்கும் போது, நீ இன்புறுகிறாயே, பூவில் இன்புற்று, அதன் வெளிப்பாடு தெரிய சங்கீதம் பாடுகிறாயே, இது நியாயமா’ என்று இவள் கேட்க, அதற்கு குயில், ‘என்னை குற்றம் சொல்லாமல், நான் உனக்கு செய்ய வேண்டிய உதவியை சொல்வாயாக’ என்று கேட்கிறது.

அயோத்தியில் இருந்து, விஸ்வாமித்திரரோடு வந்து, மிதிலை நகரில் புறச் சோலையில் சீதா பிராட்டியை, கை பிடிப்பதற்காக பரமபதத்தில் இருந்து திருமலையில் தங்கி இருக்கிறான். எனக்காக நெடும்தூரம் வந்தவன், மீதி இருக்கும் நாலடி முன்னே வந்து, என்னுடன் சேரும்படி நீ கூவவேண்டும் என்கிறாள். பரமபதத்தில் இருந்து திருமலை வந்து இருப்பது, தன் மேல் உள்ள ஆசையினால் என்று நினைக்கிறாள்.

Leave a comment