நீ கூடிடு கூடலே என்று சென்ற பதிகத்தில் அடையவேண்டியதின் மேல் உள்ள ஆசையால், அசேதனமான கூடலின் காலில் விழுந்தாள் ; அது அறிவு அற்றதால், ‘கூடுவேன்’ என்றோ, ‘கூடமாட்டேன்’ என்றோ அது சொல்லி, இவள் கேட்டதில்லை. அதனால், அறிவு அற்றதன் காலில் விழுவது இல்லை என்றும், அறிவு உள்ள ஒன்றில் காலில் விழுவது என்று முடிவு செய்து இந்த பதிகத்தில் நுழைகிறாள்.
எம்பெருமானோடு கலந்து இருக்கும் போது வார்த்தை கேட்டால் பதில் சொல்லும் வழக்கம் உடைய குயிலின் காலில் விழுந்து அவனோடு சேர்த்து விடும் படி வேண்டுகிறாள். சொன்ன வார்த்தைக்கு பதில் சொல்லும் அறிவு உடையதே இங்கு உள்ள சிறப்பு. இராமாயணம் சுந்தரகாண்டத்தில் இருந்து மேற்கோள் கொடுக்கபட்டு உள்ளது.
மித்ரமௌபயிகஂ கர்துஂ ராமஃ ஸ்தாநஂ பரீப்ஸதா৷৷ * வதஂ சாநிச்சதா கோரஂ த்வயாஸௌ புருஷர்ஷபஃ. (சுந்தர காண்டம் 21.19) (“மனிதர்களிடையே காளையான ராமனுடன் நீ நட்பை வளர்த்துக் கொள்ள விரும்புகிறேன். ஒரு பயங்கரமான மரணத்தைத் தவிர்க்க நீங்கள் விரும்பினால், நிச்சயமாக நீங்கள் செய்வது சரியான செயல்.) அதாவது சீதை சொல்வது, ‘ராவணா, உன்னுடைய நாட்டை நீ விரும்பினால், கோரமான வதத்தை நீ விரும்பால் இருந்தால், மனிதர்களில் சிறந்த இந்த ராமனை நீ நண்பன் ஆக்கி கொள் ‘ என்றும்
‘விதிதஃ ஸ ஹி தர்மஜ்ஞஃ ஷரணாகதவத்ஸலஃ৷৷ * தேந மைத்ரீ பவது தே யதி ஜீவிதுமிச்சஸி‘ (சுந்தர காண்டம் 21.20) (“அவர் தர்மத்தை அறிந்தவராகவும், தன்னைப் பாதுகாப்பவர்களிடம் இரக்கமுள்ளவராகவும் பிரபலமானவர். உங்கள் உயிரைக் காப்பாற்ற விரும்பினால் அவருடன் நட்பை வளர்த்துக் கொள்ளுங்கள்”) என்று இராவணனிடம் சீதை சொல்வது ‘நீ ராமனுக்கு நண்பனாகி, என்னையும் அவனையும் சேர்த்து நற்பேறு பெறலாமே என்று கூறுகிறவர்கள், இராவணனை போல அவ்வளவு விரோதம் இல்லாத குயிலிடம் பிரார்த்திப்பது வினோதம் என்கிறார்.
மன்னு பெரும் புகழ் மாதவன் மாமணி வண்ணன் மணி முடி மைந்தன் * தன்னை உகந்தது காரணமாக என் சங்கிழக்கும் வழக்கு உண்டே * புன்னை குருக்கத்தி ஞாழல் செருந்திப் பொதும்பினில் வாழும் குயிலே * பன்னியெப்போதும் இருந்து விரைந்து என் பவள வாயன் வரக் கூவாய்
நாச்சியார் திருமொழி 5.1
புன்னை மரங்களும், குறுக்கத்தி மரங்களும் கோங்கு மரங்களும் இவை போல பல மரங்கள் வளர்ந்த சோலையில், பொந்துகளிலே வாழுகின்ற கோகிலமே, நித்யமாய் அளவில்லாத குணங்களை உடையவனாய், பெரிய பிராட்டிக்கு உகந்தவனாய், நீல மணி போன்ற நிறத்தை உடையவனாய், நவ மணிகள் அழுத்தி செய்யப் பெற்ற திருஅபிஷேகத்தை உடையவனாய், மிடுக்கை உடையவனான எம்பெருமானை, ஆசைப்பட்டதே காரணமாக, என்னுடைய கை வளைகளும் கழன்று ஒழியும் படியான நியாயம், இந்த உலகத்தில் உண்டோ, இது வெகு அநியாயமாக இருக்கிறது. பவளம் போன்ற பழுத்த திரு அதிரத்தை உடையவனான எனது துணைவன் என்னிடம் வந்து சேரும் படி, இரவும் பகலும், அவனது திரு நாமங்களை கத்திக்கொண்டு இருந்து சீக்கிரமாக கூவ வேணும் என்பது இந்த பாடலின் பதவுரை.
சிறியதை பெரியது நலியாதபடி அவ்வப் பொருள்களை வரம்பிலே நிறுத்தி, காப்பாற்றுகின்ற அவன் என்னை காப்பாற்றாவிடில், அவனோடு என்னை சேர்த்து காப்பாற்ற வைப்பது உன் பொறுப்பே என்கிறாள். ஸ்வாபதேசத்தில், குயில் முதலான பறவைகள், அடியவர்களை எம்பெருமானோடு சேர விடும் ஆச்சார்யார்களை குறிக்கின்றன என்பது இங்கே நினைவில் கொள்ள தக்கது.
மன்னு பெரும் புகழ் மாதவன் மாமணி வண்ணன் மணி முடி மைந்தன், தன்னை உகந்தது காரணமாக என் சங்கிழக்கும் வழக்கு உண்டே
எம்பெருமானை பார்த்தால், நிலை நின்ற பெரும் புகழை உடைய பெரிய பிராட்டியாரை உடையவராய், நீல மணி போன்ற நிறத்தை உடையவனாய், சர்வ லோக சக்கரவர்த்தி என்று தோற்றுவிக்கும் முடி அணிந்து இருப்பவனாகவும் உலகமெல்லாம் காப்பாற்றக்கூடிய பலம் உள்ளவனாகவும் இருக்கிறான். எனக்கும் அவனை பெற வேண்டும் என்பதில் ஒரு குறையும் இல்லை. இப்படி இரண்டு பக்கமும் ஒரு குறையும் இல்லாமல் இருந்தும், நான் எம்பெருமானை பிரிந்து மேனி நலிந்து என் சங்கு வளையை இழக்கலாமோ என்பது கருத்து.
அவன் குணங்கள் வெளிபடாமல் இருந்த காலம் என்று ஒன்று இருந்தால் அப்போது தான் அவனை இழக்கலாம் ஆனால் அவனோ, நிலை நின்ற புகழை எப்போதும் உடையவன் ஆதலால் தான் இழப்பதற்கு வழி இல்லையே என்கிறாள்.
அவனது குணங்களுக்கு கணக்கு இருந்தாலோ, அல்லது ஒவ்வொரு குணத்திற்கும் அளவு இருந்தாலோ, இல்லாத குணங்கள் காரணமாகவோ, அல்லது குணங்களின் சக்தி குறைவு என்ற காரணத்தினாலோ அவனை இழக்கலாம், ஆனால் அவன் பெரும் புகழ் கொண்டவன் அதனால் இழப்பதற்கு வழி இல்லையே என்கிறாள்.
ஒன்றும் தாழ்ந்த குணங்கள் இல்லாதவன்; தாழ்ந்த குணங்களும் கலந்து இருந்தால், தான் இழப்பதற்கு வாய்ப்பு உண்டு, ஆனால் அவன் புகழ் கொண்டவன் என்பதால் எல்லாம் கல்யாண குணங்கள் கொண்டவனாயிற்றே, தான் இழப்பதற்கு வாய்ப்பு இல்லை என்கிறாள். உயர்வர உயர் நலம் உடையவன் என்று நம்மாழ்வாரும், இயற்கையானவையும், எல்லை அற்ற பெருமை உடையனவும், எண்ணிக்கை அற்றவைகளுமான மங்கள குண கணங்களை உடையவனே என்று இராமனுஜரூம் அருளி செய்வது இங்கே குறிப்பிட தக்கது.
இராமாயணம் யுத்த காண்டத்தில், சீதா தேவி சொல்லிய, ‘ ‘பாபாநாம் வா ஶுபாநாம் வா வதார்ஹாணாம் ப்லவங்கம * கார்யம் கருண்ய மார்யேண ந கஶ்சிந் நா பராத்யதி (116.46)‘ – அதாவது, ‘வானர, பாவிகளாயினும், புண்ணியர்களாயினும், கொல்ல தகுந்தவர்களாயினும், குணவானாக இருப்பான் ஆனாலும், அவர்கள் விஷயத்தில், கருணை காட்டப்பட வேண்டும், அபராதம் செய்யாதவன் யாரும் இல்லையே’ வார்த்தைகளை மேற்கோள் காட்டி, ஆண்டாள், மாதவன் என்று சொல்லி, ‘என்னை அவரோடு சேரவிடும் பெரிய பிராட்டியார் இருக்கும் போதும் நான் இழக்கலாமா’ என்கிறார்.
பெரிய பிராட்டியார் அனுபவிக்கும் மாமணி வண்ணத் திருமேனி உடையவன். இவன் திருமேனி, தனக்காக கொண்ட வடிவானால் ஆண்டாளான நான் இழக்கலாம். சிறப்பு இல்லாத, இழக்க கூடிய, திருமேனியாக இருந்தாலும் நான் இழக்கலாம், ஆனால் இது மாமணி வண்ண திருமேனி, எப்படி இழப்பது என்கிறாள்.
இதே கருத்து ஜிதந்தே ஸ்தோதிரம் 1.5 ல், ‘உன்னுடைய திவ்ய ஆத்ம ஸ்வரூபம் ஆனது, உனக்காக இருக்காது, சுதந்திரமான அது, அடியவர்களுக்காக பரதந்திரமாகவும் ஆகும். திவ்ய மங்கள விக்ரகம், திவ்ய ஆயுதங்கள், இருப்பிடமான ஸ்ரீவைகுந்தம் ஆகியவையும் உனக்காக இராது; இவை எல்லாம், அடியவர்களுக்காக என்று பொருள். பக்தர்களுடைய உடைமையான நீ, இப்படி அடியவர்களின் அடைக்கல இடமான நீ, உன்னுடைய ஸ்வரூப, ரூப, குண விபூதிகளை கொண்ட நீ, புருஷ சுக்தத்தில் சொல்லியபடி சர்வாதிகானாக இருக்கும் தன்மையுடன் விளங்குகிறாய் ‘ என்றும் சொல்லபட்டுள்ளது. இப்படிபட்ட அடியவர்களுக்காக உண்டான வடிவை நான் இழக்கலாமோ என்கிறாள்.
சர்வ லோக சக்கரவர்த்தி என்ற தோற்றம் தோன்ற நவரத்தின கிரீடத்தை அணிந்த மிடுக்கன் ; மேற்கூறிய பெருமை எல்லாம் இருந்தாலும், என்னை போல ஒருவனுக்கு பரதந்திரனாய், அவன் கை பார்த்து இருப்பவனாக இருந்தாலும், நான் இழக்கலாம். ஆனால் அவன், எவனுக்கும் பரதந்திரனாய் இல்லாமல், ஸ்வதந்திரனாய், எல்லோரையும் காப்பாற்றும் விரதம் பூண்டு இருந்தாலும், சக்தி இல்லாதவனாக இருந்தால் நான் இழக்கலாம்; ஆனால் அவனோ, பலத்தை உடையவனாகவும் இருப்பதால் நான் இழக்க வாய்ப்பு இல்லையே என்கிறாள்; தகாத விஷயதிற்கு ஆசைபட்டு இருந்தால், அதை இழக்கலாம், ஆனால் அடையவேண்டிய விஷயமான எம்பெருமானுக்கு ஆசைபட்டு இழக்கலாமா என்கிறாள். என்னை பெற்று அனுபவிப்பவன் அவனாக இருக்கும் போது, நான் இழக்க இடம் உண்டோ என்கிறாள். உண்மையில் இழப்பவன் அவன் அன்றோ என்கிறாள்; தன் திருவடிகளில் சிலர் போக்கற்று விழுந்தால், அதற்காக முன் செய்த முழுவினைகளை அனுபவிக்க வேண்டுமோ, ‘சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி (கீதை 18.26) என்று சொன்னது போல, அந்த பாவங்களை போக்கிறவன் அன்றோ அவன். அதே போல, மகா பாரதத்தில் (துரோண பர்வம், 29.18) சொல்லியது, கிருஷ்ணன், அர்ஜுனனை மறைத்துக் கொண்டு, பகதத்தனால் ஏவப்பட்ட அந்த அனைத்தையும் கொல்லும் ஆயுதத்தை (வைஷ்ணவாஸ்திரத்தைத்) தன் மார்பிலே ஏற்றான். அதன் பேரில் அந்த ஆயுதமானது கேசவனின் {கிருஷ்ணனின்} மார்பில் வெற்றி மாலையாக விழுந்தது. அர்ஜுனனை காப்பாற்றியது போல தன்னை காப்பாற்ற வேண்டாமா என்று ஆண்டாள் கேட்கிறாள்; இப்படியெல்லாம் இருக்கும் போது, நான் என் சங்கு வளையை இழப்பதற்கு காரணம் ஒன்று உண்டோ என்கிறாள்; என்னுடைய வருந்த தக்க நிலையை பார்த்து, நடுநிலையாக நியாயமாக நடக்க சொல்கிறேன் என்கிறாள்.
வாசுதேவனுடைய பக்தர்களுக்கு எங்கும் அமங்களம் இல்லை என்று ஸஹஸ்ரநாமத்தில் சொல்லியது. ’என்னை அடைந்தவன் சீக்கிரம் தர்மாத்மாவாக ஆகிறான், நிலையான சாந்தியான மோக்ஷத்தை அடைகிறான், என்னுடைய பக்தன் நசிக்க மாட்டான் என்று நீ சத்தியம் செய்வாயாக’ என்று கண்ணன் கீதையில் சொல்கிறான். இது எம்பெருமான் அடியார்களுக்கு ஒரு நாளும் தீங்கு இல்லை என்ற வார்த்தைகள் அன்றோ என்கிறாள்;
புன்னை குருக்கத்தி ஞாழல் செருந்திப் பொதும்பினில் வாழும் குயிலே, பன்னியெப்போதும் இருந்து விரைந்து என் பவள வாயன் வரக் கூவாய்
குயிலானது பற்பல காலங்களில் அதற்கேற்ப பல மரங்களில் கூடு கட்டி சுகமாக வாழ்வதை சொல்கிறாள்; எம்பெருமானின் நித்யமாய், பரந்துள்ள குணங்கள் தன் வருத்தத்திற்கு காரணம் ஆனார் போல், இப்படி விரிந்துள்ள பரந்து உள்ள அவனுடைய படுக்கை வாய்ப்பும், அவன் ஆனந்தத்திற்கு காரணமாக உள்ளது என்றும் கருத்து. தான் எம்பெருமானை பிரிந்து தரையிலே கிடந்து துவளும் போது, அவன் வாய்ப்பான படுக்கையில் பொருந்தி இன்புறுவதே என்கிறாள். மென்மலர்பபள்ளி வெம்பள்ளியாலோ (9.9.4) திருவாய்மொழியில் சொன்னது போல, தனக்கு மலர் படுக்கை சுடுவதாய் இருக்க, நீ மலர் சோலை பொந்துகளில் இனிதாக கண் வளர்வதே என்று கருத்து. இப்படி உனது நிலையும் என் நிலையும் சொல்வதை விட்டு, உனக்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை கூறு என்று குயிலுக்கு கருத்தாக கூறுகிறாள்;
எனக்காக நீ ஒரு முறை தூது சென்றால் போதாது என்றும், பல காலும் அவன் முன்னே நின்று சொல்லி, அவனை என்னிடம் வரும்படி வார்த்தை சொல்ல வேண்டும். கஜேந்திரன் துன்புற்று இருந்த காலத்தில் விரைந்து வந்தது போல, என்னிடம் விரைந்து வரும் படி கூவுவாய் என்கிறாள்.
என்னோடு கலந்து பிரிகிற காலத்தில், என்னை அணைத்து, தான் திரும்பி வரும் வரையில் அதை நினைத்தே உயிர் வாழும்படி, பயிருக்கு நீர் பாய்ச்சுவது போல், புன்முறுவல் செய்து போன போது, அவன் திருவதரத்திலே புதிதாக ஏற்பட்ட சிவப்பும், இயற்கையாக உள்ள சிவப்பும், கூடிய அந்த பவள செவ்வாயன் வந்து என்னை அணைக்கும்படி கூவுவாயாக என்று கூறி முடிக்கிறாள்.
Leave a comment