திவ்ய பிரபந்தம்

Home

NT 4.10 பழகு நான்மறையின்

நாச்சியார் திருமொழி 4.10

வெகு காலமாக நான்கு வேதங்களின் உட்பொருளாய் இருக்கும், மத ஜலம் பெருகுகின்ற கஜேந்திர ஆழவானின் துயர் நீங்கி, வாழும் படி, கிருபை செய்து அருளிய, என்னை ஈடுபடுத்தவல்ல அழகினை உடையவனாய், அழகிய கோபிமார்களின் நெஞ்சங்களின் உள்ளே குழைந்து இருப்பவனான கண்ணன் வரக்கூடுமாகில், கூடிடு கூடலே என்பது இந்த பாட்டின் பதவுரை.

கஜேந்திர ஆழ்வானை காப்பாற்றியவன் நம்மையும் காப்பாற்றுவதில் குறை ஒன்றும் இல்லை, கூடலே, அவன் வரும்படி கூடுவாயாக என்கிறாள்.

பழகு நான் மறையின் பொருளாய்

நீண்ட நெடும் காலமாக ஆச்சார்யன் சொல்ல, அதனை கேட்டு திருப்பி சொல்லி கற்று வந்து, எழுத்து மூலம் இல்லமால் வாய்மொழியாகவே பழகிய வேதங்களின் அர்த்தமாக இருப்பவன் இவன் என்று பொருள். ’வேதைஸ்ய சர்வைரஹ மேவ வேத்யா’ என்று பகவத் கீதை (15.15) ல் சொல்லியபடி, எல்லா வேதங்களாலும் அறியபடுபவன் அவனே அன்றோ. அவனை விட்டு, சேதன அசேதனங்கள் பிரிக்க முடியாத சரீரமாய் அவனை அறிந்தால் அவைகளையும் அறிந்ததாகும். அதனால் வேதங்கள் அவனோடு அவைகளையும் சொல்வதில் ஒன்றும் குறையில்லை. பிரம்மத்தை அறிந்தால் அதனில் இருந்து வெளிபடும் எல்லாவற்றையும் அறிந்தது போல ஆகும் என்று உபநிஷத் சொல்லியது போல், வேதங்களின் பொருள் பரம்பொருளான நாராயணன் ஒருவனே என்று கூற குறை இல்லை.

மதம் ஒழுகு வாரணம் உய்யளித்த எம் அழகன்

புலன் அடக்கமே அற்றதான, மதம் ஒழுகும், கஜேந்திரனனா யானையை அன்றோ எம்பெருமான் காப்பாற்றியது. என்ன நீர்மை என்ற கருத்தில் வருகிறது.

முதலையின் வாயில் அகப்பட்ட துயரில் இருந்து, உய்வு படும் படியாக என்று கொள்ளலாம். அன்றிக்கே எம்பெருமான் திருவடிகளில் தான் பறித்த பூவினை சேர்க்க முடியவில்லையே என்று துயர் பட்டவன் ஆகையால் அந்த இடர் நீங்கி, உய்வு படும் படி என்றும் கொள்ளலாம்.

இப்படி இடர் நீக்கியதோடு அல்லாமல், அழகினை காட்டி அவனை காப்பாற்றினான் என்கிறார்.

ரங்கராஜ ஸ்தவத்தில் சொல்லிய படி, கஜேந்திர ஆழ்வான் கூக்குரல் செவியில் பட்டவுடன், ‘கெட்டேன் கெட்டேன்’ என்று தன்னை தானே நொந்துகொண்டு, மாலை ஆபரணம் வஸ்திரம் இவற்றை தாறுமாறாக அணிந்து கொண்டு, பெரும் காற்றினில் அலையும் தாமரை தடாகம் போல், அழகியவராய் எழுந்து அருளுகிறார். இப்படிபட்ட தேவரீரே தனக்கு புகல்இடம் என்று சொல்கிறார். அப்படி தாறுமாற அணிந்து கொண்ட அழகை காட்டி அன்றோ இவனை காப்பாற்றியதாக, இங்கே ஆண்டாள் போற்றுகிறாள்.

ஆரணி ஆய்ச்சியர் சிந்தையுள் * குழகனார் வரில் கூடிடு கூடலே

அழகை உடைய ஆச்சியர் நெஞ்சங்களை குழைய வைப்பவன் என்கிறார். ஆச்சியர்களின் அழகாவது,

  • ‘கொங்கை மேல் குங்குமத்தின் குழம்பழிய புகுந்து, ஒரு நாள் தங்கு மேல் என்னாவி தங்கும் என்று உறையீரே’ (நாச்சியார் திருமொழி 8,7)
  • அவனோடு அணைய பெறாவிடில் தரிக்க ஒண்ணாமையை சொல்கிறது
  • அவன் அப்போதே உதவாவிட்டால், அவனை பற்றி மடல் எடுப்பது முதலான காரியங்களை செய்வது
  • அவன் வந்தாலும் முகம் காட்டுவதில்லை என்ற உறுதியோடு இருப்பது

இப்படி அவர்கள் உறுதியோடு இருக்கும் போதே, இவர்கள் நெஞ்சில் கோபம் ஆறும்படி, கோல பாதத்தையும், அணி மிகு தாமரை கையையும் இவர்கள் தலை மேல் வைப்பது முதலான வாழ்வுகள் செய்கிறான்; மற்றும் அடியேன், குடியேன் என்று தாழ்வுகள் சொல்கிறான்; இப்படி குழைந்து பிரிந்தவர்களுடன் கலக்க செய்யும் வல்லமை உள்ளவன்.

ஆச்சியர்களின் வருத்ததை தீர்த்தது போல என்னுடைய வருத்ததையும் தீர்த்து கூடுவானாகில், கூடலே நீ கூடிடு என்று முடிக்கிறாள்.

Leave a comment