திவ்ய பிரபந்தம்

Home

NT 4.9 கொண்ட கோல

நாச்சியார் திருமொழி 4.9

முற்காலத்தில், மூப்புரி நூலும், கிருஷ்ணாஜினமும்(மான் தோலும்), முஞ்சியும் பவித்திரமும் தண்டுமான அணி பூண்டு வாமன ரூபியாய், மகா பலி உடைய சிறந்த யாக பூமியில் எழுந்தருளி, மேல் உலகங்களையும், கீழ் உலகங்களையும் ஒவ்வொரு அடியினால் அளந்த திரிவிக்கிரமன் வருவானாகில் கூடலே நீ கூடிடு என்பது இந்த பாடலின் பொழிப்புரை.

தன் உடைமையான உலகங்களை அளந்து எடுத்து கொண்டவன், தன் உடைமையான என்னையும் எடுத்து கொள்ளும்படி கூடலே நீ கூடிடு என்கிறாள்.

மூப்புரி நூலும், மான் தோலும், முஞ்சியும் பவித்திரமும் தண்டுமான அணி பூண்டு இருப்பது, திரு ஆபரணங்களாலும் திவ்ய ஆயுதங்களாலும் அலங்கரிக்க பட்ட ஸ்ரீ பரமபத நாதனை விட அழகாக இருப்பதாக சொல்கிறாள்.

பண்டு என்று சொல்வதன் மூலம், அவன் திருவடி கொண்டு அளந்து, எல்லோரையும் தீண்டிய காலத்தின் பெருமை சொல்லப்பட்டது. 

மாவலி தன் பெரு வேள்வி என்று சொன்னது, இன்று கூடலிழைத்தும் கிடைக்காதது போல அல்லாமல், வேள்வியின் நடுவே வேள்வியின் பயனாக இவனை யாவரும் காண கிடைத்த ஒரு ஒப்பற்ற வேள்வி என்கிறாள்.

திரீணி பதா வி சக்ரமே என்று யஜுர் அஷ்டகமும், மூன்றடி நிமிர்த்து (பெரியாழ்வார் திருமொழி 4.7.10) என்று சொல்வதும், மூன்று அடிகளால் உலகை ஆக்ரமித்தான் என்ற பொருளிலும் வரும். அப்படி இருக்கும் போது, இங்கு இரண்டு அடிகளால் அளந்தான் என்பது எப்படி பொருந்தும் என்று நம்ஜீயர், பட்டரை கேட்பாராம். அதே யஜுர் அஷ்டகத்தில், எம்பெருமானே, மேலான நீ பெரிய உருவுடன் இந்த உலகங்களை அளந்த உன் பெருமையை அன்று பார்த்து அனுபவித்தவர் யாரும் இல்லை; ஒரு அடி மூலம் இந்த உலகத்தையும், இரண்டாவது அடி மூலம் மேல் உலகத்தையும் அளந்தாய்; மூன்றாவது அடியை எங்கு வைத்தாய் என்று உனக்கே தெரியும், வேறு யாரும் அறியவில்லை. இப்படி பட்டர் அருளி, நம்ஜீயரின் சந்தேகத்தை போக்குகின்றார் என்று ஐதீகம்.  ருக் அஷ்டகத்திலும் இதே சொல்லபட்டு உள்ளது.

மேலும், இந்த மூன்றாவது அடி எங்கு வைத்து இருப்பார் என்பதற்கு இரண்டு விதமான விளக்கங்களும் வியாக்கியானத்தில் சொல்லபட்டு உள்ளது. மூன்றாவது அடியை மகாபலியின் தலை மேல் வைத்து அவனை பாதாள லோகத்திற்குக்கு எடுத்து சென்று அவனுக்கு எல்லாவற்றையும் செய்து கொடுத்தார் என்பது புராணங்களில் சொல்லபட்ட ஒன்று. இதையும் யாரும் பார்த்து இருக்க முடியாது என்பதால், இதுவும் பொருந்தும்.

மூன்றாவது அடியை யாரும் பார்க்க முடியாத பரமபதத்தில் வைத்தார் என்றும் சொல்லலாம், ஏன் என்றால், பரமபதமும் யாராலும், பிரம்மா சிவன் முதலியவர்களால் கூட காண முடியாதது ஆகும்.

Leave a comment