ஆவல் அன்பு உடையார் தம் மனத்து இன்றி, * மேவலன் விரை சூழ் துவராபதிக் * காவலன் கன்று மேய்த்து விளையாடும் * கோவலன்வரில் கூடிடு கூடலே
நாச்சியார் திருமொழி 4.8
ஆவலையும் அன்பையும் உடையவர்களுடைய நெஞ்சு தவிர மற்றோரிடத்திலும் பொருந்தாதவனும் நல்ல வாசனை சூழ்ந்த துவாரகையை நிர்வகிப்பவனும் கன்றுகளை மேய்த்து விளையாடும் கோபாலனான கண்ணனுடன் கூடிட, கூடலே நீ கூடு என்பது இந்த பாடலின் பொழிப்புரை.
தனக்கு அன்புக்கும் ஆவலுக்கும் குறைவில்லை, அவனுடைய ரக்ஷகத்வத்திற்கும் (பாதுகாக்கும் தன்மைக்கும்) ஸௌலப்யத்திற்கும் (எளிமையாக பழகும் தன்மை) குறையில்லை; கூடல் கூடாததுதான் காரணம் என்று ஆண்டாள் சொல்வதான பாடல்.
அவன் கல்யாண குணங்கள் நிறைந்தவன், ஆகையால் நம்மை ஏற்றுக்கொண்டே தீருவான், எனவே அவன் வரும்வரை எதிர்பார்த்துக் கொண்டு இருப்பதே நமக்கு நல்லது என்று சீதா பிராட்டி இருந்ததைப் போல் என்று ஆண்டாள் உபவாசம் இருந்தாலும், ஆர்வம் மிகுதியால் அவனை பெறுவதற்காக, நோன்பு நோற்பது, காமனிடம் சொல்வது, சிற்றில் இழைப்பது, பனி நீராடுவது, கூடலிழைப்பது என்று தங்களுடைய ஸ்வரூபத்திற்கு ஒவ்வாத காரியங்கள் செய்பவர்கள் ஆவல் உடையார்.
“மல்லாண்ட திருத்தோள் மணிவண்ணா, உன் சேவடி செவ்வி திருக்காப்பு” என்று பாடுவதும், “உரகல் உரகல்” என்று எப்போதும் விழித்திருக்கும் நித்யஸூரிகளை பார்த்து , உறங்காமல் இருந்து எம்பெருமானை பார்த்துக் கொள்ளுங்கள் என்று பொங்கும் பிரிவால் பெரியாழ்வாரை போல், காரியங்கள் செய்பவர்கள் அன்புடையோர்.
ஆழ்வார் குடிப் பிறப்பால் தன்னுடைய அன்புக்கும் ஆவலுக்கும் குறைவில்லை, என்பதை ஆண்டாள் சொல்கிறார்.
விரைசூழ் துவராபதிக்கு என்று சொல்வதன் மூலம் இயற்கையிலேயே வாசம் நிறைந்த பதினாயிரம் தேவிமார்களை காப்பாற்றி துவாரகைக்கு அழைத்து வந்தது சொல்லி அவனது ரக்ஷகத்துவம் சொல்கிறார். நரகாசுரனால் பிடித்து வைக்கபட்டு இருந்த பதினாயிரம் தேவிமார்களை சிறையில் இருந்து மீட்டு, கைபிடித்து துவாரகை சென்றான் என்பது விஷ்ணு புராணத்தில் (31.17,18) ஸ்லோகங்களில் சொல்லபட்டது. இவள் அளவுக்கு ஆவல் அன்பு இல்லாதவர்கள் அவர்கள், ஆதலால் எம்பெருமான் தன்னை சேர்த்துக்கொள்வார் என்கிறார்.
நித்யஸூரிகளை ரக்ஷிப்பதைக் காட்டிலும் பசுக்களை காப்பதில் உவந்து இருப்பான் (திவத்திலும் பசுநிரை மேய்ப்பு என்று நம்மாழ்வார் திருவாய்மொழி10.3.10) என்று சொல்வது போல் இங்கே கன்று மேய்த்து விளையாடும் கோவலன் என்று சொல்லி மதுரையில் ராஜ்யம் ஆழ்வதைவிட, கன்று மேய்ப்பதையே விரும்புவான் என்று சொல்லி, அவனது எளிமை (சௌலப்யம்) சொல்லப்பட்டது.
ஆகவே, கூடலே நீ கூடிடு என்று முடிக்கிறாள்.
Leave a comment