திவ்ய பிரபந்தம்

Home

NT 4.6 அற்றவன்

அற்றவன் மருதம் முறிய நடை * கற்ற வன் கஞ்சனை வஞ்சனையினால் * செற்றவன் திகழும் மதுரைப்பதி * கொற்றவன் வரில் கூடிடு கூடலே

நாச்சியார் திருமொழி 4.6

முன்பே எனக்கு அற்று தீர்ந்தவனாக, யமளார்ஜுனன் என்ற இரண்டு மருதமரங்கள் முறிந்து விழும்படி, தவழ் நடை நடக்க கற்றவனாக, கம்சனை வஞ்சனையால் அழித்தவனாய், விளங்குகின்ற மதுரை மாநகருக்கு மன்னான கண்ணன் வந்திடுவான் ஆனால் கூடலே, நீ கூடிடு.

எனக்காகவே வந்து அவதரித்தவனான கண்ணன், என்னோடு கூடும்படி கூடலே நீ கூடிடு என்பதாய் அமைந்துள்ள பாசுரம்.

முன்னமே, “ஆண்டாளுக்கானவன் இவன்” என்று அற்றுத் தீர்த்தவன் என்றும், மருத மரங்கள் முறிந்து விழும்படி, தவழ் நடை கற்றவன் என்றும், கம்சனை வஞ்சனையில் கொன்று தீர்த்தவன் என்றும் விளங்குகின்ற மதுரை நகரத்தின் மன்னனான கண்ணன் வருவானாகில் கூடலே கூடிடு என்பது இந்த பாடலின் பொழிப்புரை.

நல்லவர்களை ரக்ஷிக்கவும், தீயவர்களை அழிப்பதற்காகவும் தர்மத்தை நிலை நிறுத்தவும் தான் யுகம் தோறும் பிறப்பதாக கண்ணன் சொல்வது பகவத் கீதையில் (4.8) வருகிறது. தன்னை அறியாத வயதில் தவழ்ந்து செல்லும் குழந்தை பருவத்திலேயே பொய் மாய மருத அசுரர்களை அழித்தவன் ஆகையால், எதிரிகளை கண்டு இவன் அஞ்ச வேண்டியதில்லை.

தீய புத்தி கஞ்சன் ஆகையால், கம்சனை வஞ்சனையால் கொன்றான்; ஸ்ரீ ராமன் போல தர்ம வழியில் கொல்வதென்றால், அது இந்த கம்சனிடம் செல்லாது என்று அவன், இவனுக்கு செய்த வஞ்சனைகள் அவனோடு போகும் படி செய்தான்.

கண்ணன் உக்ரஸேந மஹாராஜனை விடுவித்து வடமதுரையிற் பட்டாபிஷேகம் செய்து வைத்தாலும், திகழும் மதுரைப்பதிங் கொற்றவன் உக்ரஸேநனே ஆனாலும், கண்ணனே மன்னன் என்பது ஆண்டாளுடைய வாதம் ஆகும்.

Leave a comment