திவ்ய பிரபந்தம்

Home

NT 4.2 காட்டில் வேங்கடம்

நாச்சியார் திருமொழி 4.2

காட்டில் உள்ள திருவேங்கடமலையிலும், திருகண்ணபுர நகரிலும், மனக்குறையில்லாமல், திருவுள்ளம் உகந்து, நித்ய வாசம் செய்து அருளுகிற வாமன அவதாரம் செய்து அருளிய எம்பெருமான், ஓடி வந்து என்னுடைய கையை பிடித்து தன்னோடு அணைத்து கொள்வான் ஆகில் நீ கூட வேண்டும் என்பது இந்த பாடலின் பொழிப்புரை ஆகும்.

அவன் திருவேங்கடத்திலும் திருகண்ணபுரத்திலும் என்னை பெறுகைக்கு சாதனா அனுஷ்டானம் பண்ண தொடங்கினவன் போல் இருந்தான். அதன் பயனாக அவன் ஓடி வந்து என் கையை பிடிக்கும்படி நீ செய்யவல்லையே என்று கூடலை வேண்டுகிறாள்;

காட்டில் வேங்கடம் கண்ணபுர நகர்

காட்டில் உள்ள வேங்கடம் என்றோ, காட்டை ‘இல்’, இருப்பிடமாக, கொண்ட வேங்கடம் என்றோ பொருள் கொள்ளலாம். இராமாயணத்தில் தண்ட காரண்யத்தில் ரிஷிகளோடு ஸ்ரீ ராமன் வன வாச சுவையை அனுபவதித்தது போல், அச்சுவையை திருவேங்கடமுடையானாக திருமலையில் இருந்து அனுபவிக்கிறான். ஸ்ரீராமன் அயோத்தியில் அனுபவித்த நகர சுவையை திருகண்ணபுரத்தில் சௌரிராஜனாக அனுபவிக்கிறான். அல்லது கண்ணன் பிருந்தாவனமாகிற காட்டில் இருந்து அனுபவித்த சுவையை, வேங்கடத்தில் திருவேங்கடமுடையான் ஆகவும், திருவாய்பாடியில் அனுபவித்த சுவையை திருகண்ணபுரத்தில் சௌரிராஜனாகவும் அனுபவிக்கிறான். பரமபதத்தில் நித்யசூரிகளுக்கு தன்னை அனுபவிக்க கொடுத்து கொண்டு இருப்பவன், ‘கானமும் வானரமும் வேடுமுடை வேங்கடம்’ (நான்முகன் திருவந்தாதி, 47) என்று சொல்கிறார் போல, தாழ்ந்தவர்களுக்கு முகம் கொடுத்து திருமலையில் நிற்கிறான் என்றும் கொள்ளலாம்.

வாட்டம் இன்றி மகிழ்ந்து

பரமபதத்தில் நித்யசூரிகளுக்கு முகம் கொடுத்த நாம், அந்த இடத்தை விட்டு இங்கே வந்து இவர்கள் நடுவில் இருக்கும்படியாய் விட்டதே என்று வருந்தாமல் எழுந்தருளி இருக்கிறான்.

நித்ய சூரிகளுக்கு நடுவே பரம ஆனந்தில் இருப்பது போல, எல்லையற்ற மகிழ்ச்சி உடையவனாக இருக்கிறான்.

உறை வாமனன்

விபவதாரங்கள் போல ஒரு காலத்தில் முடிவு அடைவது போல இல்லாமல், எல்லா ஜீவாத்மாக்களையும் அடையாமல் திரும்ப மாட்டேன் என்பது போல உறைபவன் என்கிறார். தன் உடைமையான உலகத்தை மாபாலியிடம் இருந்து யாசகமாக பெற்றவன், இப்படி மகிழ்ந்து உறைவதற்கு சொல்லவும் வேண்டுமோ என்கிறார்.

ஓட்டரா வந்து என் கைப்பற்றி தன்னோடும்

ஓடி வந்து கழஞ்சு அளவுள்ள ஓரடி மண்ணுக்கு பதறி வந்து யாசித்தவன் இவளை பெறுவதற்கு சொல்லவும் வேண்டுமோ என்கிறார். அசுர சுபாவமான மாவலியிடம் ஓரடி மண்ணுக்கு பதறி நடந்தவன், பெரியாழ்வார் பெற்ற பெண்பிள்ளையை பெறுவதற்கு ஆறி இருப்பானோ என்கிறார்.

‘ந ப்ரமாணீக்ருதம்பாணிர்பால்யேமமநிபீடித । * மமபக்திஶ்சஶீலம் ச ஸர்வம்தேப்ருஷ்டத க்ருதம் । இராமாயணம் யுத்த காண்டம் .119.16) – “என் இளம் வயதில் நீங்கள் என் கையை (எங்கள் திருமணத்தில்) ஏற்றுக் கொள்ளும் கையை இப்போது எண்ணி பார்க்க பட வில்லை. என் பக்தி, தன்மை மற்றும் பரிசுத்தம் ஆகியவை கணக்கில் எடுத்துக் கொள்ளப் படவில்லையா?” என்பதில் சீதாபிராட்டியை பிடித்தது போல நீங்கள் என் கையை இறுக்கி பற்றி கொள்ள வேண்டும் என்று ஆசை படுகிறாள்; ’அங் கண்ணன் உண்ட என் ஆருயிர்க்கோதிது ‘ (திருவாய்மொழி 9.6.6) பிடித்த பிடியில் வேறு ஒருவருக்கு ஆகாதபடி பிடித்தான் என்று கொள்ளலாம்.

தன்னோடும் கூட்டுமாகில் நீ கூடிடு கூடலே

அவன் கையால் பிடித்த பிடியாலே, துவண்டு, நான் வேறு ஒன்றும் அறியாதபடி, என்னை அணைத்து தன்னோடு ஒன்றாக்கி கொள்ளுவானாகில், இசைந்து கூடி விட்டானாகில், அவன் என்னை அணைப்பது நிச்சயம் என்கிறாள்.

கூடல் மனதை குறிப்பதாகவும், எம்பெருமான் அடியவனை ஏற்று கொள்வதற்கு எதிரே வந்து நின்றாலும், அந்த பெற்றை பெறுவதற்கு இவன் மனதில் இசைவு வேண்டும் என்று உள்ளார்த்தம் காட்டுகிறது.

Leave a comment