சென்ற பதிகத்தில், கண்ணன் பெண்களுடைய துகில்களை வாரி கொண்டு போய், குருந்த மரத்தின் மேல் ஏறி வீற்று இருந்தான். இப்பெண்களும், அவனை கெஞ்சியும், வைதும், பல வழிகளால் தங்கள் பட்டை கொடுத்து அருள வேண்டும் என்று கேட்டு கொண்டு சில காரியங்கள் செய்தார்கள்; அவனும் பட்டை கொடுத்து அருளி, இவன் விரும்பும் சேரக்கையும் நடந்தது.
ஸர்வே க்ஷயாந்தாஃ நிசயாஃ பதநாந்தா ஸமுச்ச்ரயாஃ. * ஸஂயோகா விப்ரயோகாந்தா மரணாந்தஂ ச ஜீவிதம்৷৷ (இராமாயணம் அயோத்யா 105.16) என்றபடி, செல்வத்தின் அனைத்துக் குவிப்புகளும் இறுதியில் தீர்ந்துவிடும்; உயர்ந்த நிலையை அடையும் ஒவ்வொரு மனிதனும் இறுதியில் வீழ்கிறான்; ஒவ்வொரு சேர்க்கையும் பிரிவினையில் முடிவடைகிறது; ஒவ்வொரு வாழ்க்கையும் மரணத்தில் முடிகிறது என்றபடி இந்த சேர்க்கையும் பிரிவில் முடிந்தது, கண்ணனும் இவர்களை பிரிந்தான். இன்னொரு முறை வஸ்திரங்களை இழந்தாலும் சரி, இவனை கண்டால் போதும் என்று இவர்களும் கூடலிழைக்கிறார்கள். கூடல் இழைப்பது என்பது குறி பார்ப்பதில் ஒரு வகை. பகவத் பாகவத விஷயங்களில் கிடைப்பது அல்லது கிடைக்காமல் போவது என்ற இரண்டு நிலைகள் இருந்த போதும், கிடைக்கவேண்டும் என்று ஆசைப் படுவதே பெரும் பாக்கியம் ஆகும். இப்படி இருக்க இவள் அசேதனமான கூடலின் காலில் விழுகிறாள்; பரமசேதனனை விட்டு மற்ற சாதனங்களை பற்றி அவனை அடைய நினைப்பவர்களை போல இவள் செய்வது, இவள் கலங்குவது, இவள் அவன் மேல் வைத்து இருக்கும் பிரியத்தினால் மற்றும் ஆசையினால் ஆகும். கலங்காமல் இருந்தால் பகவத் விஷயத்தில் நாட்டம் இல்லை என்று ஆகி விடும் என்று உரையாசிரியர் நம்மை இந்த பதிகத்தினுள் அழைத்து செல்கிறார்.
தெள்ளியார் பலர் கை தொழும் தேவனார் * வள்ளல் மாலிருஞ்சோலை மணாளனார் * பள்ளி கொள்ளுமிடத்தடி வொட்டிட * கொள்ளுமாகில் நீ கூடிடு கூடலே
நாச்சியார் திருமொழி 4.1
கூடலே, தெளிவுள்ள நித்யர்கள் பலர் கைகளால் வணங்க பெற்ற ஸ்வாமியாய், பரம வள்ளலாய், திருமாலரின்சோலையில் எழுந்தருளி இருக்கும் அழகிய மணவாளனான பரமபுருஷன், பள்ளி கொண்டு அருளும் இடத்திலே, அவனுடைய திருவடிக்களை நான் பிடிக்கும் படியாக அவன் திருவுள்ளம் பற்றுவானாகில் நீ கூட வேண்டும் என்பது இதன் பொழிப்புரை.
திருமாலிருஞ்சோலை என்ற திவ்ய தேசத்தில் எழுந்து அருளி இருக்கும் எம்பெருமான் மணவாளன், பள்ளி கொண்டு உள்ள திருவரங்கத்தில் திருவடி குற்றவேல் செய்வதற்கு கூடல் இழைக்கிறாள்.
தெள்ளியார் பலர் கை தொழும் தேவனார்
என்றும் தெளிவுற்று இருக்கும் நித்யசூரிகள்; தான் இன்று சிறிது நேரம் கூடுவதற்காக கூடல் இழைக்க துவங்கிய அளவில், நித்யசூரிகள் நினைவுக்கு வர, அவர்கள் என்ன பாக்கியம் செய்தவர்கள், தன்னை போல எம்பெருமானை அனுபவிக்க பெறாமல், கூடல் இழையாமல், எப்போதும் அவனை அனுபவிக்கும் பாக்கியசாலிகள் என்கிறார்கள் ; அவனை பிரிந்தால் எப்போதும் கூடலிழைக்க வேண்டும் என்ற தெளிந்த ஞானம் கொண்டு, அவனை பிரியாமல் எப்போதும் அனுபவித்து கொண்டு இருக்கிறார்கள்.
பாதோஸ்ய விஸ்வா பூதாநி, திரி பாதஸ்யாம் ருதம் திவி (புருஷ சுக்தம் 3) சொல்வது போல, இவ்வுலகில் உள்ள எல்லா ஜீவராசிகளும் அந்த மகாபுருஷனின் சொத்தில் கால் பங்கு ஆகும். இவனுடைய சொத்தில் முக்கால் பங்கு அழியாததாய் பரமபதத்தில் உள்ளது. அதன்படி இந்த பூமியை விட மூன்று மடங்கு பெரியதான, பரமபதத்தில் பலர் , கணக்கற்ற நித்ய முக்தர்கள், காலமெல்லாம் அனுபவித்து வருகிறார்கள். இங்கே தான் ஒருத்தியாய் இருந்து, கூடல்இழைக்கும் நிலையில் உள்ளதாக கூறுகிறாள்; ஏற்கனவே பெற்ற சேர்த்தி அனுபவத்தை கூட பேச இன்னொருத்தி இல்லை என்றும், அங்கு எல்லோரும், எப்போதும், அவனை அனுபவித்து வருவதால் அவர்களுக்கு பேசி பொழுது போக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் சொல்கிறாள். பரமபதத்தில் இருக்கும் நித்ய முக்தர்கள் எப்போதும் அஞ்சலி செய்து கொண்டு இருப்பார்கள்; அதனால் ஆனந்திப்பார்கள்; வாயால் நம என்று எப்போதும் சொல்லிக் கொண்டு இருக்கும் தன்மை உள்ளவர்கள்; தொழுவதையே எப்போதும் இயல்வாக கொண்டவர்கள்; இவர்கள் தொழுது சத்தை பெறுவது போல, இவர்கள் தொழுவதால் அவன் பிரகாசம் அடைகிறான்; தொழுவதால் தேவ சப்தம் ஒளியை காட்டுகிறது.
வள்ளல் மாலரிஞ்சோலை மணாளனார் பள்ளி கொள்ளுமிடத்து
முன்பு சொன்னது போல, பரமபதத்தில் ஒளி விடாமல் இருந்தாலும், கணக்கற்ற நித்யசூரிகள் இருந்தபோதிலும், அந்த அனுபவத்தை ஒரே ஒரு அனுபவம் போல தோன்றாமல், இங்குள்ளவர்கள் இந்த அனுபவத்தை இழந்து நிற்பதை உணர்ந்து, உண்ணாதவன் உடம்பு வெளுத்து உள்ள, இங்குள்ளவர்களும் அந்த அனுபவம் பெற வேண்டும் என்று மேலான ஆசையினால் திருமாலரிஞ்சோலை வரை வந்து அடியவர்களாகிய ஆச்சியர்கள் தன்னை கைபிடிக்கவேண்டும் என்று எதிர்பார்த்து மணவாள கோலத்தோடு நிற்கிறான். அங்கே பரமபதத்தில் எத்தனையோ சேதனர்கள் இருந்தாலும், இங்கே உள்ள அடியவர்கள் அது கிடைக்காமல் இழக்கிறார்களே என்று வருந்தி இங்கு வந்து நிற்கிறான் என்ற கருத்து. தான் ஒருவனாய் இருந்த பிரளய காலத்தில் அவன் ஆனந்தம் அடைய வில்லை என்று மகோபனிஷத் சொல்கிறது. இந்த நித்ய விபூதியில் இழக்கிறார்களே என்று நினைத்து தனியாக இருப்பதை எண்ணி வருந்துகிறான். தன்னையும் தன்னுடைய உடைமைகளையும் அடியவர்களுக்கு அள்ளி கொடுத்துகொண்டு இருப்பவன்; தன்னை அடையுமாறு / கைபிடிக்குமாறு, இடம் தேடி, திருவாய்பாடி ஆச்சியரை போல, யமுனை கரையிலும், பிருந்தாவனத்திலும் இரவும் இருட்டும் தேடி, ஒளிந்து, திருடி, கை கொள்ள முடியாதே பெரியாழ்வார் பெண் பிள்ளையை; வேத பயன் கொள்ள வல்ல விட்டு சித்தன் என்ற (பெரியாழ்வார் திருமொழி 2.8.10) ஆகையாலே, கோத்ர சூத்திரங்கள் வெளிப்பட திருமலையில் நின்று மங்கள சூத்திரம் கட்டி, மணவாளனாக திருமாலரின்சோலையில் நிற்கிறான்.
அந்த அழகிய மணவாளன் பள்ளி கொள்ளுமிடத்தில் அன்புடைய நாயகி நான்கு பேருக்கு நடுவில் முகம் காட்ட மாட்டாள் அன்றோ. படுக்கை அரையில் அன்றோ இவள் கைங்கர்யம் செய்வது. பள்ளிகொள்ளும் இடம் என்று சொன்னது, திருவரங்கம் கோவிலை நினைத்து. பள்ளி கொள்ளும் இடம் ஆவாது கோவில் என்று பட்டர் அருளி செய்வார்.
அடி கொட்டிட
அவன் திருவடிகளை பிடிக்கும்படியான உணர்ந்து இருக்கும் போது செய்யும் காரியங்கள் மட்டும் செய்யாமல், அவன் பள்ளிகொள்ளும் போதும், அவன் இனிதாக உறங்கலாம்படி திருவடிகளை மெல்ல பிடித்து விட நினைக்கிறாள்; ‘நிலமகள் பிடிக்கும் மெல்லடி‘ (திருவாய்மொழி 9.2.10) அன்றோ. சேஷத்துவமான ஸ்வரூபதிற்கு தக்கவாறு திருவடிக்கு குற்றேவல் செய்ய பாரிக்கிறாள்; அவனை அடைவதின் பலன் இதுவே அன்றோ.
கொள்ளுமாகில்
கைங்கர்யம் கொள்ளும் அவன் நினைவே உபாயம், கூடல் இழைப்பது போன்ற செயல்கள் அல்ல என்று நினைந்து இருப்பதன்றோ மோக்ஷம் வேண்டுபவர்களின் இயல்பு. அதை வெளிபடுத்துகிறாள்;
கூடிடு கூடலே
அவனாலே பெறு என்று இருந்த போதிலும் அவனை பெற்று அல்லது தரிக்க மாட்டாது ஆகையால், வழியில்லா வழியில் சென்று கூடலின் காலில் விழுகிறாள்; கூடல் இழைத்துஅவனை பெற பார்க்கிறாள்;
Leave a comment