திவ்ய பிரபந்தம்

Home

NT 3.9 கஞ்சன் வலை

நாச்சியார் திருமொழி 3.9

கம்ஸனானவன் உன்னை அழிப்பதாக நினத்த காலத்தில், மிக்க இருளை உடைய இரவில் பிழைத்து நிற்கின்ற இளம் பெண்களான எங்களுக்கு மன துக்கம் உண்டாவதற்காக வந்து பிறந்தாய் ; யசோதை பிராட்டியோ நீ பயப்படும் படி உன்னை அதட்ட மாட்டாள்; தீம்புகளிலே உன் கை வளரும்படி விட்டு வைக்கின்றாள்; வஞ்சனை உடைய, பூதனையின் மூலை பாலை அவளுடைய உயிருடன் சேர்த்து உறிஞ்சி உண்ட, லஜ்ஜை இல்லாதவனே, எங்கள் சேலைகளை தந்து அருள என்கிறார்கள்.

கண்ணனுக்கு இரண்டு வித தன்மைகள் உண்டு; ஒன்று பாண்டவர்கள் போல அவனை துதித்து வந்தால், அவர்களுக்கு வேண்டியதை செய்வான் ; சிசுபாலன் போன்றவர்கள் அவனை திட்டினாலும் அவர்களுக்கு வேண்டியதை செய்து கொடுப்பான்; இதுவரை துதி பாடி பார்த்து விட்டோம், ஒன்றும் பயன் இல்லை; இனி வைது பார்க்கலாம் பலன் வருகிறதா என்று பார்போம் என்று இந்த பாடலில் கண்ணனை திட்ட பார்க்கிறார்கள்.

கஞ்சன் வலை வைத்த அன்று

கம்ஸன், கண்ணனை அழிப்பதன் மூலம், நித்ய விபூதி, (மேல் உலகம்) லீலா விபூதி (பூமி) இரண்டையும் வலை வீசி அழிக்க முயன்ற அன்று; உள்ள அத்தனை பொருள்களையும் அழிக்க முயன்ற அன்று; அவனுடைய செல்வங்கள் இப்போது அழிந்தாலும், அவன் உயிருடன் இருந்தால், பிறகு மீண்டும் செய்து கொள்ளலாம் என்ற தவறான ஒரு நம்பிக்கையுடன், இன்னாருக்கு வலை விரித்தான் என்று சொல்ல முடியாதபடி, பொதுவாக வலை வைத்த அன்று என்கிறார். விஷம் கலந்த முலை பாலானது ஜகத்ஸ்வாமியான கிருஷ்ணனுக்கு அமுதம் போல இனிதாக இருந்தது என்று சொல்லும் இடத்தில் ரிஷி இதையும் சொல்கிறார்.  விஷம் கலந்த முலை பால் அமுதம் போல உயிர் தரிக்க வைத்ததால் அவன் ஜகத் சுவாமி என்று உறுதியானது என்று ரிஷி சொல்கிறார். ’தூய குழவியாய் விட பால் அமுதா அமுது செய்திட்ட மாயன் ‘ (திருவாய்மொழி 1.5.9) என்று சுவாமி நம்மாழ்வார் கூறியது குறிப்பிடப்பட்டு உள்ளது.

கார் இருள் எல்லில் பிழைத்து

கம்ஸன், கண்ணன் தப்ப முடியாதபடி அழிவதற்கு திட்டமிட்டான். ஆனாலும் இருள் அவனை காப்பாற்றி விட்டதே என்ற கருத்து; நள்ளிருளில் கண்ணனை வாசுதேவர் மதுரையில் இருந்து திருவாய்பாடி எடுத்து செல்லும் போது, இருளென்ன மாமேனி என்னும் படியான கண்ணனின் திருமேனி நிறத்தை ஒத்து இருந்த படியாலும், நள்ளிரவு ஆனதால் சிறையில் வாசுதேவர், தேவகியை காத்து கொண்டு இருந்த சிறை காவலர்கள் தூக்கத்திற்கு வசம் ஆகும் காலம் ஆகையாலும், இருளாலே கம்ஸன் விரித்த வலையில் இருந்து கண்ணன் பிழைத்தான் என்ற கருத்து. திருவாய்மொழி (6.4.5) ல் நம்மாழ்வாரும், ‘ வீங்கிருள்வாய், பூண்டு அன்று அன்னை புலம்பப் போய் ஆங்கோர் ஆய்க்குலம் புக்கதும்,’ இதே கருத்தை சொல்லி உள்ளார்.

பிள்ளை உறங்காவல்லி தாசரும், ‘கண்ணன் கைக்குழந்தை ஆதலால், தன்னை காப்பாற்றி கொள்ள முடியாதவன், பரிவோடு அவனை ரக்ஷிக்க வேறு யாரும் இல்லை, கம்ஸனும் அவன் ஆட்களும் எப்படியாது அவனை அழித்து விடுவது என்று இருந்தார்கள்; அந்த சமயத்தில் கண்ணனை காப்பாற்றியது அந்த இருளே அன்றோ, அதனால் நாம் அவ்விருளையே சரணம் புக வேண்டும் என்று பரிவோடு கூறியது ஐதீகம்.

நெஞ்சு துக்கம் செய்யப் போந்தாய் நின்ற இக் கன்னியரோமை

அப்படிபட்ட அன்புடையார்களால் கொண்டாடபட்ட இருள் அன்று அவனை காப்பாற்றி, இன்று எங்களை துன்பத்தில் ஆழ்த்துகிறதே என்று இருளை வெறுக்கிறார்கள்; பிறந்த நாள் அன்றே வாசுதேவரையும் தேவகியையும் துன்புறுத்தியதோடு அல்லாமல், தேவகி தவரித்து அத்தனை பெண்களையும் துன்புறுத்த ஆய்பாடி வந்தாய் என்கிறார்கள். கம்ஸன் வலையில் அகப்படாமல் தப்பிய கண்ணன், பெண் பிள்ளைகளுக்கு பாதுகாப்பாக இருப்பான் என்று நினைத்து இருந்தாம், அதுவே தங்களை துன்புறுத்துவதற்கு இன்றியாமையாத காரணமாகி விட்டதே என்று வருந்துகிறார்கள்;

அஞ்ச உரப்பாள் அசோதை

உன்னால் துன்புறும் நாங்கள் எங்கள் துன்பங்களை உன் தாயான யசோதையிடம் முறையிட்டால், அவளும் பெண்ணானதால் எங்களிடம் இரங்கி, அவள் உன்னை, நீ அஞ்சும் வண்ணம் கண்டிப்பாள் என்றால், அதுவும் இல்லை. ‘அங்ஙனம் தீமைகள் செய்வர்களோ, நம்பீ, ஆயர் மட மக்களை’ (பெரிய திருமொழி 10.7.11) என்பதன்படி, ‘இடை பெண்களை இப்படி துன்புறுத்தலாமோ’ என்று மனப்பூர்வம் இல்லாமல் ஒரு வார்த்தை சொல்லிவிட்டு, அவனை விரட்டி, மிரட்டி ஒன்றும் கண்டிக்காமல், ஒரு வாரத்தை யசோதை சொல்ல மாட்டாள் அன்றோ. இவளிடம் போய் சொல்ல வந்தோமே, இதற்கு கண்ணனை மேல் என்று நினைப்பார்கள். இவர்களுக்கு எதிரில் யசோதை ஒரு வார்த்தை சொல்வாளே தவிர இவன் அஞ்சும்படி கண்டிக்க மாட்டாள்;

ஆணாட விட்டிட்டு இருக்கும்

யசோதையிடம் முறையிட்டும் என்ன பலன் என்று யசோதை இளம் சிங்கமானான கண்ணன், தெரிந்து கொண்டு, இவர்களை துன்புறுத்துவதை ஒன்றுக்கு நூறாக படுத்த ஆரம்பிப்பான். இஷ்டபடி இவனை தீம்பு செய்ய விட்டுவிட்டு, இளம் வயதில் என்னமாய் தீம்பு செய்கிறான் என்று உகந்து அதனால், ‘தொல்லை இன்பத்து இறுதி கண்டாளே’ (பெருமாள் திருமொழி 7.8) என்றபடி பேரானந்தம் கொண்டவளாய் தன் கடமையை செய்து முடித்தவளாய் நினைத்து இருப்பாள்; கண்ணன், ‘பிறரிடம் முறையிட்டு என்னிடம் காரியம் செய்து கொள்ள நினைத்தீர்களோ’ என்று கேட்பான். 

வஞ்சகப் பேய்ச்சி பாலுண்ட மசுமை இலீ கூறை தாராய்

‘நீதான் பேய் முலைக்கும் தாய் முலைக்கும் வித்தியாசம் தெரியாதவன் ஆயிற்றே, பிறர் துன்பப்பட கண்டால் உனக்கு என்ன தெரியும்’ என்றார்கள். வால்மீகி ராமாயணம் ஆரண்ய காண்டம் (10.9)ல் கூறியபடி,

ப்ரஸீதந்து பவந்தோ மே ஹ்ரீரேஷா ஹி மமாதுலா. * யதீதரிஷைரஹஂ விப்ரைருபஸ்தேயைருபஸ்திதஃ৷৷10.9৷৷

‘முனிவர்களாகிய நீங்கள் உகந்து அருள்வீர்களாக, வந்து அடைய தகுந்த ந உங்களிடம் நான் வர வேண்டிய நேரத்தில், உங்களைப் போன்ற பிராமணர்கள், என்னை அணுகியது என்னை அளவிட முடியாத அவமானத்திற்கு (லஜ்ஜை) உள்ளாக்கியது’ என்று தான் முற்பட்டு அவர்களை காப்பாற்றாததனால் வெட்கம் அடையும் சக்கரவர்த்தி திருமகனாக இருந்தால், எங்கள் வருத்தம் அறிவான்; ’பெண்களின் வருத்தம் அறியாத பெருமானான உனக்கு எப்படி தெரியும் என்கிறார்கள். நீ வெட்கம் அற்றவன் அன்றோ, நீ யாராக வேண்டுமானாலும் இரு, எங்கள் சேலைகளை கொடுத்து அருள் ‘ என்கிறார்கள். 

Leave a comment