திவ்ய பிரபந்தம்

Home

NT 3.10 கன்னியரோடு

நாச்சியார் திருமொழி 3.10

எமக்கு ஸ்வாமியாய், கரிய நிறத்தனான கண்ணன், ஆயர் சிறுமியரோடு செய்த திவ்ய லீலைகளை குறித்து பொன் போன்று அழகிய மாடங்களால் சூழப்பட்ட ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ளவர்களுக்கு தலைவன் ஆன பெரியாழ்வாருக்கு திருமகளான ஆண்டாள் இனிய இசையாலே அருளிசெய்த சொல் மாலையாகிய இந்த பத்து பாட்டுக்களையும் கற்க வல்லவர்கள் அரச்சிராதி மார்க்கமாக சென்று பரமபதத்தை அடைந்து அவ்விடத்திலே நித்ய வாசம் செய்து அருளிகிற திருமாலோடு கூடி தினமும் அனுபவம் கொண்டு வாழ்ந்து இருப்பர். 

தன் விருப்பம் நிறைவேற பெற்று இந்த பதிகத்தை முடிக்கிறார். கண்ணனோடு சேர்த்தி இது வரையில் சொல்லவில்லை என்றாலும், அடுத்த பதிகத்தில் கண்ணன் பிரிந்து கூடல் இழைக்கையாலே, இங்கு பிரிவிற்கு முந்தி சேர்ந்து இருக்க வேண்டும் என்பது உரையாசிரியர் கருத்து.

கன்னியரோடு எங்கள் நம்பி கரிய பிரான் விளையாட்டை

கன்னியர் என்றதால் இவன் செய்யும் தீம்புகள் அறியாமல், இவன் சொன்ன வார்த்தைகளை உண்மை என்று நம்பி இருக்கும் பருவத்தை உடையவர்கள் என்று கருத்து. காலமெல்லாம் அனுபவத்தாலும் என்றும் புதுமை மாறாத கண்ணனோடு ஒத்த வயதை உடையவர்கள் என்றும் கொள்ளலாம். இவன் செய்யும் தீம்புகளை பொறுக்க முடியாதவர்கள் என்றும் சொல்லலாம். ஐந்து லக்ஷம் குடியில் உள்ள எல்லா பெண்களையும் படுத்தலாம் படி துஷ்டதனத்தால் நிறைந்து இருப்பவன் என்றும் அவன் நெஞ்சில் துஷ்டம் இல்லாவிட்டாலும் நாங்கள் மேல் விழும்படி அழகுடையவன் என்றும் உண்மையில் கெட்ட புருஷனுடைய சேஷ்டை அல்ல என்றும் பரமாத்மா ஜீவாத்மாக்களோடு சேர்க்கை கூடி விளையாடுகின்ற விளையாட்டே என்கிறார்.

இன்னிசையால் சொன்ன மாலை

பால காண்டம் (4.8)ல் சொன்னபடி, பாட்யே கேயே ச மதுரஂ ப்ரமாணை ஸ்த்ரி பிரந்விதம், இராமாயண காவியம் மூன்று அளவுகளுடன் கூடியதாய், படிக்கும் போதும், பாடும் போதும் இனிமையாக இருக்கும். திருவாய்மொழியில் நம்மாழ்வார் (7.9.11)ல் சொல்வது போல எங்ஙனே சொல்லினும் இன்பம் பயக்குமே என்று இராகத்தோடு பாடினாலும், இராகம் இல்லாமல் பாடினாலும் அனைவர்க்கும் இனிமையாய் எம்பெருமானுக்கு மாலை போல போக்கியமாக இருக்கும்.

மன்னிய மாதவனோடு வைகுந்தம் புக்கிருப்பாரே 

இந்த பத்து பாசுரங்களின் பொருள் அறிந்து கற்றவர்கள், பரமபதத்தில் ஸ்ரீமன் நாராயணன், ஆண்டாள், மற்றும் கோபியரோடு சேர்ந்து, அவர்கள் இங்கு பெற்ற சேர்க்கை அனுபவத்தை, நித்யமாக பெற்று அனுபவிப்பார்கள் என்று சொல்லி இந்த பதிகத்தை முடிக்கிறார். 

Leave a comment