மாமிமார் மக்களே எல்லோம் மற்றும் இங்கு எல்லாரும் போந்தார் * தூமலர்க் கண்கள் வளரத் தொல்லை இராத் துயில்வானே * சேமம் மேல் என்று இது சாலச் சிக்கென நாம் இது சொன்னோம் * கோமள ஆயர் கொழுந்தே குருந்திடைக் கூறை பணியாய்
நாச்சியார் திருமொழி 3.8
முன்பு இரவுகளில் பரிசுத்தமான மலர் போன்ற கண்கள் நித்திரை வருவதற்கு பரவசம் கொள்வதை போல, பள்ளி கொள்பவனே, இந்த பொய்கை கரையில் நிற்பவர்கள், உனக்கு தேவிமார் ஆகும் முறையில் மட்டும் இல்லை, மற்றுமுள்ள மாமிமார்களும், அவர்கள் தாய்மார்கள் முதலியோரும் இவ்விடத்தில் வந்து இருக்கிறார்கள்; நீ செய்கின்ற இந்த தீம்பானது மிகவும் தகுதி ஆனது அன்று; இந்த வார்த்தையை நாங்கள் உண்மையாக சொல்கிறோம்; இடையர்களுக்கு இளம் கொழுந்து போன்றவனே, குருந்த மரத்தில் இருந்து எங்கள் வஸ்திரங்களை தந்து அருள்வாய்.
சென்ற பாடலில் நீதி இல்லாததை செய்யாதே என்று சொன்னவர்கள், அதற்கு அவன் இரங்காததால், உறவு முறைகளை சொல்லி, அவர்கள் எதிரில் தீங்கு செய்து அபவாதம் தேடி கொள்ளாதே என்று அறிவுறுத்துகிறார்கள்.
மாமிமார் மக்களே எல்லோம் மற்றும் இங்கு எல்லாரும் போந்தார்
கண்ணன் மேன்மேலும் தீம்பு செய்வது ஊராருக்கு தெரியாது என்ற காரணத்தினால் என்று கருதிய இவர்கள், ஊரார் இங்கு உள்ளனர் என்று சொல்லி அவனை பயமுறுத்த பார்க்கிறார்கள்; அதற்கு அவன், ஊரில் அபவாதம் வந்தால், தான் தன் வயதை ஒத்த பெண்களுடன் தான் தீம்பு செய்ததாக சொல்லிவிட்டு போகிறேன் என்று சொன்னான். ஆய்பாடி முழுவதும் நோன்பு நோற்பதால், தங்களுடன் மாமிமார்களும் அவர்களின் தாய் மார்களும் வந்திருப்பதாக கூறினார்கள். அதற்கு கண்ணன் நாம் சேர்ந்து இருப்பதற்கு இடையூறாக வயதானவர்களை ஏன் அழைத்து வந்தீர்கள் என்று கேட்டான்.
தூமலர்க் கண்கள் வளரத் தொல்லை இராத் துயில்வானே
உன்னுடன் பழகிய முந்தய பல இரவுகளில் நீ வெகு நேரம் சேர்ந்து இருந்து, காலையில் வெகு நேரம் கழித்தே எழுந்து அருள்வது என்பதாலும் அது வரை உறங்கி கொண்டு இருப்பாய் என நினைத்து இவர்களை அழைத்து வந்தோம் என்றார்கள். அது நேர்மாறாக எங்களுக்கு முன்பே இங்கு வந்து இருப்பாய் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை என்கிறார்கள். அவன் மேலும் சில காரியங்கள் செய்ய தொடங்கினான்.
சேமம் மேல் என்று இது சாலச் சிக்கென நாம் இது சொன்னோம்
‘நீ இப்படி செய்வது நமக்கு நல்லது அன்று ; நாங்களும் நீயும் கூடி இருக்க வேண்டும் எப்போது நாங்கள் விரும்புகிறோம்; ஆனால் நீ செய்யும் காரியங்களால் அது நடக்காமலே போய் விடும் போல இருக்கிறது’ என்று இவர்கள் சொல்ல, கண்ணன் யார் சொன்னது என்று கேட்கிறான். ’நாம் இது சொன்னோம்’ என்று இவர்கள் சொன்னார்கள். கண்ணன் கேலியாக சிரித்தான். ’உண்மையாகவே சொன்னோம்; இதை நீ உணரவில்லை என்றால் உனக்கு பல அனர்த்தங்கள் விளைய போகின்றன ‘ என்றார்கள். அதற்கும் கண்ணன் அதனால் தனக்கு நரகம் கிடைத்தாலும் சரி என்று சொல்லி அங்கு இருந்த ஒரு சில ஆடைகளை எடுத்து தன் அரையில் உடுத்தி தனது மென்மைக்கு பொருத்தமாக இருக்கிறது பாருங்கள் என்றும் சொன்னான் ;
கோமள ஆயர் கொழுந்தே குருந்திடைக் கூறை பணியாய்
‘அழகாக இருக்கிறது. உனது மென்மை மிக்க ஆயர் கொழுந்தான உனக்கு தகுதியாய், பொருத்தமாக உள்ள நீ அணிந்த ஆடைகளை, நாங்கள் கேட்கவில்லை. உன் திருமேனிக்கு சம்பந்தம் இல்லாமல் குருந்த மரத்தில் கிடக்கிற வஸ்திரங்களை தருவாயாக’ என்றார்கள்.
Leave a comment