நீரிலே நின்று அயர்க்கின்றோம் நீதி அல்லாதன செய்தாய் * ஊர் அகம் சாலவும் சேய்த்தால் ஊழி எல்லாம் உணர்வானே * ஆர்வம் உனக்கே உடையோம் அம்மனைமார் காணில் ஓட்டார் * போர விடாய் எங்கள் பட்டைப் பூங்குருந்து ஏறி இராதே
நாச்சியார் திருமொழி 3.7
பிரளய காலம் முதல் இந்த உலகை காப்பாற்ற வேண்டும் என்ற சிந்தனையோடு இருப்பவனே, ஜலத்தில் நின்று, வருத்தப்பட்டுக் கொண்டு நிற்கின்றோம்; அநீதியான செயல்களை நீ செய்கின்றாய் ; உன் விஷயங்களை விட்டு ஓடி விடலாம் என்று நினைத்தால் எங்கள் ஊராகிய திருவாய்பாடியும் அதில் வீடுகளும் மிகவும் தூரத்தில் நின்றன. நீ எங்கள் விஷயத்தில் வருத்தபட செய்தாலும், உன்னிடம் அன்பு கொண்டு, ஈடுபாடு கொண்டு உள்ளோம். எங்கள் தாய்மார் உன்னுடன் சேர்ந்து இருப்பதை கண்டால், அதற்கு இசைய மாட்டார்கள். எங்களுடைய சேலைகளை கொடுத்து அருள்வாயாக என்கிறார்கள். பூத்து இருந்த குருந்த மரத்தின் மேல் ஏறி கொண்டு தீமை செய்யாதே என்கிறார்கள்.
தாமரை தண்டுகள் விஷத்தை கொட்டி துன்புறுத்துகின்றன என்று சொல்லிய போதும் அவன் இரங்கவில்லை என்பதால், இவர்கள் இப்படி துன்பப் பட்டு கொண்டு இருக்கும் போது, அவன் நீதியற்ற செயலை செய்தான் என்று சொல்லி, அவனிடம் அன்பு கொண்ட, அவர்களை துன்புறுத்தாதே என்கிறார்கள்.
நீரிலே நின்று அயர்க்கின்றோம்
கோழி அழைப்பதற்கு முன், பொழுது விடிவதற்கு முன், நீ எழுந்து வருவதற்கு முன், வந்து, இந்த குளிர்ந்த காலத்திலே, நீரில் வெகு நேரம் நின்று, அறிவு கலங்கி, நாங்கள் படும் துன்பங்களை நீ காண்பாயாக. அதற்கு கண்ணன், ‘நீங்கள் நீரில் நின்றுகொண்டு உங்களை வருத்தி கொள்வதுடன், என்னையும் மரத்தில் இருந்து கீழே இறங்க விடாமல் துன்ப படுத்துகிறீர்கள்’ என்று சொல்லி, வஸ்திரங்களையும் தராமல், மேலும் சில காமுக வியாபாரங்களை செய்ய தொடங்கினான்.
நீதி அல்லாதன செய்தாய்
‘நீ இப்படி நீதி இல்லாத காரியங்களை செய்கிறாய்’ என்று கூறினார்கள். கண்ணன் தான் ஒரு ஸ்வதந்திரமாக செயல் படுபவன் என்றும், இப்படி தான் செய்வேன் என்றும், அவர்களை அவர்கள் தாய் தந்தை தமையனிடம் சொல்லுங்கள் என்கிறான்.
ஊர் அகம் சாலவும் சேய்த்தால்
இங்கு இருந்து ஊரும் எங்கள் அகமும் வெகு தூரத்தில் உள்ளன என்றார்கள். அப்படியானால் உங்கள் துன்பத்திற்கு வேறு என்ன பரிகாரம் உள்ளது என்று கண்ணன் வினவினான்.
ஊழி எல்லாம் உணர்வானே
பிரளய காலத்தில், எல்லா உயிர்களையும் தன் வயிற்றில் வைத்து காத்து, தொடர்ந்து எல்லோரையும் எப்படி காப்பாற்றுவது என்றும் எப்போதும் நினைத்து கொண்டு இருப்பவனே, பிறரால் ஏற்படும் அபாயங்களுக்கும், தங்களால் ஏற்படும் துன்பங்களுக்கும் உன்னை கொண்டே தீர்த்து கொள்வது போல, உன்னால் வந்த இந்த துன்பங்களுக்கும் நீயே தீர்வு சொல்ல வேண்டும் என்று சொல்கிறார்கள்.
ஸதேவ ஸோம்யேதமக்ர ஆஸீதே கமேவாத் வீதியம் (சாந்தோக்கியம் 6.2.1) – குழந்தாய், நாம ரூபங்களுடன் காணப்படும் இந்த உலகம், பிரளய காலத்தில், நாமரூபங்கள் இல்லாததாலும், ஒன்றாகவும், தன்னை போல வேறு ஒன்று இல்லாததாலும், இரண்டாவது இல்லை ஆதலாலும் சத் எனபடும் பிரம்மமாகவே இருந்தது.
பிரளய காலத்திற்கு பின் மீண்டும் உயிர்களை படைத்து காத்ததிற்கு காரணம் தான் செய்ததை யாரும் மறுக்க வில்லை என்பதால் என்றும், இப்போது தான் சொல்வதை இவர்கள் மறுப்பதாகவும் சொல்கிறான்.
ஆர்வம் உனக்கே உடையோம்
‘நீ செய்வதை நாங்கள் தடுப்பதில்லை, மேலும் நாங்கள் உன் மேலும் பேரன்பு கொண்டு உள்ளோம்’ என்றார்கள். இப்படி சொன்னாலும், அதன்படி செய்வதில்லையே என்று கண்ணன் சொன்னான்.
அம்மனைமார் காணில் ஓட்டார்
‘உன்னுடன் சேர்க்கைக்கு எங்களுக்கு விருப்பம் என்றாலும் எங்கள் தாய்மார்கள் அதற்கு உடன் பட மாட்டார்கள்; அவர்களிடம் பேசி அவர்கள் சம்மதத்தை வாங்கி உனக்கு உடன் பாடுகிறோம்’ என்றார்கள். கண்ணனும், தான் அவர்களுக்கு உதவ வேண்டும் என்றுதான் நினைப்பதாகவும், ஆனால் அவன் நெஞ்சு அதற்கு சம்மதம் தரவில்லை என்றும் சொல்லி அவர்களை தன்னுடைய நெஞ்சத்தை இசைய வைக்க சொல்கிறான். ’உன் நெஞ்சம் இசையாவிட்டாலும், எங்களுக்கு உதவு ‘ என்றார்கள். அவர்களுக்கு உதவுவது போல, சில வஸ்திரங்களை தன் ‘செண்டுகோல்’ என்ற குச்சியில் சற்று தள்ளி அவர்களுக்கு எட்டாதது போல வைத்து வேறு வேலை பார்க்க தொடங்கினான்.
போர விடாய் எங்கள் பட்டைப் பூங்குருந்து ஏறி இராதே
இவர்கள் மீண்டும் இவனிடம் வஸ்திரங்களை தருமாறு வேண்டுகிறார்கள்; ‘இப்படி வஸ்திரங்களை சிறிது தாழ்த்தி வேறு பக்கம் பார்த்து உன் அழகினை காட்டி எங்களை நிலை குலைய செய்யாதே ‘ என்று சொல்கிறார்கள்.
Leave a comment