திவ்ய பிரபந்தம்

Home

NT 3.6 தடம் அவிழ்

நாச்சியார் திருமொழி 3.6

விசாலமாகவும் மலர்ந்த தாமரைகளை உடையதுமான தடாகத்தில் தாமரை தண்டுகளானவை, எங்கள் கால்களை கடிக்க, விஷத்தை உடைய தேள் கொட்டினார் போல மிகவும் வருத்தபட்டோம். குடங்களை தூக்கி உயர தூக்கி எறிந்து குடகூத்தை ஆடுவதற்கு சாமர்த்தியம் உள்ள எம்முடைய தலைவனே, நீ செய்யும் தீம்புகளையெல்லாம் விட்டு எங்கள் பட்டு வஸ்திரங்களை கொடுத்து அருள் என்கிறார்கள்.

சென்ற பாட்டில் மீன்கள் கடித்தன என்று சொல்லி பார்த்து அது அவனிடம் பலிக்க வில்லை என்றதால் இந்த பாட்டில் தாமரை தண்டுகள் விஷத் தேள் போல கடிக்கின்றன என்று சொல்லி அவனிடம் இரக்கத்தை எதிர் பார்க்கிறார்கள்.

தடம் அவிழ் தாமரைப் பொய்கைத் தாள்கள்

தாமரை தண்டுகள் கடித்தால், பொய்கையில் இருந்து எழுந்து கரைக்கு வாருங்கள் என்கிறான். “செக் கமலர்த்தவர் போலும், கண் கை கால் செங்கனி வாய், அக் கமலத்திலை போலும் திருமேனி யடிகளுக்கே” (திருவாய்மொழி 9.7.3); ”கண்ணா! கண் கை கால் தூய செய்ய மலர்களாச் சோதிச் செவ்வாய் முகிழதா, சாயல் சாமத் திருமேனி தண் பாசடையா, தாமரை நீள் வாசத் தடம் போல் வருவானே” (திருவாய்மொழி 8.5.1) என்கிறபடியே இவன் ஒரு தாமரை தடாகம் போல இருப்பவன். கீழே இந்த தாமரை பொய்கை துன்புறுத்துகிறது, மேலே அந்த தாமரை துன்புறுத்துகிறது என்கிறார்கள். தடம் என்பது கரையையும் பெருமையையும் காட்டும். கரை உடையதாய், பெருமை உடையதாய் உள்ள தாமரைகளை கொண்ட பொய்கை என்பது கருத்து.

விடம் தேள் எறிந்தாலே போல

விஷம் உள்ள தேள் கொட்டினார் போல உள்ளே உள்ள தாமரை தண்டுகள் துன்புறுத்துகின்றன, தரையில் உள்ள தாமரை தடம், விஷம் இல்லாமல் துன்புறுத்துகின்றது என்கிறார்கள்.

வேதனை ஆற்றவும் பட்டோம்

இவனும் மரத்தில் பூச்சிகளும், புழுக்களும் கடிக்க இதே நெடு நேரம் துன்பம் அடைகின்றான்; இது அவர்களுக்கு தெரியவில்லை; அவனோடு சேர்க்கையையும் இழந்து, ஆடைகளையும் இழந்து, மானத்தையும் இழந்துவிடுவோ என்று பயம் வந்ததால் நேரம் நெடு நேரமாக தோன்றுகிறது; இவனுக்கும் அவர்கள் இல்லாமல் தரிக்க மாட்டான் என்பதாலும், அவர்களை ஏற்றுக்கொள்வதிலும் தயக்கம் இல்லாதவன் ஆகையாலும் இவனுக்கும் நேரம் நெடு நேரமாக தெரிகிறது. தன் பட்டத்து இராணிக்கு தாழ நிற்பதால் சக்ரவர்த்திக்கு குறை ஒன்றும் இல்லை என்பது போல, இவர்கள் விஷயத்தில் இவன் விட்டு கொடுப்பான் என்ற கருத்து.

‘குருந்த மரத்தில் ஏறியது நீயே எடுத்த முடிவு, எங்களுடைய வஸ்திரங்களை கொடுத்து இருந்தால், மரத்தில் இருந்து இறங்கி துன்பங்களில் இருந்து விடு பட்டு இருப்பாய் ‘ என்று சொன்னார்கள். அவன், ‘வஸ்திரங்களை கொடுத்து உங்கள் கூட்டதை பிரிக்க எனக்கு மனம் இல்லை’ என்று சொல்ல, இவர்கள், ‘நாற் சந்தியிலே வெட்கம் இல்லாமல் குட கூத்தாடி பெண்கள் கூட்டத்தை கூட்டும் திறமை உள்ளவன்’ என்கிறார்கள்.

குடத்தை எடுத்தேற விட்டுக் கூத்தாட வல்ல எம் கோவே

இப்படி இவர்கள் பதில் கூற முடியாதபடி சொன்னதாலும், தங்கள் ஈடுபாடு தோன்ற வார்த்தை சொல்வதால், இவன் சில புருஷ சேஷ்டிதங்களை செய்ய தொடங்கினான்.

படிற்றை யெல்லாம் தவிர்ந்து எங்கள் பட்டைப் பணித்தரு ளாயே

இப்படி செய்வதையெல்லாம் தவிர்த்து என்று நிர்பந்த படுத்த, அவன் தன்னுடைய வஸ்திரத்தை அவிழ்க்க தொடங்கல், இவர்கள் இதை உடுத்தி கொண்டு போனால் எங்கள் வீட்டில் கேள்வி கேட்பார்கள் என்று சொல்லி, தங்கள் பட்டு துகில்களை கொடுத்து அருள்வாயாக என்கிறார்கள்.

Leave a comment