காலைக் கது விடுகின்ற கயலோடு வாளை விரவி, * வேலைப் பிடித்து என்னை என் அன்னைமார்கள் ஓட்டில் என்ன விளையாட்டோ * கோலச் சிற்றாடை பலவும் கொண்டு நீ ஏறி இராதே * கோலம் கரிய பிரானே குருந்திடைக் கூறை பணியாய்
நாச்சியார் திருமொழி 3.5
கறுத்த திருமேனியை உடைய கண்ணனே, கயல் மீன்களும், வாளை மீன்களும், ஒன்றாய் கூடி, எமது கால்களை கடிக்கின்றன ; நீ இப்படி எங்களை வருத்துவதை கேள்விப்பட்டு எங்கள் தமையன்மார்கள், வேலை பிடித்து, உன்னை துரத்தி விட்டால் அதற்கு பின் என்ன விளையாட்டாய் முடியும் ? நீ அழகிய சிற்றாடைகள் அணிந்து கொண்டு மரத்தின் மேல் ஏறாமல் குருந்த மரத்தின் மேல் உள்ள எங்கள் ஆடைகளை எடுத்து கொடுத்து அருள வேண்டும் என்கிறார்கள்.
ஆண்டாளுக்கு இடைச்சி பாவனை ஒடுகையாலே இடையான அவனை போல, இவளும் இடை குடியில் பிறந்த ஒருத்தி, அவனுடைய திருவுள்ளத்தை அறிந்தாள் ஒருத்தி ஆகையாலே, ஸ்ரீ கஜேந்திரன் முதலையால் இடர் பட்ட போது, தன் மேன்மை பாராமல் அந்த யானை துன்புற்ற பொய்கையிலே அவரசமாக ஓடி வந்து, உதவி, அதனுடைய பேராபத்தை போக்கடித்தபின்பும், இன்னும் முன்னரே வந்து காப்பாற்றி இருக்கலாமே, இடர் பட்ட பின்பு உதவுவது ஒரு பரிகாரம் ஆகுமா என்று வருந்துகிறார். இதனை அறிந்த ஒருத்தி, கஜேந்திரனை கொடுமை படுத்தியது ஒரு நீர் புழு என்று கூட கருதாமல், ஓடி வந்து உதவிய நீ, வாளை மீன், கயல் மீன் என்று எங்களை கடித்ததை கேள்வி உற்று, மரத்தின் மேல் ஏறி எங்கள் ஆடைகளை எடுத்து கொடுத்து விடுவான் என்று நினத்து சொல்கிறாள்.
கஜேந்திர ஆழ்வான் கூக்குரல் கேட்ட உடன், சேனை முதலியார் கொடுத்த கைலாகை (கைகொடுதத்தல்) மதியாது, கொண்டு வரப்பட்ட ரத்ன பாதுகையையும் ஏற்காமல், ‘இது என்ன, இது என்ன’ என்று திவ்ய மகிஷிகள் வியந்து திகைக்கவும், வாகன அலங்காரம் இல்லாமல், பெரிய திருவடி மீது ஏறாமல் ஓடி வந்த எம்பெருமானின் வேகத்திற்கு நமஸ்காரம். அடியவனான கஜேந்திரன் கை எடுத்து கூப்பிடும் படி வைத்த தனக்கு கைகொடுக்க வந்ததை தவிர்த்தான். அவன் கால் நொந்து கூப்பிடும் போது தனக்கு பாதுகையும் வேண்டுமோ என்றான். இப்படி நீ பட்ட பாட்டை மறந்து விட்டாயா என்று இவர்கள் கேட்கிறார்கள். ‘கானமர் வேழம்’ (பெரிய திருமொழி, 2.3.9) என்ற பாட்டில் சொல்லியபடி ஒரு நீர் புழு கவ்வினதற்கு அந்த அளவு பாடுபட்ட நீ, இரண்டு நீர் புழுக்கள் கவ்வும் போது வஸ்திரங்களை கொடுத்து உதவ வேண்டாமா என்கிறார்கள். அது பிறரால் வந்த துன்பம், இது நீங்களே விளைவித்து கொண்டது என்று கண்ணன் மேலும் சில விளையாட்டுக்களை தொடங்கினான்.
வேலைப் பிடித்து என்னை என் அன்னைமார்கள் ஓட்டில் என்ன விளையாட்டோ
நாங்கள் நெடு நேரம் இப்படி நோவு பட்டு உன்னை வேண்டிய போதும் நீ நாங்களுக்கு வஸ்திரங்களை தரவில்லை என்றால், நாங்கள் எங்கள் தகப்பன் மற்றும் தமயன்மார்களிடம் முறையிடுவோம், அவர்கள் வேல் கொண்டு ஓடி பிடித்து உன்னை கட்டி வைப்பார்கள். நாங்கள் உன்னிடம் பட்ட பாட்டை விட பல மடங்கு நீ பாடுவாய் என்றதற்கு, அவன் அதற்கு பயப்படாமல், ஒவ்வொரு வண்ணம் கொண்ட வஸ்திரத்தையும் இடையில், தலையில் என்று உடுத்தி, தன்னை வண்ண வஸ்திரங்களால் அழகு படுத்தி கொண்டு, மற்றவற்றை குருந்த மரத்தில் கட்டி வைத்து, தனக்கு எப்படி பொருத்தமாக இருக்கிறது, இதை ஏன் கேட்கிறீர்கள் என்று கேட்டான்.
கோலச் சிற்றாடை பலவும் கொண்டு நீ ஏறி இராதே, கோலம் கரிய பிரானே குருந்திடைக் கூறை பணியாய்
இவை உன் திருமேனிக்கு பொருத்தமாக உள்ளன, அவற்றை நாம் கேட்கவில்லை, மரத்தில் உள்ள மற்ற ஆடைகளை குடு போதும் என்றார்கள்.
Leave a comment