எல்லே ஈது என்ன இளமை எம் அனைமார் காணில் ஓட்டார் * பொல்லாங்கு ஈது என்று கருதாய் பூங்குருந்து ஏறி இருத்தி,* வில்லால் இலங்கை * அழித்தாய் நீ வேண்டியது எல்லாம் தருவோம் * பல்லாரும் காணாமே போவோம் பட்டைப் பணித்து அருளாயே
நாச்சியார் திருமொழி 3.3
வில்லாலே இலங்கையை நாசம் செய்து அருளினவனே, இது என்ன பிள்ளைதனம், எங்களுடைய தாய்மார்கள், கண்டால், மறுபடி எங்களை வீட்டில் வழி வர விட மாட்டார்கள். நீயோ என்றால், எங்களை எல்லோரும் ஏசும்படி நிர்வாணமாக ஆக்கி நிறுத்தி இருக்கிறாயே, இது பொல்லாத காரியம் இல்லை என்று நினைக்கிறாயே. பூ பூத்து இல்லாமல் இருக்கின்ற குருந்த மரத்தில் ஏறி நிற்கின்றாய் ; நீ வேண்டியது எல்லாம், கொடுக்கிறோம், ஊரில் உள்ள பலரும் காணாதபடி போகிறோம்; எங்களுடைய பட்டு சேலைகளை கொடுத்து அருள வேண்டும்.
இவர்கள் நீண்ட நேரம் நீரில் நின்று குளிராலும், கால்களை கவ்வுகின்ற மீன்கள் மூலமும் துன்புற்று வந்த போது, கண்ணன் அவர்களின் துகில்களை குருந்த மரத்தின் மேல் ஏறி உயரத்தில் கட்டி வைத்தான். நாங்கள் துன்புறும் போது, நீ பேசாமல் இருக்கலாமா, வஸ்திரங்களை கொடுத்து விடு என்று சொல்கிறார்கள். நீங்கள் கரையில் ஏறுங்கள், தருகிறேன் என்கிறான். இதனை உண்மை என்று நம்பி சிலர் கரையில் ஏற, கண்ணன் அவர்களின் அவயங்களை உற்று நோக்கி, புன்முறுவல் செய்து, சில காமுக வியாபாரங்களை செய்கிறான். அதை கண்டு அவர்கள் சொல்வது இந்த பாடலில் வருகிறது.
எல்லே ஈது என்ன இளமை
என்ன இது ஒரு சிறு பிள்ளைத்தனமாக உள்ளது என்கிறார்கள். கண்ணன், நீங்களும் 15 வயது பெண் போலவா நடக்கிறீர்கள், சிறு பிள்ளை போல், உடையை கரையில் வைத்துவிட்டு குளிக்க செல்கிறீர் என்று சொன்னான். இப்படி நாம் இருவரும் ஒத்த வயதை உடையவர் போல உள்ளோம், ஆகவே நாம் சேர்ந்து இருப்போம் என்கிறான்.
எம் மனை மார் காணில் ஒட்டார்
நாங்கள் இசையாமல் இல்லை, எங்கள் வீட்டில் தாய் தந்தையர் இதற்கு சம்மதிக்க மாட்டார்கள், அதனால் நாங்கள் முடியாது என்கிறோம் என்றார்கள். கண்ணன், தனக்கும் எத்தனையோ உறவினர்கள் உண்டு என்றும், இருந்தும் தான் இவர்களையே அணைக்க விரும்புவதாக சொன்னான். உங்களுக்கு ஆசை இல்லையா என்று கேட்க அவனுக்கும் தங்களுக்கும் வித்யாசம் உண்டு என்கிறார்கள்.
பொல்லாங்கு ஈது என்று கருதாய், பூங்குருந்து ஏறி இருத்தி
‘உலகத்தினர் கூறும் பழிகளுக்கு நாங்கள் அஞ்சுகிறோம், நீ பழியாக நினைப்பத்தில்லை. நீ பூரித்து போகிறாய். இதுவே உனக்கும் எங்களுக்கும் உள்ள வித்யாசம்’ என்கிறார்கள். ’இப்படி சொன்னாலும், உங்களுக்கு குருந்த மரத்தில் உள்ள வஸ்திரங்களை தரமாட்டேன்’ என்று சொல்லி, குருந்த மரத்தில் உள்ள பூக்கள் போல பொருந்தி, இறங்கி வராமல் இருந்தான்.
வில்லால் இலங்கை அழித்தாய்
‘இராமாவதாரத்தில், ஒரு பெண்ணுக்காக உண்ணாது, உறங்காது, ஒலி கடலை ஊடறுத்து, வில் கொண்டு இலங்கையை அழித்தாய். சீதாபிராட்டிக்காக, பிரமன் முதலானார் கொடுத்த வரங்களால் அஸ்திரங்கள் பெற்று, அழியாதபடி இலங்கையை கட்டமைத்ததை, மனிதர்களுக்கே உரித்தான வில்லால், அடியோடு அழியும்படி பண்ணின உனக்கு இந்த தன்மை நேர் எதிர் மாறாக மாறி உள்ளதே’ என்கிறார்கள். கண்ணன், ‘என் தன்மையும் மாறவில்லை, உங்கள் தன்மை சீதா பிராட்டி போல, வெளிப்பட்டு, என் நினைவோடு ஒத்து ஒருந்தால், நான் உங்கள் காரியம் செய்வேன் என்கிறான். ‘உன் நினைவின் படி நடக்க ஒன்றும் தடை இல்லை’ என்கிறார்கள்.
நீ வேண்டியது எல்லாம் தருவோம்
அப்படியானால் என் மடி மேல் ஏறி என்னை அணைத்து கொள்ள தயார் ஆகுங்கள் என்கிறான்.
பல்லாரும் காணாமே போவோம் பட்டைப் பணித்து அருளாயே
இப்படி எல்லோரும் காணும் இடத்தில் வேண்டாம், காணாத இடத்திற்கு செல்லலாம் என்கிறார்கள். நாலு பேர் முன்னால் நடக்கும் படி எங்கள் ஆடையை கொடுத்து அருளவாய் என்கிறார்கள்.
Leave a comment