இது என் புகுந்து இங்கு அந்தோ இப்பொய்கைக்கு எவ்வாறு வந்தாய் * மதுவின் துழாய் முடி மாலே மாயனே எங்கள் அமுதே * விதி இன்மையால் அது மாட்டோம் வித்தகப் பிள்ளாய் விரையேல் * குதி கொண்டு அரவில் நடித்தாய் குருந்திடைக் கூறை பணியாய்
நாச்சியார் திருமொழி 3.2
இங்கே, என்ன காரியம் நடந்து விட்டது, ஐயோ, இந்த பொய்கைகக்கு எவ்வழியாலே வந்தாய், தேன் மாறாத இனிய திருதுழாய் மாலை சூடிய திரு அபிஷேகத்தை உடையவனே, பெரியவனே, ஆச்சரியமான சக்தி உடையவனே, எங்களுக்கு அம்ருதம் போல இனிமையானவனே, விதி இல்லாமையாலே உன்னுடன் சேர்க்கைக்கு இசையமாட்டோம், ஆச்சர்ய சேஷ்டைகளை உடைய பிள்ளையே, அவசரபட வேண்டாம், காளிய நாகத்தின் மேல் குதித்து நர்த்தனம் புரிந்தவனே, குருந்த மரத்தின் மேல் இருந்து எங்கள் துகில்களை கொடுத்து அருள்வாய் என்கிறார்கள்.
இவர்கள் தம் இஷ்டபடி தங்களது வஸ்திரங்களை எடுத்து செல்ல வேண்டும் என்று நினைக்கிறார்களே தவிர, நம்முடைய விருப்பமான சேர்க்கைக்கு உடன் படுபவர்களாக தெரிய வில்லை; இவர்களுக்கு ஒரு பாடம் கற்பிக்க வேண்டும் என்று நினைக்கிறான். குருந்த மரத்தில் இருந்து தீடீரென்று இறங்கி வந்து, கரையில் மீதி உள்ள வஸ்திரங்களை எடுத்து கொண்டு ‘இன்னது செய்தான் ‘ என்று ஒருவரும் அறிய முடியாதபடி, ஆடைகளை போல இவர்களின் நெஞ்சங்களையும் சேர்த்து எடுத்துக் கொண்டு, மரத்தில் மேல் ஏறி மறைந்தான். இருக்கிற ஆடைகளை அனைவரும் பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைத்து கரைக்கு வந்தவர்கள் ஒன்றும் இல்லாதது கண்டு, அவனை துதித்து ஆடைகளை பெற வேண்டுகிறார்கள்.
இது வென் புகுந்தது இங்கு
எங்களை நீ செய்வது அறியமுடியாதபடி செய்து, ஒரு கணத்தில், இங்கு என்ன காரியம் நடந்து விட்டது, மின்னல், இல்லாமல், இடி விழுதல் போன்ற ஒரு பெரிய காரியம் அன்றோ நடந்து விட்டது, என்கிறார்கள். பரம பொருளை உபதேசம் பெற்றவனிடம் தந்தை, உணர்ச்சி அற்றவன் போல ஸ்தம்பித்து நிற்பது கண்டு கேட்டதற்கு, இந்த பகவத் விஷயத்தை பார்த்தவர்கள் பேசாமல் இருக்க முடியுமா என்று உபனிஷத்தில் வருவது போன்று திக்பிரமை அடைந்த இவர்கள், பேசுகிறார்கள். ‘பாலாழி நீ கிடக்கும் பண்பை யாம் கேட்டேயும் காலாழும் நெஞ்சு அழியும், கண் சுழலும் (பெரிய திருவந்தாதி 34) என்று சொல்லியது போல, காதினால் கேட்ட, மற்ற உறுப்புகளையும் அழிக்கும்,அந்த பகவத் விஷயத்தை கண்ட பின், கலங்கி பேசாமல் இருக்க முடியுமா என்கிறார்கள். “காமன் உடல் கொண்ட, தவத்தாற்கு உமை உணர்த்த வண்டு அலம்பும் தாரலங்கல் ஆனமையால் ஆய்ந்து “ (நான்முகன் திருவந்தாதி 78) சொல்லியது போல, பார்வதி சொல்லியவுடன் எம்பெருமான் குணங்களில் சிவனை ஈடுபடுத்திய இந்த பகவத் விஷயம், இவன் கண்ணனாய் பிறந்த போது அவனது தீம்புக்கு இலக்கானவர்கள் பேசாமல் இருக்க முடியாது அன்றோ என்கிறார்கள்.
அந்தோ இப் பொய்கைக்கு எவ்வாறு வந்தாய்
நம் நினைவு, அவன் பின் செல்வதற்கு உருப்பாகின்றதே என்கிறார்கள். ‘அவன் வருவதற்கு முன் நாம் வரவேண்டும் என்று வந்தால், அவன் இங்கு வந்து நம் ஆடைகளை அபகரிக்க நிற்கிறானே’, என்று வியப்பு அடைகிறார்கள். ‘இது போல நான் முன்பு வந்தது இல்லையா, இதில் என்ன ஆச்சரியம்’ என்கிறான். ‘இது நாம் எப்போதும் விளையாடும் பொய்கை அல்லவே, நீ எப்படி இந்த பொய்கைக்கு வந்தாய்’ என்கிறார்கள். ஆனை முதலையாலே நலிவுற்று ‘ஆதி மூலமே ‘ என்று அழைத்த பொய்கை அல்லவே இது என்கிறார்கள். பிரதிகூலனான (தீமை செய்பவனான) காளியனை அடக்க வந்தது போல, தீமை செய்பவர்கள் இல்லாமல் இருப்பதால் நீ, இங்கு வர வழி இல்லையே, உனது நண்பனான கஜேந்திரன் போல இங்கு யாரும் சிரம பட வில்லையே, இந்த பொய்கைக்கு எப்படி வந்தாய் என்கிறார்கள்.
இவர்களின் தோல்வியையும் தன் வெற்றியையும் நினைத்து தன் கர்வம் வெளிபடும்படி மேலும் வார்த்தைகளை கூறினான். அதை கேட்ட ஆய்ச்சியர்கள், இப்படியே போனால் காரியம் ஆகாது, இவன் துதி செய்தால் வசப்படுபவன், ஆகையால் துதி செய்து நம் காரியத்தை சாதித்து கொள்வோம் என்று முடிவு செய்கிறார்கள்.
மதுவின் துழாய் முடி மாலே
ஆதி ராஜ்யம் அதிகம் புவ நா நாம் ஈஸ ; தே பிஸு நயந் கில மௌலி (வரதராஜ ஸ்தவம் 25) சொல்லியபடி, உலகங்களுக்கு எல்லாம் ஈசனான வரதனே, நீ உலகங்களுக்கு எல்லாம் தலைவனாக (சக்கரவர்த்தி) இருப்பதை உன் திருஅபிஷேகமே சொல்கிறது என்பது போல, நீ சர்வ லோக சக்கரவர்த்தி என்று விளங்கும் படியாக தேன் மாறாத திருதுழாய் மாலை சூடிய கிரீடத்தை உடையவனே, நித்ய சூரிகளுக்கு காட்சி அளித்து கொண்டு, தன் மேன்மை தோற்ற பரமபதத்தில் இருப்பவனே,
மாயனே
அந்த காட்சியை இங்குள்ளவர்களும் காண வேண்டும் என்ற வாத்சலயத்தினால் கர்ம வசபட்டவர்கள் குலத்தில் திரு அவதரித்து, ஆச்சியர்களும் ஏவி காரியம் கொள்ளலாம் படி வசப்பட்டு நிற்கும் ஆச்சர்யத்தை உடையவனே என்கிறார்கள்.
எங்கள் அமுதே
பரமபதத்தில் ஞான சுருக்கம் இன்றி, இருக்கும் நித்ய முக்தர்களுக்கும் பொதுவாய் இருக்கும் அந்த நிலை போல அல்லாமல் இடக்கையும் வலக்கையும் அறியாத ஆச்சியர்கள் எங்களுக்கு உடையவன் போல வசபட்டு இருப்பவனே, எல்லையற்ற இனிமை உடையவனாய் கண்ணனாய் நிற்கும் நிலை மட்டும் இல்லாமல், திருப்பாற்கடலில் தோன்றிய உப்புச்சாறு போல இல்லாமல் எங்கள் பங்குக்கு கிடைத்த மிக இனியவனே என்று சொன்னார்கள்.
”இப்படி நீங்கள் எம் சிறப்பை அறிந்து, உங்கள் உடைமை என்று சொன்னதால் அது அழியாமல் பாதுகாத்து காரியம் செய்து கொள்ள வேண்டாமா ” என்று சொல்கிறான். அது என்ன காரியம் என்று இவர்கள் கேட்க, உங்கள் கண்களால் நன்றாக குளிர நோக்கி, நாம் சேர்ந்து இருக்கலாகாதா என்றான்.
விதி இன்மையால் அது மாட்டோம்
பெண்களுக்குறிய நாணத்தினால் ‘அது’ என்று சொல்கிறார்கள். உன் விருப்பம் எங்களுக்கு விருப்பம் இல்லை என்று கூறவில்லை, நாங்களும் விரும்புவதே. ஆனால் எங்களின் பாக்கிய குறைவினால் அதற்கு இசைய முடியவில்லை என்கிறார்கள் . அப்படியானால் நம்முடைய பாக்கிய குறைவினால் நாமும் வஸ்திரங்களை தர இயலாது என்று மேலும் உயரமான கிளைக்கு செல்கிறான். தன்னுடைய பாக்கிய குறைவு என்று இவன் சொன்னது, இவர்களுடன் சேராதது.
வித்தக பிள்ளாய் விரையேல்
‘நீ மிகவும் சமர்த்தமான இடைபிள்ளையை போல உச்சி கொம்புக்கு விரைந்து ஏறாதே. இப்போது உன்னை கண்டு களிக்கின்ற போக்கியம் பெறுகிறோம், அது போனாலும் பரவாய்யில்லை, ஆனால் உனக்கு ஏதாவது ஆனால் நாங்கள் உயிர் தரிக்க மாட்டோம், அதனால் விரைந்து ஏறாமல் வா ‘ என்கிறார்கள். இதற்கு கண்ணன் நான் விரைந்து காரியம் செய்வதை நீங்கள் கண்டதுண்டா என்று கேட்கிறான்.
குதி கொண்டு அரவில் நடித்தாய்
ஓரு நாள் பலராமன் இல்லாமல் கிருஷ்ணன் பிருந்தாவனத்திற்கு வந்தான். காளிய நாகத்தின் வாயில் விழுகையாகிற சாகசத்தை செய்தான். உயர் கொம்பில் ஏறி செல்வது ஒன்றும் ஆச்சரியம் இல்லை என்பது கருத்து. வஸ்திரங்களை குருந்த மரத்தில் கட்டி விட்டு கீழ் இறங்கி தன் கையில் ஒன்றும் இல்லை என்று காண்பித்தான்.
குருந்திடைக் கூறை பணியாய்
உன் கையில் இல்லை என்பது உண்மை. நீயே தான் உயரத்தில் இருந்து எடுத்து கொண்டு தர வேண்டும் என்று பிரார்த்திக்கிறார்கள்.
எந்த இடத்தில் உள்ள எந்த பலன் ஆனாலும், இவன் திருவுள்ளம் உண்டால் அல்லது கிடைக்காது என்பது உள்ளர்த்தம்.
Leave a comment