திவ்ய பிரபந்தம்

Home

NT 3.1 கோழி அழைப்பதன்

நாச்சியார் திருமொழி 3.1

முதலில் இந்த மூன்றாம் பதிகம் பற்றி சில வார்த்தைகள் பார்த்த பின், இந்த பதிகத்தின் முதல் பாடலை பார்ப்போம். 

தொட்டு தைத்து நலியேல் கண்டாய் (2.8), என்று ஆச்சியர்கள் கூறும்படி, அவர்களை தொட்டு, அடுத்த படியாக, ‘எம்மை பற்றி மெய்ப் பிணக்கிட்ட‘ (2.9) என்று கூறும்படி இருவரும் இரண்டு உடம்பு என்று நிலை போய், ஓர் உடம்பு என்றே நினைக்கும்படி இருவருக்கும் ஸம்சேலேஷம் நடந்தது. இப்படி கூடலாகிற நடந்த ஸம்சேலேஷம், குயவன் பானையின் இரண்டு பாகங்களை தனிதனியே செய்து சிறிது காய வைத்து பின்பு ஒன்று சேர்ப்பது போல, இவர்களையும் சிறிது பிரிவாலே காய வைத்து மறுபடி கூட்டாமல், எப்போதும் கூடினபடியே, இருந்தால் ஆனந்தம் தலைக்கு ஏறி, நாயக நாயகி இருவரும் அழிந்து விடுவார்கள் என்னும் நினைவாலே இவர்களுடைய உறவினர்கள் ‘பெண்களுக்கு இந்த நிலை வராமல் இருக்க என்ன வழி ‘ என்று ஆராய்ந்து கண்ணனிடம் இருந்து இவர்களை பிரிப்பதற்காக இவர்களை கொண்டு போய் நிலவறைகளில் அடைத்து விட்டார்கள். அவர்களும் பிரிய மாட்டாமல்,

உபவாஸகரிஷாஂ தீநாஂ நிஷ்ஷ்வஸந்தீஂ புநஃ புநஃ. ததர்ஷ ஷுக்லபக்ஷாதௌ சந்த்ரரேகாமிவாமலாம் (இராமாயணம், சுந்தர காண்டம் 15.19) 

“அழுக்கடைந்த ஆடைகளை அணிந்திருந்த அவள் (சீதா தேவி) மனமுடைந்து, உண்ணாவிரதத்தால் மெலிந்து, திரும்பத் திரும்ப பெருமூச்சு விட்டாள். பிரகாசமான பதினைந்து நாட்களின் தொடக்கத்தில் அவள் பிறை நிலவைப் போல மெல்லியதாகவும் வெளிர் நிறமாகவும் தோன்றிய தேவையை ஹனுமான் பார்த்தான்”, என்பது போல சீதா பிராட்டியின் ஆற்றாமை முழுவதையும் உடையவர்களாய் இவர்கள் ஆனார்கள். கண்ணனும்,

ந மாஂஸஂ ராகவோ புஙக்தே ந சாபி மது ஸேவதே * வந்யஂ ஸுவிஹிதஂ நித்யஂ பக்தமஷ்நாதி பஞ்சமம்৷৷ இராமாயணம், சுந்தர காண்டம் 36.41)

நைவ தஂஷாந்ந மஷகாந்ந கீடாந்ந ஸரீஸரிபாந். * ராகவோ பநயேத் காத்ராத் த்வத்கதேநாந்தராத்மநா৷৷ (இராமாயணம், சுந்தர 36.42)

“இராமன் இறைச்சி சாப்பிடுவதில்லை, மது அருந்துவதில்லை. காட்டில் கிடைக்கும் (துறவிக்கு அனுமதிக்கப்பட்ட) உணவில் ஐந்தில் ஒரு பகுதியை மட்டுமே எடுத்துக்கொள்கிறான். நீ சென்றதில் இருந்து, இராமன் எப்போதும் உன்னைப் பற்றி உண்மையாகவே நினைத்துக் கொண்டு இருக்கிறான், இனி ஈக்களையோ, கொசுக்களையோ, பூச்சிகளையோ, பாம்புகளையோ தன் உடலில் இருந்து விரட்டுவதில்லை (அவரது மனம் முழுவதுமாக உன் மீது நிலைத்திருந்தது).’ என்று சொல்கிறபடி, இப்படி இருந்ததிற்காக காரணத்தை, உன்னிடம் ஈடுபட்டு இருக்கும் திருவுள்ளத்தை உடையவர் என்று அனுமான் காட்டினான். ஒருவர் உடம்பில் மற்றொருவர் நுழைந்து இருக்கும் போது, தன் உடம்பில் உணர்ச்சி இல்லாதது போல இருப்பது, நாயகியிடம் நெஞ்சை பறிகொடுத்த நாயகனுக்கு தன் உடம்பில் எதையும் உணர முடியாதது அன்றோ. நாயகி ஒரு பொழுது உறங்கவில்லை, என்பதை, இவனும் ஒரு கணமும் தூங்காமல் இருக்கிறான். இது,

‘அநித்ரஸ்ஸததஂ ராமஸ்ஸுப்தோபி ச நரோத்தமஃ. * ஸீதேதி மதுராஂ வாணீஂ வ்யாஹரந்ப்ரதிபுத்யதே৷৷ (இராமாயணம், சுந்தர காண்டம் 36.44)

சீதையை பிரிந்த ராமன் எப்போதும் தூக்கமற்றவராகவே இருக்கிறார். நரசரேஷ்டனான ஸ்ரீ ராமன், அவர் தூங்கினாலும், ‘சீதே ‘ என்னும் அழகிய சொல்லை சொல்லிக்கொண்டே கண் விழிக்கிறார் என்பது போல உள்ளது என்கிறார்.

இவள்,

ஜீவிதஂ தாரயிஷ்யாமி மாஸஂ தஷரதாத்மஜ. * ஊர்த்வஂ மாஸாந்ந ஜீவேயஂ ஸத்யேநாஹஂ ப்ரவீமி தே ৷৷ (இராமாயணம் சுந்தர காண்டம் 38.67) 

“ஒரு மாதம் மட்டும் உயிரை பிடிச்சுக்கிட்டே இருப்பேன், அப்புறம் நான் பிழைக்க மாட்டேன். சத்தியமா சத்தியமா சொல்றேன். இதை நீ ராமனிடம் சொல்லலாம்.’ என்று சீதா பிராட்டி சொன்னாள். அவன்,

சிரஂ ஜீவதி வைதேஹீ யதி மாஸஂ தரிஷ்யதி. * க்ஷணஂ ஸௌம்ய ந ஜீவேயஂ விநா தாமஸிதேக்ஷணாம் (ராமாயணம், சுந்தர காண்டம் 5.66.10)

சீதை ஒரு மாதம் உயிர் தரிப்பாளானால், வெகு காலம் உயிருடன் இருக்கிறாள் ஆகிறாள்; கறுத்த கண்களை உடைய அவளை விட்டு ஒரு கண நேரம் கூட பிரிந்து உயிர் பிழைத்து இருக்க மாட்டேன் என்று இராமன் சொன்னது போல, இவளை பிரிந்து ஜீவிக்க முடியாத தன்மை உடையவன் ஆகிறான். 

இப்படி ஆச்சியர்க்கும் கண்ணனுக்கும் பிரிவாற்றாமை கரை புரண்டு ஓடி கொண்டு இருந்தது. இதனை பார்த்த தந்தைமார்களும் தாய்மார்களும். இவர்களை தடுத்து விட்டால், அவர்களை இழந்து விடுவோம் என்றும், இப்படியே விட்டால் அதுவும் அவர்களுக்கு அதிக இடம் கொடுத்ததாகி விடும் என்று கவலை உற்று, தங்களுடைய பெண்கள், தாங்கள் விரும்பும் கணவன்மார்களை அடைவதற்காக பனி நீராடல் என்ற சடங்கிற்கு அனுமதி அளிப்பது என்று முடிவிற்கு வருகிறார்கள். இதனை அறிந்த கண்ணன், தானும் அவர்களோடு செல்வதை பற்றி நினத்து பாரித்து இருந்தான்.

ஆனால் ஆச்சியர்களோ இவனை பிரிந்து இருப்பது நம்மால் முடியாத காரியம், இப்படி சேர்ந்து இருப்பதும் பிறகு பிரிவதும் மிகவும் கடினமான காரியமாக உள்ளது; இப்படி துன்பப்படுவதை காட்டிலும் விரக தாபம் தீர்க்கும் நீராடல் சிறந்தது என்று எண்ணி, வழக்கமாக செல்லும் பொய்கைக்கு சென்றால் கண்ணனும் அங்கு வந்து விடுவான் என்று புதிய பொய்கையை தேட ஆரம்பிக்கிறார்கள். கூட்டமாக சென்றால் அவன் கண்டு பிடித்து விடுவான், தனியே செல்ல வேண்டும், அதுவும் அடிசுவடுகளையும் அழித்து கொண்டு செல்ல வேண்டும் என்கிறார்கள்.

திருவாய்மொழியில் 2.7.6 ல் சொல்வது போல, எதிர்சூழல் புக்கு எனைத்தோர் பிறப்பும் எனக்கே அருள்கள் செய்ய, இவர்களை பெறுவதற்கு வெகு காலமாக எதிர் சூழல் புக்கு திரியும் அவனும் இதை அறிவான். வனவாசத்தின் போது இராமனை பின்தொடர்ந்த வந்த அயோத்யா மக்களை, தேரை வழி மாதிரி ஓட செய்தது போல ஏமாற்றி, அடிசுவடை அழித்து இந்த கண்ணனை ஏமாற்ற முடியாதே.

ததோ ராவண நீதாயாஃ ஸீதாயாஃ ஷத்ருகர்ஷநஃ. * இயேஷ பதமந்வேஷ்டுஂ சாரணாசரிதே பதி৷৷(இராமாயணம் சுந்தர காண்டம் 1.1)

எதிரிகளை நசுக்கிய ஹனுமான், ராவணனால் கடத்தப்பட்ட சீதையின் இருப்பிடத்தைக் கண்டுபிடிக்கத் தீர்மானித்தார். அவர் சாரணர்கள் நடமாடும் வான்வழியைப் பின்பற்றினார் என்று சொல்லப் பட்ட ஹனுமனை போல இந்த ஆச்சியர்களை கண்ணன் பின்பற்றினான். 

இருளென்ன மாமேனி (இருள்தானே ஒரு வடிவு கொண்டாற் போலிருக்கிற விலக்ஷணமான திருமேனியையுடைய ) (பெரிய திருவந்தாதி, 26) என்கிறபடி இருளை ஒத்த திருமேனியை உடையவனாகையால், ஒரு பொருளை தொடர்ந்து நிழல் செல்வது போல, இவர்களுடைய நிழலில் ஒதுங்கி போய், இவர்களுக்கு முன்னே அங்கே சென்று கரையில் ஒளிந்து கொண்டான். இடைபெண்கள் ஆகையால், ஆடைகளையும் ஆபரணங்களையும் கரையில் வைத்து விட்டு நீராட சென்றார்கள். கண்ணன் அவற்றை வாரி சுருட்டிக்கொண்டு, கரையில் இருந்த ஒரு குருந்த மரத்தில் ஏறி ஒளிந்து கொண்டான். குளித்து கரைக்கு திரும்பிய இவர்கள், தங்கள் உடைமைகள் காணாதது கண்டு, எங்கே போயிற்றோ, வானம் அபகரித்ததோ, இந்த குளமே கொண்டு சென்றதோ, கண்ணன் எடுத்து கொண்டானோ என்று கலங்கி, இராமாயணம், சுந்தர காண்டம், (34-23) ல் கூறியபடி,

கிந்நு ஸ்யாசித்தமோஹோயஂ பவேத்வாதகதிஸ்த்வியம்৷৷ * உந்மாதஜோ விகாரோ வா ஸ்யாதியஂ மரிகதரிஷ்ணிகா.

(“இது என் மனதின் மாயையாகவோ அல்லது மன சமநிலை இன்மையாகவோ முடியுமா, இது வாயுவின் சேஷ்டையா, இது என் பைத்தியக் காரத்தனத்தால் பிறந்த நோயா, அல்லது இது ஒரு கானல் நீரா, மாயையா ) என்று அனுமன் சீதா பிராட்டி முன் நின்று வார்த்தைகள் சொல்லி கொண்டு இருந்த போதும், இந்த உலகத்தில் இது போல நடக்குமா, என்று ஐயமுற்று, பின் தெளிவு அடைந்தது போல, கண்ணனை குருந்த மரத்தின் மேல் கண்டார்கள். இவன் நம் முந்தானையை பிடித்து இங்கு வந்து நம் ஆடை ஆபரணங்களை பறித்தான், இவனை இப்படி பழி வாங்குவது என்று பலரும், பலவிதமாக யோசித்து, யாசித்து, துதித்து, வாழ்த்தி, கோபித்து என்று பல விதமாக நடந்துகொண்டு, அவனை பெற்ற தாயையும் கோபிக்கலானார்கள். இந்த ஆற்றாமைகளை கூறி, பலவழிகளில் அவனை நயந்தனர், அவனும் ஆடை ஆபரணங்களை அவர்களுக்கு அளித்து அவர்களுடன் கூடி மகிழ்ந்தான் என்று இந்த பதிகம் முடிகிறது. இனி இந்த பாசுரம் பற்றி,

திருவனந்தாழ்வானின் படுக்கை மேல், திருக்கண் வளர்ந்து அருளுபவனே, குளத்தில் மூழ்கி, நீராடுவதற்காக கோழி கூவதற்கு முன்பே இவ்விடம் வந்தோம். இப்போது என்றால் செல்வத்தை உடையவனான சூரியன் உதித்தான். நாங்கள் உன்னால் மிகவும் துன்பட்டோம்; இனி மேல் என்றைக்குமே இந்த பொய்கைக்கு வருவதில்லை; தோழியும் நானுமாக உன்னை கும்பிடிக்கின்றோம் ; எங்களுடைய சேலைகளை தந்தருள வேண்டும்.

தாங்கள் படும் கஷ்டங்களை கூறி, கை தொழுது வஸ்திரங்களை தரும்படி யாசிக்கிறார்கள்.

கோழி அழைப்பதன் முன்னம் குடைந்து நீராடுவான் போந்தோம்

இவர்களுடன் சேர்ந்து இருந்த காலங்களில், முன் இரவு வரை இவர்களுடன் கூடி இருந்து, விடியற்காலையில் தூங்குவது வழக்கம் ஆவதால், கண்ணன் உறங்கி கொண்டு இருப்பான் என்று நினைத்து கோழி கூவதற்கு முன்னர் நீராட வந்தோம், இப்படி நாம் தூங்கி இருக்கும் போது, நமக்கு தெரியாமல், நீங்கள் புறப்பட்டு வந்தது எதற்காக என்று கண்ணன் திருவுள்ளமாக, அதற்கு இவர்கள்

அத்யந்தஸுகஸஂவரித்தஸ்ஸுகுமாரஸ்ஸுகோசிதஃ. * கதஂ ந்வ பரராத்ரேஷு ஸரயூமவகாஹதே৷৷ (இராமாயணம், ஆரண்ய காண்டம் 16.30).

ஆடம்பரமாக வளர்க்கப்பட்ட, மென்மையான, அனைத்து வசதிகளுக்கும் தகுதியான பரதன், சரயு நதியில் குளிர்காலையில் நீராடுவது எப்படி என்று சொல்லபட்ட பரதன் போல, உன்னை பிரிந்த பின் விரக தாபதத்தால் ஏற்பட்ட துன்பங்களில் இருந்து விலக வேண்டும் என்ற எண்ணத்தோடு இங்கு புறப்பட்டோம், நீ வரவேண்டும் என்ற எண்ணத்தோடு புறப்படவில்லை என்று சொன்னார்கள். அப்படியானால் இப்போது சுனையாடல் என்னும் சுனை நீராடிய பின் சேர்க்கை என்ற கலவிக்கு புறப்படலாமே என்று கண்ணன் சொன்னான். அதற்கு அவர்கள் சூரியன் உதித்து விட்டான் என்று சொன்னார்கள். 

ஆழி என்பது கடல் என்ற பொருளில் வருவதால், கடலில் இருந்து எழுந்து வரும் சூரியனை குறிக்கும். கடலிலே மூழ்கி எழுந்திருப்பவர்களை போல இருப்பதால் சூரியன் எனலாம். ஆழி என்பது வட்ட வடிவான சூரிய மண்டலத்தை குறிப்பதாக கொள்ளலாம். ஆழி என்பது தேர் சக்கரத்தை குறிப்பதாக கொண்டு, ஒற்றை தேர் சக்கரத்தை கொண்ட சூரியனை சொல்வதாக கொள்ளலாம். (தனி ஆழ் தேர் என்ற சிறிய திருமடல் வரிகள் நினைவில் கொள்க). 

தேஜஸ் சதா சவித்தரு மத்ய மண்டல வர்த்தி நாராயணா என்று புராணங்களில் சொல்லியபடியும், உபநிஷத்துக்களில் சொல்வதை போலவும், புண்டரிகாக்ஷணான ஸ்ரீமன் நாராயணன் பிராட்டியோடு கூட எழுந்தருளி இருப்பவன் என்ற செல்வத்தை உடையவன். சூரியன் உதித்தால் நமக்கு நல்லது தான் என்று கண்ணன் சொல்லி, உங்கள் அங்கங்கள், முகம் இவற்றை நன்றாக ரசிக்கலாம் என்கிறான். மேலும், சூரியன் உதயம் செய்த பின் வந்தது எதற்காக என்று திருவுள்ளமாக, அவர்கள் அரவணை மேல் பள்ளி கொண்டாய் என்கிறார்கள்.

அரவணை மேல் பள்ளி கொண்டாய்

ஆதிசேஷன் மேல் பள்ளிக் கொண்டு இருப்பது மெய் என்று எண்ணி, நீ இங்கு வந்து இருப்பாய் என்று நினைக்கவில்லை என்று இங்கு வந்தோம் என்கிறார்கள். ”வினதை சிறுவன் சிறகென்னும் மேலாப் பின்கீழ் வருவானை” (நாச்சியார் திருமொழி 14.3) ல் சொன்னபடி, இந்த அவதாரம், பரத்வம் கலந்த மனிதன் என்று அறிந்தது போல, இங்கே இவன் ஆதிசேஷன் மேல் பள்ளி கொண்டு இருப்பவன் என்று தெரிந்து பாடுகிறாள். அதே போல ‘பாற்கடலுள் பைய துயின்ற ‘ என்று திருப்பாவை (2) யில் சொன்னது பாற்கடலில் இருந்தவந்த கண்ணன் என்பதும் இதற்கு பொருந்தும். திருப்பாற்கடலில் இருந்து இப்படி எல்லோரையும் ரக்ஷிக்கும் நீ, எங்களையும் காப்பாய் என்று நம்பி இருந்தோம், எங்களை இப்படி ஹிம்சிக்கிறாயே என்று கருத்து. படுக்கையின் மென்மை முதலான குணங்களால், நீ உணராமல் உறங்கிகொண்டு இருப்பாய், என்று நினைத்து ஏமாந்தோம் என்று கருத்து. 

ஏழைமை ஆற்றவும் பட்டோம்  என்பதில் ஆற்றவும் என்றது, ‘நாங்கள் பல நாள் ரோஷத்தினால் படுத்தின பாட்டையெல்லாம் நீ ஒரே கணத்தில் எங்களை படுத்தி விட்டாய்’ என்கிறார்கள்.

மனிதனால் செய்யபட்ட பாவ புண்ணியங்களின் பலனை அந்த ஆத்மாக்கள் அனுபவித்தே ஆக வேண்டும், நூறு கோடி கல்பங்கள் ஆனாலும், கர்மம் அனுபவிக்காமல் கழியாது என்று சொல்வது போல் இதற்கு நீங்கள் என்ன பரிகாரம் செய்ய போகிறீர்கள் என்று எம்பெருமான் திருவுள்ளம் கொள்ள அதற்கு அவர்கள் சொன்னது இனி என்றும் பொய்கைக்கு வாரோம் என்று சொல்வதை பற்றி பார்ப்போம்.

இனி என்றும் பொய்கைக்கு வாரோம்

இனி பொய்கைகக்கு வரமாட்டோம், அதனால் இனி அவமான பட மாட்டோம், என்று சொல்ல, கண்ணன், ‘இப்படி வர மாட்டோம் என்று சொல்லி வருவது தானே உங்கள் வழக்கம் ‘ என்கிறார். ஒருவேளை இவர்கள் வராவிட்டால், என்ன செய்வது என்று ‘அடியவர்களையும் ஈஸ்வரனையும் சேர்த்து விடுவதற்கு அஞ்சலி என்ற கை கண்ட மருந்து உள்ளது என்று திருவுள்ளம் கொண்டு ‘வருவது வராமல் இருப்பது என்ற எதிர்கால செயல்களை பின்னால் பார்த்து கொள்ளலாம், இப்போது என்னிடம் சொல்லாமல் இங்கு வந்ததற்கு அஞ்சலி செய்யுங்கள் என்று கேட்டார். அஞ்சலி செய்தால் இவன் துகிலினை கொடுத்து விடுவான் என்று நம்பி ஒரு கையால் அவனை அஞ்சலி செய்ய, அவன், ‘ஒரு கையால் அஞ்சலி செய்வது பாவம், இரண்டு கைகளால் அஞ்சலி செய்ய வேண்டும்’ என்று கண்ணன் சொல்ல, அவர்கள் தோழியும் நானும் தொழுதோம் என்று தோழி ஒரு கையும் தான் ஒரு கையுமாக சேர்ந்து அஞ்சலி செய்தார்கள். இது போதாது, நீங்கள் நான்கு கைகளாலும் சேர்ந்து அஞ்சலி செலுத்த வேண்டும் என்றார். அதையும் செய்தார்கள். இப்படி ஸ்த்ரீ அபிமானத்தை விட்டு தொழுதும் இரக்கமற்றவனாக, ‘இரக்கம் உள்ளவர்கள் விஷயத்தில் மட்டுமே அஞ்சலி பலிக்கும்’, என்றும் ‘நம் இஷ்டம் நிறைவினால் தான் இரக்கம் காட்டி துகிலை கொடுப்போம்’ என்றும் சொல்கிறான்.

தோழியும் நானும் தொழுதோம் துகிலைப் பணித் ருளாயே

இப்போது உன் ரோஷத்தை காட்டாதே, அஞ்சலி தன் பலத்தை கொடுத்து தானே தீரும். திருநாமத்திற்கு பலமாக புடவை சுரந்தது போல, அஞ்சலிக்கு பலம் கொடுப்பதற்காகவது நீ அருள் புரிந்தே ஆக வேண்டும். வெகு சீக்கிரமாக எம்பெருமானை உகப்பிக்கும் அஞ்சலி மேலான அடையாளம் என்று சொல்வது போல நீ எங்களுக்கு வஸ்திரம் தந்தருள வேண்டும் என்று வேண்டுகிறார்கள்.

Leave a comment