திவ்ய பிரபந்தம்

Home

NT 2.7 பேதம் நன்கு

நாச்சியார் திருமொழி 2.7

உன் பேச்சின் வாசியை நன்றாக அறிய வல்லவரோடு இப்பேச்சுகளை பேசினால் மிகவும் போக்கியமாக இருக்கும். எவ்வகையான பொருளையும் அறிய மாட்டாத சிறு பெண்களான எங்களை துன்புறுத்துவதனால் என்ன பயன். திரை கிளப்பத்தை உடைய பெரிய கடலை ஒத்த திரு நிறத்தை உடையவனே, கண்ணா, கடலில் திரு அணையை கட்டியவனே, உங்கள் பத்தினிகள் மேல் ஆணை, எங்களை சிற்றிலை அழிக்காதே என்கிறார்கள்.

ஒரு பெண்ணுக்காக அணையை கட்டியவனே, எங்கள் சிற்றிலை அழிக்காதே என்கிறார்கள்.

பேத நன்கறிவார்களோடு இவை பேசினால் பெரிது இன்சுவை

இரு பொருள் படும்படி, கண்ணன் சில வார்த்தைகளை பேசினான். வெளிபடையாக ஒரு பொருளும், மர்மம் அறிந்தவர்களுக்கு புரியும்படி இன்னோரு பொருளும் இருக்கும். இதனை அறிந்தவர்களோடு பேசினால், பலன் உண்டு, எங்களிடம் சொல்லி என்ன பலன் என்று கேட்கிறார்கள். இதை புரிந்தவர்களிடம் பேசினால் அவர்கள் சொல்லும் பதில் இன்னும் சுவையாக உனக்கு இருக்கும் .

யாதும் ஓன்று அறியாத பிள்ளைகளோமை நீ நலிந்து என் பயன்

எங்களிடம் பேசியதால் என்ன பலன் என்கிறார்கள். இதனால் இவர்கள் நலிவு அடைவது தான் மிச்சம். இப்படி நலிவு அடைவதால், உலையில் இட்டு காய்ச்சி எடுத்து வைத்த பொன், ஒளி விஞ்சுவது போல், இரு மடங்கு ஒளி உள்ளவன் ஆனான். 

ஓத மா கடல் வண்ணா

திரை கிளர்த்ததியை உடைய பெரிய கடல் போன்ற நிறத்தை உடையவனே, என்று அவன் வடிவிலே ஈடுபட ஆரம்பிக்கிறார்கள். நம் வடிவிலே ஈடுபட்டவர்கள், இனி நம்மை தடுக்க மாட்டார்கள் என்று சிற்றிலை அழிக்க ஆரம்பித்தான்.

உன் மணவாட்டிமாரொடு சூழறும்

உனக்கு இனியவர்களான உன் பத்தினிகள் மேல் ஆணை, இந்த சிற்றிலை அழிக்காதே என்கிறார்கள். சேது பாலம் கட்டினாய் என்று சொல்வதில் இருந்து இராமர் பற்றி சொல்லபட்டது. ஆனால், இங்கே மணவாட்டிமாரோடு என்று பன்மையில் சொல்வது, ஒரே மனைவியை கொண்ட ஸ்ரீ ராமனைப் பற்றியும் ஒரே இடத்தில் சொல்வது ஒரு முரணாக தெரிகிறது. கண்ணன் தொடர்ந்து சிற்றிலை அழிக்க தொடங்க, அவர்கள், சேது பந்தம் திருத்தினாய் என்று சொல்லி, பிறப்பிலேயே வீரத்தை கொண்ட ஷத்திரிய குலத்தில் பிறந்தவனாகவும், பருவம் நிரம்பிய பின், “கான எண்கும் குரங்கும் முசுவும் படையா, (பெரிய திருமொழி 6.10.6)” என்றபடி, கரடி, குரங்கும், கல்லையும் மண்ணையும் கொண்டு கடலில் அணை கட்டுவதற்கு பட்ட பாடு உனக்கு தெரியும். நாங்கள் இந்த சிற்றிலை கட்டுவதற்கும் அதே அளவு பாடு பட்டு உள்ளோம் என்கிறார்கள். அதனால் இதை அழிக்காதே என்கிறார்கள்.

Leave a comment