முற்று இலாத பிள்ளைகளோம் முலை போந்திலா தோமை நாள் தொறும் * சிற்றில் மேல் இட்டுக் கொண்டு நீ சிறிது உண்டு திண்ணென நாம் அது * கற்றிலோம், கடலை அடைத்து அரக்கர் குலங்களை முற்றவும் * செற்று இலங்கையைப் பூசல் ஆக்கிய சேவகா ! எம்மை வாதியேல்.
நாச்சியார் திருமொழி 2.6
சேது பாலம் கட்டி, ராக்ஷஸர் குலத்தில் உள்ள அனைவரையும் களைத்து ஒழித்து, இலங்கையை யுத்த பூமியை வீரப்பாடு உடையவனே, முற்றாத இளம் பிள்ளைகளாய் முலையும் கிளற பெறாத எங்களை நாள் தோறும், சிற்றில் என்று ஒரு காரணத்தை முன்னிட்டு, நீ செய்யும் செயல்களுக்கு கருத்தொன்று உண்டு. அவற்றை நாங்கள் கற்கவில்லை; எங்களை துன்ப படுத்த வேண்டாம் என்கிறார்கள்.
சிற்றில் அழிப்பது என்று ஒரு காரணத்தை கொண்டு நீ வேறு ஒன்றை கருதுகிறாய், அதை நாங்கள் கற்கவில்லை என்கிறார்கள்.
முற்று இலாத பிள்ளைகளோம் முலை போந்திலா தோமை நாள் தொறும்
இதனை செய்தான் என்று சொல்ல முடியாதபடி சில காமுக செய்கைகளை கண்ணன் செய்ய தொடங்கினான் என்கிறார்கள். இந்த செயல்களை அறிந்து கொள்ளமுடியாத இளய பருவம் எங்களது என்கிறார்கள். அதிலும் எங்களது இந்த பருவத்திற்கு உள்ள அறிவும் இல்லாதவர்கள் நாங்கள் என்கிறார்கள். அறிவு இல்லாவிட்டாலும், காமரசத்தை அனுபவிக்க கூடிய வயதையும், உடல் வாகையும் அடையவில்லை என்கிறார்கள். ஏதோ தவறி ஒரு நாள் மட்டும் இந்த செய்கைகளை நீ செய்வது இல்லை, தினம் தோறும் செய்கிறாய்.
சிற்றில் மேல் இட்டுக் கொண்டு நீ சிறிது உண்டு
சிற்றில் அழிப்பது என்று ஒரு காரணத்தை முன்னிட்டு நீ எங்களுடன் விவாதம் செய்வது போன்ற ஒரு காரியத்தை செய்து வருகிறாய்.
திண்ணென நாம் அது கற்றிலோம்,
நாங்கள் அவற்றை கற்க வில்லை. நீ அறிந்த காம சாஸ்திரம் நாங்கள் அறியவில்லை. இதற்கு குரு குல வாசம் சென்று கற்கவும் இல்லை என்கிறார்கள். கண்ணன் நீங்கள் கற்கவில்லை என்றால் என்ன, நான் கற்று உள்ளேன் என்று அவர்களை அணைப்பது போன்ற தீம்புகளை செய்ய ஆரம்பிப்பான்.
கடலை அடைத்து அரக்கர் குலங்களை முற்றவும் , செற்று இலங்கையைப் பூசல் ஆக்கிய சேவகா
இதற்கு முன் எவராலும் அணை கட்ட முடியாத கடலில் அணை கட்டி, எவராலும் வெற்றி கொள்ள முடியாத அரக்கர் குலத்தை முழுவதும் அழித்து, இதற்கு முன் எவரும் படையெடுத்து வெற்றி கொள்ளாத இலங்கையை போர்க்களமாக்கி, ஆண்பிள்ளை தனமானவனே,
எம்மை வாதியேல்
எங்களிடம் போர் புரியாதே; எதிரிகளான ஆண்பிள்ளைகளுடன், போர் புரிய வேண்டிய நீ, அதை அன்புள்ள பெண் பிள்ளைகளாகிய எங்களிடம் செய்கிறாயே என்கிறாள். நீ அந்த செயலை செய்தது சீதா பிராட்டி என்ற பெண் பிள்ளையை காப்பாற்றுவதற்காக அன்றோ. அவளுடைய விரோதிகளை அழித்தது போல எங்களுடைய விரோதிகளையும் அழிக்கலாகாதா என்கிறார்கள். எங்களை துன்புறுத்தலாமா, எங்கள் கோஷ்டியில் சேர்ந்த அவளோடு போர் புரிவது போன்று அல்லவோ இருக்கிறது என்கிறார்கள்.
Leave a comment