வெள்ளை நுண் மணல் கொண்டு சிற்றில் விசித்திரப்பட வீதிவாய்த் * தெள்ளி நாங்கள் இழைத்த கோலம் அழித்தியாகிலும் உன்றன் மேல் * உள்ளம் ஓடி உருகல் அல்லால் உரோடம் ஓன்றும் இலோங்கண்டாய் * கள்ள மாதவா கேசவா உன் முகத்தன கண்கள் அல்லவே
நாச்சியார் திருமொழி 2.5
கபட செய்கைகளை செய்பவனே, கண்ணனே, கேசவனே நாங்கள் வெண்மை நிறம் கொண்ட சிறிய மணல்களை கொண்டு தெருவிலே எல்லோரும் ஆச்சரியப்படும் படி, தெளித்து, இழைத்த, சிறு வீடு போன்ற கோலங்களை நீ அழித்தாலும் அதற்காக எங்களுடைய நெஞ்சங்களானது உடைந்து உருகுமே தவிர, உன் மேலே ஒரு சிறிதும் கோபம் இல்லை. உன் முகத்தில் உள்ளவை, கண்கள் அன்றோ.
எங்கள் சிற்றிலை நீ அழித்தாலும், எங்களுடைய நெஞ்சம் உன்னிடத்திலே ஈடுபடுகிறது என்கிறார்கள்.
வெள்ளை நுண் மணல் கொண்டு
நிலவை பரப்பினாற் போல வெளுத்ததாய், நுண்ணிய மணலை கொண்டு தெளித்து, பருக்கைகல் இருந்தால் காலில் குத்தும் என்று கோபித்து கொண்டு போய்விடும், தாழ்ந்த குணத்தை உடைய தேவதையான காமதேவன் இருப்பதால், ஆராய்ந்து நுண்ணிய மணலை தெளித்து சிற்றில் இழைக்கிறார்கள்.
சிற்றில் விசித்திரப்பட
விசித்திரமான ஸ்ருஷ்டி போன்ற செயல்களை செய்யவல்லவன் நீ மட்டும் என்று எண்ணிவிடாதே என்று கண்ணனை பற்றி சொல்கிறார்கள்.
வீதிவாய்த் தெள்ளி நாங்கள் இழைத்த கோலம் அழித்தியாகிலும் உன்றன் மேல்
‘தெருவில் நாங்கள் இழைத்த அழகிய சிற்றிலை நீ அழித்தாலும், அதன் அழகினை பார்த்தாயா, இதை கண்ணால் பார்த்தால் யாரும் அழிக்க மாட்டார்கள், நீ கண்ணால் பார்த்து விட்டு அழி’ என்கிறார்கள். ‘உண்மையில் கல் நெஞ்சம் கொண்ட நீ கூட அழிக்க மாட்டாய்’ என்பது கருத்து. ’இதற்கு பிறகும் நான் அழித்தால் என்ன செய்வீர்கள்’ என்று எம்பெருமான் திருவுள்ளமாக, ‘நீ சிற்றிலை அழிக்கும் அழகை ரசித்து நெஞ்சு அழிந்து, உருகி போவோமே ஒழிய உன் மேல் கோபம் வராது’ என்கிறார்கள்.
கள்ள மாதவா கேசவா உன் முகத்தன கண்கள் அல்லவே
இப்படி சொல்லியது, உண்மையில் இவர்களுக்கு ரோஷம் என்ற கோபம் கிடையாதோ, இவன் படுத்தும் பாட்டை கண்டு நெஞ்சு எரியும் போது அதனை மறைத்து ஒப்புக்கு வார்த்தை சொல்கிறார்கள் என்று கண்ணன் திருவுள்ளமாக, அவர்கள் சிற்றிலை அழித்து விடுவது என்ற தன் எண்ணத்தில் உறுதியாக இருந்து, அந்த உறுதியும், வெளியில் தெரியாதபடி மறைத்து, பெரிய பிராட்டியாரின் நாதன் என்ற கர்வம் தோன்ற, அங்கும் இங்கும் நடந்து, தன் கேசத்தை திருத்துவது போல நடித்தும் செய்வது போல ஆரம்பித்தான். இதைகண்டும் அழிக்கிறாயே, உன் முகத்தில் இருப்பது கண்கள் தானோ என்கிறார். மாலைக்கண் போலவும், பிலி கண் போன்ற மயில் கண் போன்ற பயன் அற்றதோ என்கிறார்கள். கண் என்று பெயர் மட்டும் போலும், கண்டவர்களை மயக்கி விழ வைக்கும் வலை போல அன்றோ இருக்கிறது. இப்படி எல்லாம் கள்ளத்தனமாக உள்ளது. ’கண் என்றும் பெரும் கயிறு‘ (14.4) என்று பின்னால் சொல்ல போகிறாள் அன்றோ என்று சொல்லி முடிக்கிறார்.
Leave a comment