திவ்ய பிரபந்தம்

Home

NT 2.4 பெய்யும் மாமுகில்

நாச்சியார் திருமொழி 2.4

பெய்யும் கறுத்த மேகம் போன்ற திருநிறத்தை உடையவனே, உன்னுடைய தாழ்ந்த பேச்சுக்களும், தாழ்ந்த செயல்களும் அபலைகளான எங்களை பைத்தியம் பிடிக்க வைத்து, அறிவு கெடுக்கைக்கு உன்னுடைய முகம் சொக்கு பொடியோ, செந்தாமரை மலர் போன்ற திருக்கண்ணினை உடையவனே, பிறர் சொல்வதற்கு பயந்து நீ வருந்தும்படி சொல்லவில்லை; எங்கள் சிற்றிலை அழிக்காதே என்று சொல்லும் பாடல்;

உன் முகமாகிற சொக்கு பொடியை போட்டு, எங்களை மயக்கி எங்கள் சிற்றிலை அழிக்காதே என்கிறார்கள்.

பெய்யும் மாமுகில் போல் வண்ணா

மழை பொழியும் கார்கால மேகமானது மின்னி முழங்கி, இந்திரன் வில்லுடன் செல்வது போல இருக்கிறது. நீ உன்னுடைய கறுத்த கண்டார் களைப்பை ஆற்றும் திருமேனியில் திரு ஆபரணங்களை சாற்றி கொண்டு, பெண்கள் முன்னே சஞ்சரிப்பது, இவர்கள் தன்னுடைய வடிவழகிற்கு தோற்று, தங்கள் ஈடுபாடு விளங்கும் படி இப்படி வார்த்தை சொன்னவுடன், அதையே பற்றி கொண்டு, தாழ்த்தி சொல்வதும், வேறு சில தாழ்ந்த செயல்களை செய்தான்.

உன்றன் பேச்சும் செய்கையும் எங்களை மையலேற்றி மயக்க உன் முகம் மாய மந்திரம் தான் கொலோ

அவைகளில் ஈடுபட்ட பெண்கள், ‘அறிவு மழுங்க பண்ணுகிறாய், அதற்கு காரணமான உன் முகம் அம்மான் பொடியோ (பிள்ளை பிடிப்பவன் உபயோகிக்கும் பொடி)’ என்கிறார்கள். ’என்ன பொடியாக இருந்தால் என்ன, இந்த முக அழகில் அகப்பட்டு கொண்ட நீங்கள் என்ன செய்ய முடியும்’ என்று கண்ணன் கேட்பதற்கு, ‘நாங்கள் ஒரு வார்த்தை சொல்லி உன்னை வெளியிலே தலை காட்ட முடியாதபடி செய்து விடுவோம்’ என்று சொன்னார்கள்.

நொய்யர் பிள்ளைகள் என்பதற்கு உன்னை நோவ நாங்கள் உரைக்கிலோம்

பாலனான கண்ணன் இவர்களை விட்டு உயிர் தரிக்க முடியாமல், இவர்கள் கூட்டத்தில் புக தொடங்கிய போது, ‘புகுந்து விட்டு போகட்டும்’ என்று இருந்த போது, இவர்கள் மட்டும் இவனை விலக்கினால், இவன் இவர்களை படுத்தும் பாடு அறியாத ஊரார்கள் இவர்களை அபவாதம் சொல்வார்கள் என்ற ஒரே காரணத்தால் அந்த ஒரு வார்த்தையை சொல்லாமல் இருக்கிறோம் என்றார்கள். இப்படி சொன்னாலும், இவன் மேல் உள்ள அன்பினால் தான் சொல்லவில்லை என்பது தான் உண்மை. இதை அறிந்த கண்ணன் சிற்றிலை அழிக்க தொடங்கியதால், அவர்கள் கீழ்கண்டவாறு கூறுகிறார்கள்.

செய்ய தாமரைக் கண்ணினாய் எங்கள் சிற்றில் வந்து சிதையேலே

‘உன் கண்ணாலே, நாங்கள் காமனுக்கு சிற்றிலை இழைப்பதில் இருக்கும் உறுதியை குலைத்து விடாதே; காலாலே சிற்றிலை அழித்து விடாதே என்கிறார்கள்.

Leave a comment