திவ்ய பிரபந்தம்

Home

NT 2.3 குண்டு நீருறை கோளரீ

நாச்சியார் திருமொழி 2.3

மிகுந்த ஆழம் உடைய பிரளய நீர் கடலிலே கண் வளர்ந்து அருளுபவனே, மிடுக்கை உடைய ஆண் சிங்கம் போன்றவனே, மதம் கொண்ட கஜேந்திர ஆழ்வானுக்கு வந்த நலிவை போக்கினவனே, இப்படி அடியவர்களின் துயர் தீர்த்த உன்னை, பார்த்து ஆசைப்படும் எங்களை கடைகண்களால் நோக்கி, நலியாது ஒழிய வேண்டும் என்கிறார்கள். நாங்கள் வண்டலில் உள்ள சிறிய மணல் கொண்டு, தெளித்து வளையல்கள் அணிந்த கைகளை கொண்டு கஷ்டப் பட்டோம், தெளிந்த அலைகள் உடைய பாற்கடலை படுக்கையாக உடையவனே, எங்கள் சிற்றில் வந்து அழிக்காதே என்கிறார்கள்.

சிற்றில் சிதைப்பதையும், தங்களை கடைக்கண்களால் பார்த்து நாங்கள் நலிவதையும் தடுத்து நிறுத்த வேண்டும்.

குண்டு நீருறை கோளரீ

எல்லை இல்லாத ஆழத்தை உடைய பிரளய ஜலத்திலே இவ்வுலகை படைப்பதற்காக சயனித்து இருக்கும் படைக்கப்படும் பொருட்களுக்கு ஒரு துன்பமும் வராதபடி எவராலும் வெல்ல முடியாத ஆண் சிங்கம் போன்று ரக்ஷிப்பவனே. படைத்த பின், அடியார்களுக்கு ஏற்படும் விரோதிகளை அழிக்கும் காக்கும் எல்லா இடங்களுக்கும் கஜேந்திர மோக்ஷம் உதாரணமாக கூறப்பட்டது. 

மத யானை கோள் விடுத்தாய்

கஜேந்திரன் தன்னை பற்றியன் என்பதை மட்டும் கருத்தில் கொண்டு, அது ஒரு மதம் கொண்ட யானை என்பதையோ, ஒரு விலங்கு என்பதையோ கருத்தில் கொள்ளாமல், அவனுக்கு முதலையால் வந்த துன்பத்தை போக்கியவனே, அவனுக்கு முதலையால் வந்த துன்பத்தை போக்கியது போல, எங்களுக்கு உன்னால் வந்த நலிவினை போக்க வேண்டும் என்கிறார்கள்.

உன்னைக் கண்டு மாலுறுவோங்களை

என்றும் எல்லோருக்கும் துன்பங்களை போக்கும் நீ, உன்னை கண்டு மயங்கி இருக்கும் எங்களுடைய துன்பங்களை போக்க வேண்டாமா, உன்னை காண வேண்டும் என்று ஆசையே இல்லாத பொருட்களை படைத்து, அவர்களின் துன்பங்களை போக்கி, அவர்களை காப்பாற்றுகிறாயே, எங்களை காப்பாற்ற வேண்டாமா, என்கிறார்கள்.

கடைக் கண்களால் இட்டு வாதியேல்

உன்னை கண்டு மால் உருவோங்களை என்று சொன்னவுடன் அவர்களை கண்ணன் அன்புடன் கடைகண்ணால் பார்க்கிறான். இப்படி கடைக்கண்ணால் பார்த்து சித்திரவதை செய்யாமல் முழுக்கண்ணால் பார்த்து முடித்து விடு என்கிறார்கள். இப்படி சொல்லும்படி உங்களுக்கு என்ன துன்பம் வந்து விட்டது என்று கண்ணன் கேட்பதற்கு பதில் சொல்கிறார்கள்.

வண்டல் நுண் மணல் தெள்ளி யாம் வளைக் கைகளால் சிரமப்பட்டோம்

வண்டல் உள்ள இடம் தேடி, கண்டுபிடித்து, அதில் நுண்ணிய மணலை தேர்ந்து எடுத்து அதனை கைகளால் எடுத்து தெளித்து சிரமப்பட்டோம் என்று சொல்கிறார்கள். முன்பே அபலைகள், இப்போது உன்னை பிரிந்து, வளைகள் அணிவதற்குக் கூட வலிமை இல்லாமல், நீ தொட்ட வளைகளை கழற்ற மனம் இல்லாமல், அணிந்து கொண்டு சிரம பட்டோம் என்கிறார்கள். இப்படி இவர்கள் சொன்ன பின்பும் சிற்றிலை அழிக்க முற்பட்டான்.

தெண்டிரைக் கடற் பள்ளியாய் எங்கள் சிற்றில் வந்து சிதையேலே

திருப்பாற்கடலில் நீ வந்து சயனித்து இருப்பது, நீ படைத்த இந்த உலகம் என்ற சிற்றிலை காப்பதற்கு தானே, அப்படி இருக்க நாங்கள் கட்டிய சிற்றிலை மட்டும் அழிப்பதேன் என்கிறார்கள். நீ நெருப்பும், நீரும், காற்றும் கொண்டு கட்டிய சிற்றிலை போல அல்ல நாங்கள் கட்டியது. இது நுண் மணல் கொண்டு கட்டியது. இது கைக்கொள்ள தக்கதே தவிர அழிக்க கூடியது அல்ல என்கிறார்கள். ஆகையால் நீ திருபாற்கடல் சென்று நீ கட்டிய அந்த உலகை காக்க புறப்படு என்கிறார்கள்.

Leave a comment